ராகுல் ஆளுமையில் ஏற்பட்ட வளர்ச்சி, மோதியை பதவியிறக்கப் போதுமானதா?

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி படத்தின் காப்புரிமை MAIL TODAY

இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவரானபோது அவருக்கு வயது 42. சஞ்சய் காந்தி தனது முதல் தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு வயது 30.

ராஜீவ் காந்தி அரசியலில் நுழைந்தபோது, அவருக்கு 36 வயதே பூர்த்தியாகி இருந்தது. 2004-ம் ஆண்டில் ராகுல் அரசியலில் நுழைந்தபோது, அவருக்கு 34 வயதாக இருந்தாலும், இந்திய அரசியல் தரத்திற்கு முன்னால் அவர் ஒரு குழந்தையாகவே இருந்தார்.

சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், அவர் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், இன்னமும் குழந்தையாகவே கருதப்படுகிறார்.

2008-ல் ராஜ்நாத் சிங், அவரை 'சிறுவன்' என்று பெயரிட்டு, அரசியலில் இருந்து வெளியேற்ற முயன்றபோது, ராகுல் கடுமையாக எதிர்த்தார்.

"அவர் என்னை ஒரு சிறுவனாக கருதுகிறார் என்றால், அதை விரும்புகிறாரோ இல்லையோ, இந்தியாவின் மக்கள் தொகையில் 70 சதவிகிதத்தினர் அதே பிரிவில்தான் இருக்கிறார்கள்" என்றார் ராகுல்.

இந்திய அரசியலில், இளமை, இன்னமும் அறியாமையுடன் ஒப்பிடப்படுகிறது. இருப்பினும், இந்திய அரசியலை கழுகுப் பார்வையில் நோக்கும் விமர்சகர்கள், 2019-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலில் முதன்மையான பதவிக்கு போட்டியிட ராகுல் தகுதியானவர் என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

இந்திரா காந்தியின் விருப்பம்

ராகுலின் அரசியல் ஞானஸ்நானம், அவரது பாட்டி இந்திரா காந்தியைப் பார்த்தே நடைபெற்றது. 1970ம் ஆண்டு ஜூன் 19ம் தேதி பிறந்தார் ராகுல் காந்தி.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் கேத்ரீன் ஃபிரான்க் விவரிக்கையில், இந்திராகாந்தி, தன் இல்லத்தில் உள்ள புல்வெளி பகுதியில் பொதுமக்களை சந்திக்கும்போது, அவருடன், ராகுலும், பிரியங்காவும் உடன் இருப்பார்கள் என்று கூறுகிறார். இருவரையும், இரவில் தன்னுடனேயே அவர் உறங்க வைத்துக்கொள்வார் என்றும் தெரிவிக்கிறார்.

டூன், ஸ்டீபன்ஸ், ஹார்வர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜில் கல்வி

படத்தின் காப்புரிமை Getty Images

ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் சேருவதற்கு முன்னர், டூன் பள்ளியில் படித்தார்.

அதற்குப் பிறகு, அவர் அமெரிக்காவிற்குச் சென்று, அங்கு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிப்பில் சேர்ந்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, அவர், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறி, புளோரிடாவில் உள்ள வின்டர் நகரின் ஒரு கல்லூரியில், சர்வதேச உறவுகளில் பட்டம் பெற்றார்.

பின்னர் அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்தார். 1995ல், வளர்ச்சி படிப்பில் எம்.ஃபில் முடித்தார்.

அதன் ஒரு பகுதியாக, லண்டனில் உள்ள மானிட்டர் குரூப்பின் முன்னணி நிறுவனத்தில் மூன்று வருடங்கள், ஒரு புனைப்பெயரில் பணி புரிந்தார்.

அதன் விளைவாக, அவருடைய சக ஊழியர்கள், இந்திரா காந்தியின் பேரனோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும் உணரவில்லை.

அவர் 2002-ல் இந்தியாவுக்கு திரும்பி, சிலருடன் சேர்ந்து, மும்பையில், பேக் ஆப்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

2004-ம் ஆண்டின் மக்களவைத் தேர்தலின்போது, அந்நிறுவனத்தில் 83% பங்குகளை வைத்திருப்பதாக அறிவித்தார்.

குத்துச்சண்டை, படப்பிடிப்பு மற்றும் பாராகிளைடிங் ஆர்வம்

படத்தின் காப்புரிமை Getty Images

2008-ம் ஆண்டு கோடை காலத்தில், துரோணாச்சாரியா விருது பெற்ற, இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் பரத்வாஜுக்கு, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து ஓர் அழைப்பு வந்தது.

ஜன்பத் சாலை, 10ம் எண்ணிலிருந்து ஒருவர் தொடர்பு கொள்வார் என தெரிவிக்கப்பட்டது. சற்று நேரத்தில், பி. மாதவன் பரத்வாஜை தொடர்புகொண்டு, ராகுல் காந்தி அவரிடம் குத்துச்சண்டை கற்றுக் கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

பரத்வாஜ் உடனடியாக ஒப்புக்கொண்டார். ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாற்று எழுத்தாளர் ஜாதின் காந்தி எழுதுகையில், "பரத்வாஜ் தனது கட்டணத்தை பற்றி விசாரித்தபோது, அவர் வைத்த ஒரே கோரிக்கை, ஒவ்வொரு நாள் பயிற்சியின்போதும், தன்னை வீட்டிலிருந்து அழைத்து செல்ல வேண்டும் மற்றும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுவிட வேண்டும் என்பது மட்டுமே.

எண் 12, துக்ளக் லேனில், ராகுல் காந்திக்கு பரத்வாஜ் பயிற்சி அளித்தார். வாரத்திற்கு 3 நாட்கள் என்ற வீதம், சில வாரங்களுக்கு பயிற்சி சென்றது.

பெரும்பாலும், சோனியா, பிரியங்கா மற்றும் அவரது குழந்தைகள் மிரயா மற்றும் ரையன் ஆகியோர் பயிற்சியின்போது ராகுலைப் பார்க்க வருவார்கள்.

பரத்வாஜின் மாணவனாக சேர்ந்த பிறகு, அவர் தன்னை, ராகுல் சார், ராகுல் ஜீ என்று அழைப்பதை எல்லாம் ராகுல் விரும்பவில்லை. தன்னை ராகுல் என்றே அழைக்கும்படி கேட்டுக்கொண்டதாக பரத்வாஜ் நினைவு கூறுகிறார்.

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

மேலும் அவர் நினைவு கூறுகையில், தாம் தாகத்தில் தண்ணீர் கேட்டபோது, அங்கு பணியாட்கள் இருந்தபோதும், ராகுலே சென்று, தமக்கு தண்ணீர் எடுத்து வந்ததாக தெரிவிக்கிறார். ஒவ்வொரு நாள் பயிற்சி முடிந்ததும், வாயில் வரை சென்று பரத்வாஜை ராகுல் வழி அனுப்புவாராம்.

குத்துச்சண்டை தவிர, நீச்சல், ஸ்குவாஷ், பாராகிளைடிங், படப்பிடிப்பு ஆகியவற்றிலும் ராகுல் தேர்ச்சி பெற்றார். இப்போதும் கூட, பணிச்சுமையான நேரங்களிலும், அவர், உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குகிறார்.

மும்பையில் 2011ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை, காணச்சென்று, நண்பர்களுடன், நியூ யார்க்கர் உணவகத்திற்கு சென்ற ராகுல், பிஸ்ஸா, பாஸ்தா, மெக்சிகன் டஸ்டாடா ஆகியவற்றை ஆர்டர் செய்தார்.

உணவக மேலாளர், ராகுலுக்கு பில் கொடுக்க மறுப்பு தெரிவித்தபோதிலும், அவரை கட்டாயப்படுத்தி, உணவுக்கான ரூ.2223 பில் தொகையை செலுத்தினார்.

டெல்லியின் பிரபல கான் சந்தையில் உள்ள காபி கடைக்கு, தற்போதும் ராகுல் அடிக்கடி செல்கிறார். ஆந்திர பவனில் கிடைக்கும் தென்னிந்தியத் தாலியும் அவருக்கு விருப்பமானது.

மும்பை உள்ளூர் ரயிலில் பயணம்

படத்தின் காப்புரிமை HINDUSTAN TIMES

மும்பைக்கு தனிப்பட்ட பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, திடீரென்று தனது பாதுகாப்பு மற்றும் உள்ளூர் நிர்வாக குழுவினருக்கு, தாம் மும்பையின் உள்ளூர் ரயிலில், பயணியை போலவே பயணிக்க இருப்பதாக தெரிவித்தார்.

சக பயணிகளை போலவே, அவரும் ரயில் மேடையில் ரயிலுக்காக காத்திருந்தார். ரயிலுக்காக காந்திருந்தவர்களை பார்த்து அவர் கை அசைத்தார். ரயிலில் இருக்கையை சக பயணியுடன் பகிர்ந்து கொண்டதுடன், அருகிலிருந்தவர்களுடன் கை குலுக்கி உரையாடினார்.

கூட்டத்திற்கு மத்தியிலும், தனக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்தார். ரயிலில் இருந்து இறங்கிய அவர், அங்கு காத்திருந்த ஊடகவியலாளர்களிடம் பேசவில்லை. பின்னர் அருகிலிருந்த ஒரு ஏடிஎம்-க்கு சென்று, வரிசையில் நின்று பணத்தை எடுத்தார்.

தற்போதும் திருமணத்திற்கு தகுதியான ஆண்மகன்

48 வயதாகும் ராகுல் காந்தி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் திருமணம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.

விருந்தா கோபிநாத்திடம் பேசுகையில், தனது காதலியின் பெயர் வெரோனிக் என்றும், ஜுவானிடா இல்லை என்றும் முதல் முறையாக ஒப்புக்கொண்டார்.

அவள் ஸ்பானிஷ் என்றும் வெனிசுவேலா இல்லை. அவள் கட்டடக் கலை வல்லுநர் என்றும் எந்த உணவகத்திலும் பணியாளர் அல்ல என்றும், அப்படி இருந்தாலும் தமக்கு எந்த வித்தியாசமும் இல்லை என்றும் கூறினார். தனக்கு நல்ல தோழி என்று தெரிவித்தார். அதன் பிறகு, அவரது 'காதலி' பற்றிய ஊகங்கள் தொடர்ந்தாலும், உறுதியான தகவல் இல்லை.

'பப்பு' பெயர் பின்தொடர்ந்தது

படத்தின் காப்புரிமை MOHD ZAKIR/HINDUSTAN TIMES VIA GETTY IMAGES

அரசியலில் புதியவரான ராகுல் காந்திக்கு அதைப்பற்றி பெரிய விவரம் இல்லை. பெரும்பாலும், தனது தாயின் பின்னே நிற்பார். அவரது சகோதரி, பிரியங்கா, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார், அவர்களை பார்த்து கை அசைப்பார்.

ஆனால் ராகுல், தனது கையை உயர்த்துவதற்குக் கூடத் தயங்குவார். அவர், பேச்சு குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவின. எதிர்க்கட்சிகள் அவரை 'பப்பு' என்று அழைத்து கேலி செய்தனர். தான் 'பப்பு' என்று அழைக்கப்படுவதை தடுக்க, ஆரம்பத்தில், ராகுல் காந்தி எந்த முயற்சியும் செய்யவில்லை.

அந்த நேரத்தில், பாலிவுட்டில், 'பப்பு பாஸ் ஹோ கயா' என்ற திரைப்படம் வெளியானது. 2008-ம் ஆண்டில் வெளியான 'பப்பு கான்ட் டான்ஸ்' என்ற மற்றொரு பாலிவுட் திரைப்படத்தில் வெளியான பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அதே ஆண்டில், நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தலில், 'பப்பு கான்ட் வோட்' என்று தேர்தல் ஆணையம் பிரசாரம் நடத்தியது. ராகுல் தலைமையில், காங்கிரஸ் பல மாநிலங்களில் பா.ஜ.க.-விடம் அதிகாரத்தை இழந்தது. பா.ஜ.க.வில் ஒரு நகைச்சுவையும் வலம்வந்தது. என்னவென்றால், எங்களுக்கு 3 பேர் பிரசாரம் செய்கிறார்கள், மோடி, அமித்ஷா மற்றும் ராகுல் என்பதே ஆகும்.

ராகுலின் அரசியல் பக்குவம்

படத்தின் காப்புரிமை NOAH SEELAM/Getty Images

அவரது அரசியல் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில், காங்கிரஸ் உறுப்பினர்களே அவரைப் பற்றி பின்னால் கேலி பேசினர்.

அந்த நாட்களில், காங்கிரசின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள், தங்கள் ரோலக்ஸ் கை கடிகாரத்தை கழற்றி வைத்துவிட்டு, தங்களது கார்களை அருகிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நிறுத்திவிட்டு, ரிக்ஷாவில் சென்று ராகுல் காந்தியை சந்திப்பர்.

மார்ச் 19, 2007ல் அவர் ஒரு பிரகடனம் செய்தார். "1992ல் நேரு குடும்பம் அதிகாரத்தில் இருந்திருந்தால், பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது." என்றார். அந்நேரம், நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், மத்தியில் அதிகாரத்தில் இருந்தது.

பாபர் மசூதி இடிக்கப்படும் சூழல் வந்தால், அதை தடுக்க தானே முன் நிற்பேன் என்றும், தான் உயிரோடு இருக்கும்வரை, அதை இடித்து கீழே தள்ள முடியாது என்றும், தனது தந்தை, தாயிடம் கூறியதாக ராகுல் நினைவு கூர்ந்தார். பாபர் மசூதி குறித்த ராகுல் காந்தியின் கருத்து, அவரது அரசியல் பக்குவமின்மையை காட்டுவதாக, அரசியல் விமர்சகர்கள் விமர்சித்தனர்.

'பப்பு' பட்டத்தை தகர்த்த ராகுல்

திடீரென்று, விஷயங்கள் மாற ஆரம்பித்தன. அமெரிக்காவின் பெர்க்லீயில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில், இந்திய அரசியல் மற்றும் வெளியுறவுக் கொள்கை பற்றி அவர் செய்த விவாதத்தின்போது மாற்றம் வெளிப்பட்டது.

அவர் இந்தியாவுக்குத் திரும்பியபோது, நம்பிக்கை தெரிய ஆரம்பித்தது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்றாலும், அங்கு, பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை ராகுல் காந்தி முறியடித்தார்.

இதனைத் தொடர்ந்து, இப்போது வரை கற்பனை செய்ய முடியாத சாதனையை ராகுல் படைத்தார். ஹிந்தி மாநிலங்களின், மூன்று சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில், நரேந்திர மோடி தீவிர பிரச்சாரம் செய்த போதும், அம்மாநிலங்களின் பாரதிய ஜனதா ஆட்சியை ராகுல் கவிழ்த்தார். 2019 பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவார் என்பது சாத்தியமானதாக தெரியவில்லை.

மற்றவர்களுக்கு செய்த பலனை அனுபவிக்கிறது பா.ஜ.க.

படத்தின் காப்புரிமை BBC/AFP/GETTY

ஒரு பாறையை கீழே இருந்து உந்திக்கொண்டே இருந்தால், அது மேல்நோக்கி சென்றே ஆக வேண்டும் என்ற நீதிமொழி ராகுல் காந்திக்கு பொருந்தும்.

அவரது தலைமையின் கீழ், காங்கிரஸ் கட்சி, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அதன் வரலாற்றில் மிகவும் மோசமான இழப்புக்களை சந்தித்தது.

மக்களவை தேர்தலில் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த மோசமான வெற்றி, அவரை, எதிர்க்கட்சியை வழிநடத்தும் தகுதி கூட இல்லாதவர் ஆக்கியது.

காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் தனது ஆளுமையில் தீவிர மாற்றங்களைச் செய்தார். மாற்றம் பெற்ற ராகுல் காந்தி, கோயில்களுக்கு செல்லவோ, மலைகள் ஏறவோ (கைலாஷ் மானசரோவர்) அல்லது அவரது புனித நூலை காட்டவோ தயங்கவில்லை.

யோகி ஆதித்யாநாத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரோஷமான மற்றும் கடினமான நிலைப்பாட்டை எதிர்த்து, மக்களுக்கு முன்னால் இந்துத்துவாவின் மென்மையான, நுட்பமான கருத்தை எடுத்துக்காட்டினார்.

புகழ்பெற்ற பத்திரிகையாளர் ராதிகா ராமசேஷன் தெரிவிக்கையில், காங்கிரசுக்கு மாற்று மற்றும் பசுவுக்காக, பா.ஜ.க., இருந்தது. இப்போது பா.ஜ.க.வுக்கு குறுக்கே காங்கிரஸ் வந்துள்ளது என்கிறார்.

காங்கிரஸ் கூட்டணியில் கூடுதலாக மூன்று மாநிலங்கள்

இதன் விளைவாக, ராகுல் காந்தி மூன்று மாநிலங்களை ஒவ்வொன்றாக கூட்டணியில் சேர்த்தார். இந்த மாநிலங்கள் பாரம்பரியமாக பா.ஜ.க.-வின் கோட்டையாக இருந்தன.

பா.ஜ.க.வுடன் ஒரு பெரிய போராட்டம் நடத்தி, அங்கெல்லாம் காங்கிரஸ் வெற்றிபெற்றது. 2014 தேர்தல்களில் இந்த மூன்று மாநிலங்களில் உள்ள 65 இடங்களில், பா.ஜ.க. 62 இடங்களை வென்றது என்பதில் இருந்து, காங்கிரசின் வெற்றி மதிப்பை புரிந்து கொள்ள முடியும்.

இந்தியா முழுவதும் ராகுலின் புகழ் ஓர் எழுச்சியைக் கண்டது. தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், ஆர்.ஜே.டி.யின் தேஜஸ்வி யாதவ், தேசியவாத காங்கிரசின் சரத் பவார் ஆகியோர், அவர் புகழ் பாடுவதை தடுத்து நிறுத்த முடியாது. காங்கிரசை கடுமையாக எதிர்த்த சந்திரபாபு நாயுடுவைக் கூட அவர் சமாளித்துவிட்டார்.

மோடி மீது கடுமையான தாக்குதல்கள்

ராகுல் தலைமையின் கீழ் காங்கிரஸின் வியத்தகு செயல்திறன், அவரை, இந்தியாவின் உயர்ந்த பதவிக்கான போட்டியில் முன் நிறுத்தி உள்ளது.

அவர் நகைச்சுவையாக பேச தொடங்கிவிட்டார் (பிரதமர் மோடிக்கு நாடக தின வாழ்த்து தெரிவித்தார்) மற்றும் பத்திரிகையாளர்களை சந்திக்க வெட்கப்படுவதில்லை.

கடந்த காலங்களில், கடுமையான முடிவுகளை எடுக்கும்போது, காந்தி வெளிநாடுகளுக்கு சென்று வருவார். விவசாய நெருக்கடி, பொருளாதார பாதிப்பு, வேலையில்லா திண்டாட்டம், ரஃபேல் ஒப்பந்தம் ஆகியவற்றில், பிரதமர் நரேந்திர மோடியை அவர் தொடர்ந்து தாக்கிக்கொண்டே இருக்கிறார்.

மக்களவையில் விவாதத்தின்போது, தொலைக்காட்சிகளுக்கு முன்பு, அவர் மோடியை கட்டியணைத்து, அரசியல் எதிர்ப்பாளர்களை தான் எதிரிகளாக பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டினார்.

நரேந்திர மோடியை தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், மோடியின் பொருளாதார கொள்கைக்கு மாற்றாக, அவரால், வேறு கொள்கையை கொண்டுவர முடியவில்லை.

காங்கிரஸ் சமீபத்தில் வென்ற மூன்று மாநிலங்களில், விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது, காந்தியின் துருப்புச் சீட்டாக இருந்தது.

பொது தேர்தலையொட்டி, தற்போது, ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்ச வருவாயாக ரூ.72,000 வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இருப்பினும், குறைந்தபட்ச வருவாய் உத்தரவாத திட்டத்திற்கான மூலதனம் எவ்வாறு உருவாக்கப்படும் என்பதை அவர் விளக்கவில்லை.

படத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN

அஷோக் கெலாட் மற்றும் கமல்நாத்திடம் மாநிலங்களின் கட்டுப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது

ராஜஸ்தானில் காங்கிரஸின் தலைவராக சச்சின் பைலட்டை நியமித்த போதிலும், அஷோக் கெலாட்டை முதலமைச்சர் ஆக்கியதில், ராகுலின் அரசியல் புத்திசாலித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.

மத்தியப்பிரதேசத்திலும், ஜியோதிராதித்யா சிந்தியாவை பிரதான பொறுப்புகளில் நியமித்தார். ஆனால், முதலமைச்சர் வேட்பாளர் தேர்வின்போது, கமல்நாத்தையே தேர்ந்தெடுத்தார்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன், அங்கு, பா.ஜ.க. ஆட்சி அமைப்பதை தடுத்து நிறுத்தி, காங்கிரஸ் இரண்டாம் இடம் பெற்றபோதும், மதசார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து, கூட்டணி அரசை அமைத்தார்.

கவர்னர் வாஜூபாய் வாலா, பாரதிய ஜனதாவை ஆட்சி அமைக்க அழைத்ததும், சண்டிகரில் இருந்து அபிஷேக் மனு சிங்வியை வரவழைத்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வைத்தார். அதன்பின், பா.ஜ.க., 48 மணி நேரத்தில், அரசை, ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது.

பயணிக்க வேண்டிய சாலை கடினமானது

ராகுல் ஓர் அமைச்சராகவோ அல்லது முதலமைச்சராகவோ இருந்ததில்லை. அவர் விரும்பியிருந்தால் ஆகி இருக்கலாம். மூன்றாவது முறை நாடாளுமன்ற உறுப்பினரான அவர் மீது, தான் வெற்றி பெற்ற மக்களவை தொகுதியில், எந்தவொரு வளர்ச்சியையும் ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

படத்தின் காப்புரிமை TWITTER / CONGRESS

இதுவரை அவர் பெற்ற பதவிகள் அனைத்தும், அவருக்கு வழிவழியாக வந்தவையே. அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவர் தற்போது பிரதமர் பதவியை குறிவைத்தாலும், அவரது ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும், இந்த அரசியல் நிலைப்பாட்டிற்கு போதுமான சோதனையை அவர் செய்யவில்லை என்பதை நன்கு அறிவர்.

'ஓபன்' இதழின் ஆசிரியரான எஸ்.பிரசன்னராஜன் மிகவும் சுவாரஸ்யமான கருத்தை கூறுகிறார். "ராகுலின் மிகப்பெரிய பிரச்சனையே, அவர் ராகுல் காந்தியாக, மோடி வயதில் இருந்திருக்க வேண்டும்". இது யாருக்கும் கடுமையான ஒன்றே. பிரதமர் பதவி காலத்தை முழுமையாக பூர்த்தி செய்துள்ள மோடியை, 2019 தேர்தலில் தோற்கடிப்பது, மிகவும் சவாலான விஷயம் என்பது ராகுலுக்கும் தெரியும்.

எனினும், மோடியை எதிர்த்து நிற்கும் திறன் தனக்கு உள்ளது என்பதை, அவர், கடந்த மூன்று மாதங்களில் நிரூபித்துள்ளார். அதனை அவர் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :