பாமக - அதிமுக கூட்டணி: வட மாவட்டங்களில் வெற்றி கிட்டுமா?

பாமகவை நம்பும் அதிமுக: வட மாவட்டங்களில் கூட்டணிக்கு வெற்றி கிட்டுமா? படத்தின் காப்புரிமை FACEBOOK

கடந்த இரண்டு தசாப்தங்களாக தமிழக அரசியல்களத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்துவரும் கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) கருதப்படுகிறது.

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சம பலத்தில் இருக்கும் தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியே வெற்றிக்கூட்டணியாக கருதப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தல்களை பொருத்தவரை பாமக 2016-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலை தவிர தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் உறுப்பினர்களை பெற்றிருந்தது.

பாமக கவனம் பெற தொடங்கியது எப்போது?

தான் போட்டியிட்ட முதல் சட்டமன்ற (1991) தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, ராஜீவ் காந்தி மரணம் அடைந்ததால் ஏற்பட்ட அலையை மீறி ஒரு இடத்தில் வெற்றிபெற்றது. பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியின் முதல் சட்டமன்ற உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்டார்.

அடுத்து வந்த 1996 சட்டமன்ற தேர்தலில் திவாரி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து 4 தொகுதிகளில் பாமக வென்றது. திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்ற அந்த தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வே நான்கு இடங்களில்தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மாநில அரசியலில் பாமக கவனம் பெற தொடங்கியது இந்த தேர்தலுக்கு பிறகுதான்.

படத்தின் காப்புரிமை ANBUMANI RAMADOSS/FB

1998,1999 ஆகிய இரு மக்களவை தேர்தல்களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இடம்பிடித்தது.

1998-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா, பாமக, பாஜக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். தான் போட்டியிட்ட 5 தொகுதிகளில் நான்கில் வென்று முதல்முறையாக இந்திய மக்களவையில் பாமக நுழைந்தது.

1999 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுக்கு பதிலாக திமுக பாஜக கூட்டணியில் இடம்பெற்றது. இத்தேர்தலில் பாமக 5 இடங்களில் வென்றது.

இதன்பின் 2004 நாடாளுமன்ற தேர்தலில், தான்போட்டியிட்ட 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்று 100 சதவீத வெற்றியை பதிவுசெய்தது பாமக. இம்முறை காங்கிரஸ் மற்றும் திமுக அடங்கிய ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பாமக இடம்பிடித்தது.

2009 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, மதிமுக மற்றும் இடதுசாரிகள் அடங்கிய கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட பாமக எந்த இடத்திலும் வெல்லவில்லை. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவில் அன்புமணி ராமதாஸ் மட்டும் வெற்றி பெற்றார்.

போராளி கட்சியாக அறியப்பட்ட பாமக

1980களில் இட ஒதுக்கீடு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த வன்னியர் சங்கம் பிற்காலத்தில் பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுத்தது.

ஆரம்ப காலம் முதலே ஒரு போராளி கட்சியாக சமூக ரீதியான மற்றும் தமிழக மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் கட்சியாக பாமக அறியப்பட்டு வந்தது.

பின்னர் தேர்தல் அரசியலில் பெற்ற வெற்றிகள் மற்றும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சிகளின்போது மத்திய அமைச்சரவைகளில் பாமகவுக்கு கிடைத்த அமைச்சர் பதவிகள் ஆகியவை அக்கட்சியின் போராட்ட பாதையை மற்றும் நோக்கத்தை தடம்மாற செய்துள்ளதாக சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தங்கள் கட்சி போராட்ட களங்களில் தொடர்ந்து உயிர்ப்புடன் இருப்பதாக கூறும் பாமக, நீட் தேர்வு, காவிரி பிரச்சனை, மதுகடைகளுக்கு எதிரான போராட்டம் என பல அண்மைய போராட்டங்களில் தங்களின் கட்சி ஈடுபட்டதை சுட்டிக்காட்டுகின்றனர்.

படத்தின் காப்புரிமை TWITTER

அதிமுக ஆட்சியை அண்மைக்காலம் வரை கடுமையாக எதிர்த்த பாமக மக்களவை தேர்தலுக்கு முன்னர் அக்கூட்டணியில் இணைந்தது குறித்து சில விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

வட மாவட்டங்களில் வலுவான கருதப்பட்ட பாமக, வரும் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு உதவுமா என்பது குறித்தும், பாமகவின் வாக்குகள் கூட்டணிக்கு முழுமையாக கிடைக்குமா என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் இளங்கோவன் பிபிசி தமிழிடம் பேசினார்.

''தங்கள் கட்சி மற்றும் அரசு மீது கடுமையான விமர்சனங்களை பாமக அண்மைக்காலங்களில் தொடர்ந்து வைத்தபோதிலும்,, வட மாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சியாக கருதப்படும் பாமக கூட்டணிக்கு தேவை என்று அதிமுகவும், பாஜகவும் கருதின. பாமகவின் வாக்குகள் தங்கள் வெற்றிக்கு உதவும் என்று அதிமுக நம்புகிறது '' என்று அவர் தெரிவித்தார்.

''வட மாவட்டங்களில் உள்ள 12 நாடாளுமன்ற தொகுதிகளில் பாமகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் 6 தொகுதிகள் பாமக வலுவாக உள்ள பகுதிகளில் நடப்பதால் அக்கட்சி தங்கள் கூட்டணியில் இருப்பது அவசியம் என்று அதிமுக நினைத்திருக்கலாம்'' என்று கூறினார்.

''கடந்தகால தேர்தல்கள் மற்றும் அண்மைய நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரு கட்சிகளின் ஆதரவு வாக்குகளும் மற்ற கட்சிக்கு மாறுமா என்பது மிக பெரிய சந்தேகமே'' என்று இளங்கோவன் மேலும் கூறினார்.

''அதேவேளையில் அதிமுக மற்றும் பாமக இடையே முழுமையாக வாக்குகள் அடுத்த கட்சிக்கு செல்லுமா என்றால், இக்கட்சிகள் இடையிலான அண்மைய கடும் விமர்சனங்கள் அது குறித்து ஐயத்தை ஏற்படுத்துகிறது'' என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை FACEBOOK
Image caption வேல்முருகன்

''தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பாமகவில் இருந்து பிரிந்துசென்றவர் என்ற முறையில் பாமகவில் உள்ள சில அதிருப்தி குரல்களை அவர் ஈர்க்கக்கூடும். 2019 மக்களவை தேர்தலில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தி.மு.கவுக்கு ஆதரவளித்துள்ளது என்பதையும் நினைவில்கொள்ளவேண்டும்'' என்று இளங்கோவன் குறிப்பிட்டார்.

''மேலும் மறைந்த மூத்த பாமக தலைவர் காடுவெட்டி குருவின் சில உறவினர்கள், குருவின் மரணத்துக்கு பிறகு கட்சியின் தலைமைக்கு எதிராக வெளிட்ட கருத்துக்கள் மற்றும் காடுவெட்டி குருவின் சகோதரி வேல்முருகனின் கட்சியில் அண்மையில் இணைந்தது ஆகியவை கட்சியினர் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.

சில வன்னியர் அமைப்புகள் பாமகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து இருப்பதும் அக்கட்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என்று இளங்கோவன் தெரிவித்தார்.

பாமக உள்ள கூட்டணியே வெல்லும் என்றும், வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியே வெற்றியை தீர்மானிக்கும் என்றும் பல ஆண்டுகளாக கூறப்பட்ட நிலையில், 2009 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக எந்தப் பகுதியிலும் வெல்லவில்லை.

இந்நிலையில், 2019 மக்களவை தேர்தல் முடிவுகள் பாமகவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :