"ஆண் யானைகள் தொடர்ந்து மின் வேலிகளில் சிக்கி இறப்பதால் யானை இனத்துக்கு ஆபத்து"

மனித - யானை மோதல்கள்

கோவை, மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் தோட்டத்தில் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி ஓர் ஆண் யானை ஓரிரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்தது.

சிறு முகையில் ஓடும் பவானி ஆற்றின் தெற்கு கரையினை ஒட்டி உள்ள பவானி சாகர் அணைக்கு சொந்தமான இடத்தில் நாசர் அலி என்பவர், வாழைப் பயிர் செய்துள்ளார். இந்த வாழைத் தோட்டத்தினை சுற்றி மின்வேலி அமைத்துள்ளார்.

இந்த வேலியில் பாய்ந்த மின்சாரம் தாக்கி, ஆண் யானை ஒன்று ஓரிரு நாள்கள் முன்பு உயிரிழந்தது. வனத்துறையினர் தோட்டத்திற்கு சொந்தமான நாசர் அலியிடம் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக அவர் அந்த வேலியில் மின்சாரம் பாய்ச்சி வந்ததாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த யானையின் உடற் கூராய்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது. உடற் கூராய்வு நடைபெற்ற பொழுது களத்தில் இருந்த ஓசை அமைப்பினை சேர்ந்த செந்தில்குமாரிடம் பேசியபோது, "வாழைத்தோட்டம் அமைந்துள்ள இடம் பொதுப் பணித்துறைக்கு சொந்தமான இடம், இதில் குத்தகைக்கு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாய நிலங்களை சுற்றி உள்ள மின்வேலியில் திருட்டு மின்சாரம் பாய்ச்சப் பட்டுள்ளது. தோட்டத்தினை சார்ந்தவர்கள் 3 அல்லது 4 கிலோ மீட்டருக்கு அப்பால் பட்டா நிலங்களில் இருந்து மின்சாரத்தினை எடுத்து விதியினை மீறி பயன்படுத்தி உள்ளனர்" என்று தெரிவித்தார்.

"தொடர்ந்து கோவை வனப்பகுதிகளில் ஆண் யானைகளின் இறப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. பெரும்பாலும் மின்வேலியில் அடிபட்டு இறப்பவை ஆண் யானைகள் தான். இதுவரை 30 க்கும் மேற்பட்ட யானைகளின் உடற் கூராய்விற்கு சென்றுள்ளேன், பெரும்பாலும் ஆண் யானைகள் தான் இறந்து வருகின்றன," என்று அவர் தெரிவித்தார்.

கோவையில் ஆண் யானைகள் இறப்பது அல்லது இடம் மாற்றப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

சின்னத் தம்பியும் பெரிய தம்பியும்

சில நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து இடம் மாற்றப்பட்ட சின்னத்தம்பி, விநாயகன் இரண்டுமே ஆண் யானைகள். சில வருடங்களுக்கு முன்பு சின்னத்தம்பியுடன் இன்னொரு ஆண் யானையும் வனத்தை ஒட்டிய பகுதிகளில் சுற்றிக் கொண்டு இருந்தது. அதற்கு பெரிய தம்பி எனப் பெயரிட்டு இருந்தனர் அப்பகுதி மக்கள்.

மின்சாரம் தாக்கி பெரிய தம்பி யானை உயிரிழந்து விட்டது.

இது பற்றிய பிபிசி தமிழிடம் பேசிய யானை ஆய்வாளர் ராம்குமார், "தொடர்ந்து ஆண் யானைகள் மரணிப்பதால் யானைகளின் இனப் பெருக்கத்தில் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றார். இப்பொழுதே இந்திய வனப்பகுதிகளில் யானைகளின் ஆண் பெண் விகிதாசாரம் சீராக இல்லை. தொடர்ந்து ஆண் யானைகள் குறைந்து வந்தால் பெண் யானைகளுக்கு போதுமான இணைகள் கிடைக்காமல் போகும் அபாயம் உண்டு. மேலும், ஒரு குறிப்பிட்ட குழுவிற்கு இடையே மட்டும் இனப்பெருக்கம் நடைபெறும் பொழுது யானைகளின் மரபு மூலக்கூறுகளின் பரவல் தன்மை குறைந்து, ஒரே மாதிரியான மரபு மூலக்கூறுகள் கொண்ட யானைகள் மட்டுமே பிறக்கும். இந்த குறிப்பிட்ட மரபு மூலக்கூறுகளை பாதிக்கும் நோய்த்தொற்று ஏதேனும் உருவானால் அனைத்து யானைகளும் பாதிப்படையும் சூழல் ஏற்படும்," என்றார்.

ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி மற்றும் கவுரவ வன உயிரின காப்பாளர் பத்ரசாமி அவர்களிடம் இது குறித்து கேட்ட பொழுது, "இது போன்ற விதி மீறல்களில் ஈடுபடுபவர்களின் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், திருட்டுத்தனமாக மின்சாரம் பாய்ச்சக் கூடாது என்பது மின் வாரியத்துறை விதி. மின்சாரத்துறையில் இருந்து மின் வேலியில் மின்சாரம் பாய்ச்சியதற்காக வழக்கு தொடுத்து அவர்கள் வழக்கினை எடுத்து நடத்த வேண்டும், ஆனால் அவர்கள் முறையாக செய்வதில்லை.

மேலும், வனப்பகுதியினை ஒட்டி மின் வேலி அமைத்துள்ள இடங்களில், வேலியில் மின்சாரம் பாய்ச்சப்படுகிறதா என்று பரிசோதிக்க வேண்டும், வனத்துறை பணியாளர்கள் இதனை செய்தால் அவர்களே மின்சாரம் தாக்கி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் இதைச் செய்ய இயலாது. எனவே, மின்வாரியம் இதில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

உலகப் பருவநிலை மாற்றம் , நிலப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகியவை ஆசிய யானைகளின் வாழ்வில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என பன்னாட்டு ஆய்வாளர்கள் அடங்கிய குழு இந்தியா மற்றும் நேபாளத்தில் நடத்திய ஆய்வின் முடிவுகள் 'diversity and distribution' இதழில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வானது மனித இடையூறுகள் அதிகம் உள்ள வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு, ஆசிய யானைகள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இடங்களில் 42 சதவீத வாழ்விடத்தினை இழந்து விடும் என்று தெரிவிக்கிறது. இந்த ஆய்வில் தெரிவிப்பது போல, மனித செயல்பாடுகளால் யானைகள் இறப்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :