நோட்டா என்றால் என்ன? இது தேர்தலில் வெற்றி பெற முடியுமா?

தேர்தல்
படக்குறிப்பு,

கோப்புப்படம்

ஒரு தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரையும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன நடக்கும்? நீங்கள் எல்லோரையும் நிராகரித்து விடலாமா?

இதற்கு என்ன செய்யலாம்? இதனால் என்ன நடக்கும்? இது பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

நோட்டா - NOTA - ஆங்கில சொல்லின் விரிவாக்கம் None of The Above என்பதாகும். இதன் பொருள் "மேலே உள்ள எவரும் அல்ல" என்பதாகும்.

2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அளித்த ஆணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் "நோட்டா" பொத்தானை வைக்க வேண்டுமென குறிப்பிட்ப்பட்டது.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் கடைசியாக இருக்கும் பொத்தான் நோட்டா பொத்தான்தான்.

நீங்கள் செய்ய வேண்டியது, இந்த பொத்தானை அழுத்துவதுதான்.

2013ம் ஆண்டு நடைபெற்ற 5 சட்டமன்றத் தேர்தல்களில், இது முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது. ஒரு சதவீதத்திற்கு அதிகமாக வாக்காளர்கள் இதனை தெரிவு செய்திருந்தனர்.

2017ம் ஆண்டு நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், சிபிஎம், சிபிஐ, எஸ்ஏடி (அம்ரிஸ்டர்), இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் ஆப்னா பஞ்சாப் கட்சி ஆகிய ஐந்து பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பெற்ற வாக்குகளை விட அதிக வாக்குகளை நோட்டா பெற்றிருந்தது.

நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் என்ன நடக்கும்?

இதுவரை, மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகளில் நோட்டா எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஒருவேளை நோட்டா வெற்றி பெற்றால் (அதாவது வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றால்) அதற்கு அடுத்ததாக அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர் வெற்றிபெற்றவராக இருப்பார்.

ஆனால், விவாதத்திற்கு இது மிகவும் சூடான தலைப்பாகும்.

நோட்டாவைவிட குறைவாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றால் இரண்டாவது சுற்றுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எடுத்துக்காட்டாக, 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ் நாட்டிலுள்ள நீலகிரியில் அதிகபட்சமாக 46 ஆயிரத்து 559 வாக்குகள் நோட்டாவுக்கு கிடைத்திருந்தன. மொத்த வாக்குகளில் இது ஐந்து சதவீதம். வெற்றி பெற்றவருக்கும் இரண்டாவது வந்தவருக்குமான வாக்கு வித்தியாசத்தைப் போல இது நான்கு மடங்காகும்.

நோட்டோ இங்கு ஒரு வேட்பாளராக இருந்திருந்தால் மூன்றாவது இடத்தை பெற்றிருக்கும்.

பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன!

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் 2018ம் ஆண்டு நடைபெற்ற நகராட்சி தேர்தலில் 'நோட்டா' "கற்பனை வேட்பாளராக" கருதப்பட்டது.

அதன்படி, நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், மறுதேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அத்தகைய சூழ்நிலை எதுவும் நிகழவில்லை.

பின்னர் நோட்டா எதற்கு?

நோட்டா இருப்பது அமைப்பு ரீதியிலான மாற்றத்திற்கு இட்டுச்செல்லும் என்றும், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தால், அரசியல் கட்சிகள் நல்ல வேட்பாளர்களை நிறுத்தும் கட்டாயத்துக்கு உள்ளாகும் என்றும் உச்ச நீதிமன்றம் நம்புகிறது.

மேலும், யாரையும் தெரிவு செய்யாமல் இருப்பதும் இந்திய அரசியல் சாசனத்தின்படி பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டின் அடிப்படை உரிமையாகப் பார்க்கப்படுகிறது.

நோட்டா இல்லாத நாடுகளில் எப்படி?

பிரான்ஸ், ஸ்பெயின், கிரேக்கம் ஆகிய நாடுகளில் நோட்டா உண்டு.

பிரிட்டனில் நோட்டா இல்லை. ஆனால், மக்கள் தங்களின் அதிருப்பதியை காட்டுவதற்கு ஏதாவது வழியை கண்டுபிடிக்கிறார்கள்.

2010ம் ஆண்டு பிரிட்டன் தேர்தலில், போராட்ட மற்றும் பரப்புரை வடிவமாக குத்துச்சண்டை வீரர் டெர்ரி மார்ஷா "None of The Above X" என்று தனது பெயரை மாற்றிக்கொண்டு போட்டியிட்டார்.

இவர் பெற்ற வாக்குகள் எத்தனை தெரியுமா? மொத்தம் பதிவான 44 ஆயிரத்து 735 வாக்குகளில் இவர் பெற்றது 125 வாக்குகளே. இது 0.03 சதவீதமாகும்!.

ஆனால், பிரிட்டனில்கூட ஒரு கட்சிக்கு நீங்கள் "நோட்டா" என்று பெயரிட முடியாது.

இந்தியாவில், "நோட்டா" என்ற பெயரில் ஒரு கட்சி உண்டு.

நகைச்சுவை கலைஞர் சவிதா பாத்தியும், அவரது கணவர் ஜஸ்பால் பாத்தியும் 2014ம் ஆண்டு "நோட்டா கட்சி"-யை உருவாக்கினர். அது உண்மையிலேயே ஒரு நகைச்சுவையாகிவிட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :