தேர்தல் 2019: 'பல்வாள்தேவன் அல்ல நான் பாகுபலி' - கலகல பிரசாரம்

பாகுபலி படத்தின் காப்புரிமை பாகுபலி

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி டெக்கான் கிரானிக்கல் - 'பல்வாள்தேவன் அல்ல நான் பாகுபலி'

நான் ஆந்திரப் பிரதேசத்தின் பாகுபலி என்று ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தேர்தல் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

பாகுபலி திரைப்படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரமான பல்வாள்தேவனுடன் ஒப்பிட்டு பிரதமர் நரேந்திர மோதி பேசியதற்கு பதிலடியாக அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

"நரேந்திர மோதி உண்மையைப் பேசினால் அவரது தலை 100 துண்டுகளாக சிதறிவிடும். காரணம் அவர் பொய்களை மட்டுமே பேச சபிக்கப்பட்டுள்ளார்," என்று சந்திரபாபு நாயுடு விமர்சித்துள்ளார்.


தினமணி: 'காஷ்மீருக்கு தனி பிரதமர் தேவை என்ற கருத்தில் தவறில்லை'

படத்தின் காப்புரிமை Getty Images

ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர், அதிபர் நியமிக்கப்பட வேண்டும் என்ற எனது கருத்தில் தவறேதுமில்லை என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவருமான ஒமர் அப்துல்லா தெரிவித்தார் என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"நான் எதுவும் தவறாக கூறவில்லை. உண்மை எதுவோ அதையே தெரியப்படுத்தினேன். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகும், 1965ஆம் ஆண்டு வரை தனிப் பிரதமரையும், அதிபரையும் கொண்டிருந்தது உண்மைதானே?

பிரதமராக வாஜ்பாய் பதவி வகித்த காலத்திலும் எங்களின் கட்சி நிலைப்பாடு இதுவாகவே இருந்தது. அப்போது, நான் மத்திய அமைச்சராக பதவி வகித்தேன்.

அந்தக் காலகட்டத்தில் சரியாக இருந்த ஒன்று தற்போது கூறினால் தவறாகிவிடுமா?

மாநில சுயாட்சியைத் தான் கேட்கிறோம். 1953இல் எப்படி ஜம்மு-காஷ்மீர் இருந்ததோ அதை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றார் ஒமர் அப்துல்லா.

பந்திபோராவில் கடந்த திங்கள்கிழமை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜம்மு-காஷ்மீருக்கு இருக்கும் சிறப்பு சட்டத்தின் மீது தாக்குதல் தொடுப்பதை அனுமதிக்க மாட்டோம். எங்களுக்கென்று தனியாக பிரதமர் இருக்க வேண்டும் என்றார் ஒமர் அப்துல்லா.

ஒமர் அப்துல்லாவின் கருத்துக்கு காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார். ஒமரின் கருத்தையும் அவர் விமர்சித்தார்." இவ்வாறாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


தினத்தந்தி: 'லோக் ஆயுக்தா தலைவராக நீதிபதி பி.தேவதாஸ் நியமனம் - அரசிதழ் வெளியீடு'

தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா அமைப்புக்கு தலைவராக முன்னாள் நீதிபதி பி.தேவதாஸ் மற்றும் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

"உயர் அதிகாரத்தில் உள்ளவர்களையும் விசாரிக்கக்கூடிய லோக் ஆயுக்தா என்ற அமைப்பை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று லோக் பால் சட்டம் மூலம் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா தொடர்பான சட்ட மசோதா 2018-ம் ஆண்டு ஜூலை 9-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அது குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி பாரி, முன்னாள் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அடங்கிய தேடுதல் குழு, லோக் ஆயுக்தாவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை கடந்த மார்ச் 13-ந்தேதியன்று தேர்வு செய்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், இந்த அறிவிப்பை வெளியிட இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மார்ச் 25-ந்தேதியன்று தமிழக அரசு கடிதம் எழுதியது.

அதைத் தொடர்ந்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவின் மூலம் தேர்தல் ஆணையத்தின் அனுமதி கிடைக்கப்பெற்று 1-ந்தேதியன்று அரசிதழை தமிழக அரசு வெளியிட்டது." - இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.


ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்களின் கதை

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'ஆண்டுக்கு 50 நாட்களே வேலை'

படத்தின் காப்புரிமை இந்து தமிழ்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் வேலை ஆண்டுக்கு 100 நாட்களில் இருந்து 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள நிலையில், அந்தச் சட்டத்தின்கீழ் அளிக்கப்படும் சராசரி வேலைவாய்ப்பு ஆண்டு ஒன்றுக்கு 50 நாட்களையே தாண்டவில்லை என்கிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் செய்தி.

2018-19ஆம் நிதியாண்டில் இந்தச் சட்டத்தின்கீழ் நாடு முழுதும் பதிவு செய்துள்ள குடும்பம் ஒன்றுக்கு சராசரியாக ஆண்டுக்கு 50 நாட்களே வேலை அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முந்தைய மூன்று நிதி ஆண்டுகளில் முறையே 45, 46 மற்றும் 48 நாட்கள் மட்டுமே வேலை அளிக்கப்பட்டுள்ளன என்கிறது அந்தச் செய்தி.


பத்தாயிரம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற பெண்ணின் கதை

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :