தேர்தல் 2019: 'இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்' - ராகுல் காந்தி

ராகுல்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இன்று, வியாழக்கிழமை, தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தியின் சகோதரியும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிகளுக்கான காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலருமான பிரியங்கா காந்தி இன்று காலை ராகுல் காந்தியுடன் தனி விமானம் மூலம் வயநாடு வந்தடைந்தார்.

வேட்புமனு தாக்கலின்போது பிரியங்கா காந்தியும் ராகுலுடன் சென்றிருந்தார்.

ராகுல்காந்தி மக்களவைத் தேர்தலில் தாம் வழக்கமாகப் போட்டியிடும் தொகுதியான உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியுடன், கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

படக்குறிப்பு,

தனது சொத்து விவரங்களை வெளியிட்டார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

"கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என இந்தியா அனைத்தும் ஒரே தேசம் எனும் செய்தியை கூறவே நான் கேரளா வந்துள்ளேன். நரேந்திர மோதி, ஆர்.எஸ்.எஸ், பாஜக ஆகியோரால் இந்தியாவின் பண்பாடு, வரலாறு, மொழிகள் ஆகியவை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆகவேதான் நான் வட இந்தியா, தென் இந்தியா ஆகிய இரு இடங்களிலும் போட்டியிடுகிறேன்," என்று வேட்புமனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறினார்.

வேலைவாய்ப்பும், விவசாயிகளும்தான் இன்றைய இந்தியாவின் முக்கியப் பிரச்சனைகளாக உள்ளன. இவற்றில் நரேந்திர மோதி தோல்வி அடைந்துவிட்டார்.

தன்னைக் காவலாளி என்று அழைத்துக்கொண்ட பிரதமர், 45,000 கோடி ரூபாய் கடனுள்ள அனில் அம்பானிக்கு ரஃபேல் ஒப்பந்தம் மூலம் 30,000 கோடி ரூபாய் மக்கள் பணத்தை அளித்தார் என்று ராகுல் குற்றம் சாட்டினார்.

"காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இடையே கேரளாவில் அரசியல் ரீதியான மோதல் நிலவுகிறது. இது எதிர்காலத்திலும் தொடரும். இடதுசாரிகள் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்களை நாம் மறுப்பேன். ஆனால், இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட நான் பேசமாட்டேன்," என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் இணைந்து வயநாட்டில் பிரசாரப் பேரணி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

படக்குறிப்பு,

ஸ்மிரிதி இரானி

இதனிடையே ராகுல் காந்திக்கு அமேதி தொகுதியில் மக்கள் ஆதரவு இல்லை என்பதால் வயநாடு தொகுதியில் போட்டியிடுவதாக, அமேதியில் அவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி கூறியுள்ளார் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

15 ஆண்டுகள் இங்கு பதவியை அனுபவித்துவிட்டு இப்போது வேறு இடத்துக்குப் போவது, அமேதி மக்களை அவமதிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2014இல் அமேதி தொகுதியில் ராகுலிடம் தோல்வி அடைந்தவர் ஸ்மிரிதி இரானி.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இம்ரான் குரேஷி, பிபிசி இந்தி

"வருக வருக ராகுல் காந்தி, உங்களை வயநாடு அன்புடன் வரவேற்கிறது" - காங்கிரஸ் ஊழியர்கள் வயநாடு எங்கும் இவ்வாறான கோஷத்தை எழுப்புகிறார்கள்.

வேட்பாளர்களை அறிவிப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தால் காங்கிரஸ் ஊழியர்கள் முதலில் உற்சாகம் இழந்து இருந்தார்கள். ஆனால், ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்ற அறிவிப்பு அனைத்தையும் மாற்றிவிட்டது.

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியான ஐக்கிய ஜனநாயக முன்னணி முதலில் நம்பிக்கை இழந்து இருந்தார்கள். அதன் முதன்மை எதிர்கட்சியான மார்க்சிஸ்ட்களும் அதன் ஜனநாயக கூட்டணியும் மிகவும் வலுவாக அங்கு இருந்தது.

இதனை எதிர்கொள்ள, கட்சியினருக்கு உற்சாகத்தை ஊட்ட, இதனையெல்லாம் கடந்து சபரிமலை விவகாரத்தின் மூலம் கட்சியை வலுப்படுத்த நினைக்கும் பா.ஜ.கவை தடுத்து நிறுத்த ஒரு உறுதியான முடிவு தேவைப்பட்டது.

அது இந்த அறிவிப்பின் மூலம் சாத்தியமாக இருப்பது போல தெரிகிறது.

இந்த முடிவானது கட்சியினரை மிகவும் உற்சாகப்படுத்தி இருக்கிறது . மாநிலம் எங்கும் கட்சி ஊழியர்கள் இடையே ஓர் உற்சாக அலை வீசுகிறது. பிரதமர் வேட்பாளர் முதல் முதலாக கேரளாவில் போட்டியிடுகிறார் என்று பிபிசி இந்தியிடம் தெரிவித்தார் கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா.

இது கேரளாவில் மட்டும் ஒரு தாக்கத்தை உண்டாக்க போவதில்லை. இது அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் தமிழகத்திலும் ஒரு மாற்றத்தை உண்டாக்கும் என்கிறார் அவர்.

வயநாடு தொகுதி

வயநாடு தொகுதி 2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஏழு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இரண்டு தொகுதிகள் பழங்குடிகளுக்கான தனி தொகுதி. கேரளாவிலேயே அதிகளவில் பழங்குடி மக்கள் இருக்கும் தொகுதி வயநாடு.

2009 மற்றும் 2014 என இரண்டு முறையும் காங்கிரஸ் கட்சியின் ஷானாவாஸ் இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு மரணமடைந்தார்.

2009 ஆம் ஆண்டு ஷானாவாஸ் 152,439 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். 2014 ஆம் ஆண்டு அவர் 377,035 வாக்குகள் பெற்றார்.

வயநாடு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி பலவீனமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 2009 ஆம் ஆண்டு அதன் வேட்பாளர் இந்தத் தொகுதியில் பெற்ற வாக்குகள் 31,687.

2014 மக்களவைத் தேர்தலில் அதன் வேட்பாளர் பெற்ற வாக்குகள் 80, 752.

ஆனால், அதே நேரம் இடதுசாரிகள் இந்த தொகுதியில் வளர்ந்து வருவதையும் தரவுகள் காட்டுகின்றன.

2009 தேர்தலில் சி.பி.ஐ வேட்பாளர் ரஹமத்துல்லாவை 1.52 வாக்குகள் வித்தியாசத்தில் ஷானாவாஸை வீழ்த்தினார். ஆனால், இந்த வாக்கு வித்தியாசம் 2014 தேர்தலில் 20,870 வாக்குகளாக குறைந்தது.

2016 சட்டமன்ற தேர்தலில் இந்த மக்களவை தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் மூன்றில் காங்கிரஸ் வென்றது, ஒன்றில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வென்றது. சி.பி.எம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மூன்று தொகுதிகளில் வென்றன.

பெயர் குறிப்பிட விரும்பாத சி.பி.எம் தலைவர் ஒருவர் இந்த முடிவானது மாநில காங்கிரஸூக்கு உற்சாகமூட்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார்.

அவர்,"மாநில காங்கிரஸ் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும். இந்த முடிவின் மூலம் சி.பி.எ-க்கு மாநிலம் முழுவதும் சவால் விடுகிறது காங்கிரஸ்" என்கிறார்.

பா.ஜ.கவுக்கு எதிராக

ஆனால், அதே நேரம் பா.ஜ.கவுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒற்றுமையாக இருக்க வேண்டிய காலக்கட்டத்தில் இது போன்ற ஒரு போட்டி தேவையற்றது என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன.

அவர் போட்டியிடுவது குறித்து நாங்கள் கவலைக் கொள்ளவில்லை. அவரை எதிர்த்து போட்டியிடுவோம். ஆனால், பாரதிய ஜனதா எங்கு போட்டியிடுகிறதோ அங்குதான் அவர்களை எதிர்த்து இவர் போட்டியிட்டுருக்க வேண்டும் என்கிறார் பினராயி விஜயன்.

அரசியல் பார்வையாளர்கள் வயநாடு தொகுதியை காங்கிரஸுக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாக பார்க்கிறார்கள்.

நிச்சயம் காங்கிரஸ் வெற்றி பெறும் தொகுதி வயநாடு என்கிறார் அரசியல் விமர்சகர் ஜி.பிரமோத் குமார்.

இந்துக்கள் மத்தியில் சி.பி.எம்க்கு செல்வாக்கு இருக்கிறது. ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இந்துக்கள் மத்தியிலும், சிறுபான்மை மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்கிறது என்கிறார் பிரமோத் குமார்.

சபரிமலை விவகாரம் எந்த அளவுக்கு பா.ஜ.க எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை. பந்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் தொகுதியில் தாக்கம் செலுத்தும் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :