ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது: உறுதி செய்த கார்பன் பரிசோதனை

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள். படத்தின் காப்புரிமை Archeological Department
Image caption ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள்.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்களின் கார்பன் பரிசோதனை முடிவுகள், அந்தப் பொருள்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையவை என்று காட்டுகின்றன.

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கார்பன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரிய வந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு ஆய்வுகள் நடந்தபோது கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரில் இருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று.

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் 1868-ல் தொடங்கியது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 1886-ல் இங்கு இனப் பகுப்பாய்வுக்கு ஆய்வு செய்துள்ளனர்.

இங்கு கிடைத்த மண்டை ஓடுகள், எலும்புக் கூடுகளை எடுத்து சென்றுள்ளனர். 1900-ல் இந்திய தொல்லியல் ஆராய்ச்சிக்காக இந்தியா வந்த அலெக்ஸ்சாண்டர் ரீ என்பவர் தமிழகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகளை நடத்தி உள்ளார்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption மூடி இல்லாத மற்றும் மூடியுடைய முதுமக்கள் தாழிகள்

1902 ல் இருந்து 1904 வரை ஆதிச்சநல்லூரை முழுமையாக அகழ்வாராய்ச்சி செய்தது அலெக்ஸ்சாண்டர் ரீ தான். ஆய்விற்கு பின்பு, எகிப்திய பிரமிடுகள் என்று சொல்லக்கூடிய புதை குழிகளை விடவும் பழமையானவை இங்குள்ளன என்று கூறியுள்ளார்.

முதன் முறையாக தென்னிந்தியாவில் மிகப்பெரிய நாகரீகம் இருந்தது என்பதற்கான சான்றுகளாக இந்த ஆய்வுகள் இருந்தன. மீண்டும் 2004-ம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை , முனைவர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் குழுவினரை அமைத்து அகழ்வாய்வு நடத்தியது.

செய்துங்க நல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூரிலுள்ள பழமையான பாண்டிய ராஜா கோயில்

அதில் , ஆதிச்ச நல்லூரில் இதுவரை நான்கு கட்ட அகழ்வாய்வு நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுகள் குறித்து எந்த ஆய்வறிக்கையும் வெளியிடப்படவில்லை.

எனவே, ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையினை வெளியிட வேண்டும், அகழ்வாய்வினை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு முன்னர் விசாரணைக்கு வந்த பொழுது , ஆதிச்ச நல்லூரில் கண்டறியப்பட்ட பொருட்களை கார்பன் பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூரில் 2004ம் ஆண்டு கிடைத்த முதுமக்கள் தாழி

அதன் அடிப்படையில் ஆதிச்ச நல்லூர் அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா நகரிலுள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி கார்பன் பரிசோதனை செய்த முடிவுகளை 2019 ஏப்ரல் மாதம் 4ம் தேதி மத்திய அரசு , உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

இதனடிப்படையில் ஆய்வறிக்கை தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

எனவே, நீதிபதிகள் கார்பன் பரிசோதனைகளின் அடிப்படையில் ஆதிச்ச நல்லூரில் அடுத்த கட்ட அகழாய்வு பணியினை மேற்கொள்ளப்போவது மத்திய அரசா, மாநில அரசா என்று தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கினை ஏப்ரல் 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருக்கும் குறியீடுகள்

இது குறித்து தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது. ஆதிச்சநல்லூர், இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் கொற்கையினை தலைநகராகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி புரிந்தபோது ஒரு முக்கியமான பண்பாட்டு சிறப்பு மிக்க இடமாக இருந்திருக்க வேண்டும்.

ஏனெனில், மூன்றாம் தமிழ் சங்க காலத்தினை சார்ந்த சங்க இலக்கியங்களில் , ஆதிச்ச நல்லூர் பற்றிய குறிப்புகள் இல்லை.

ஆனால், கொற்கையினை பற்றி உள்ளது. திருசெந்தூர், பொதிகை மலையினைப் பற்றியெல்லாம் குறிப்புகள் உள்ளன. இதை வைத்து பார்க்கும்போது மூன்றாம்தமிழ் சங்கம் தோன்றி, மதுரையில் பாண்டியர்கள் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே இந்த நாகரிகம் அழிந்திருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வுத் தலம்.

எனவே, சுமார் நான்காயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரீகமாக , இந்த ஆதிச்ச நல்லூர் நாகரீகம் கருதப்படுகிறது. அதற்கு உறுதியாக, 2004-2005 ஆண்டுகளில் இங்கு அகழ்வாய்வு நடந்தபோது கிடைத்த எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகளை ஆய்வு செய்த அறிவியலாளர்கள் இவை சுமார் கிமு 1,700 ஆண்டுகளுக்கு முந்தியவை, அதாவது இன்றைக்கு 3,700 ஆண்டுகளுக்கு முந்தியவை என்று கருத்து தெரிவித்துள்ளனர் என்றார் சாந்த லிங்கம்.

இப்பொழுது , புளோரிடாவிற்கு அனுப்பபட்ட ஆதிச்ச நல்லூரில் கிடைத்த இரண்டு மாதிரிகளை ஆய்வு செய்த அறிக்கைகளை, மத்திய அரசின் தொல்லியல் துறை மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனது.

அதில் ஆய்வு செய்த இரண்டு பொருள்களின் காலம் முறையே, கிமு 905, கிமு 791 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பார்த்தாலும் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய , கிட்டத்தட்ட சிந்து சமவெளி நாகரீகத்திற்கு இணையான நாகரிகமாக இந்த நாகரீகம் உள்ளது என்று அவர் கூறினார்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூரில் எடுக்கப்பட்ட பொருட்கள் நெல்லை அருங்காட்சியத்தில் உள்ளன.

மேலும், இதுவரை தமிழ் நாட்டில் கிடைத்த பண்பாட்டு எச்சங்களில் ஆதிச்சநல்லூர்தான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில், தமிழகத்தில் எங்கெல்லாம் அகழாய்வு செய்கிறோமோ அங்கெல்லாம் எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கிடைக்கின்றன.

ஆக அவை தமிழர்கள் எழுத்தறிவு பெற்ற சமூகமாக அப்பொழுது இருந்தார்கள் என்பதன் சான்றாக உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் ஆதிச்ச நல்லூரில் அகழ்வாய்வு செய்தபோது எழுத்து பொறித்த பானை ஓடுகள் கிடைக்கவில்லை.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு எழுத்தறிவு வருவதற்கு முந்தைய நாகரிகமாக ஆதிச்ச நல்லூர் நாகரீகம் இருக்கலாம்.

படத்தின் காப்புரிமை Archaeological Department of India
Image caption ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழியில் இருக்கும் குறியீடுகள்

இதுவரை அங்கு அகழாய்வு செய்தவர்கள் இடுகாட்டு பகுதிகளிலும், சுடுகாட்டு பகுதிகளிலும் மட்டும் ஆய்வு செய்துள்ளார்கள்.

இனிமேல், தாமிரபரணி ஆற்றின் வடகரையில் உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அந்த பகுதிகள்தான் மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகளாக இருக்கும். அவற்றையும் ஆய்வு செய்தால் இன்னும் பல உண்மைகள் தமிழக வரலாற்றில் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

தொல்லியல் மாதிரிகளின் காலத்தை கார்பன் முறையில் நிர்ணயிக்கும் தொழில் நுட்பம் இந்தியாவில் , மும்பையில் உள்ள ஆய்வகத்தில் உள்ளது.

ஆனால், ஒரே ஓரிடத்தில் மட்டும் இருப்பதால் மிகத் தாமதாகத்தான் ஆய்வு முடிவுகள் வெளியாகின்றன. எனவே, வெளிநாடுகளுக்கு அனுப்பி தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க வேண்டிய நிலை உள்ளது, என்றும் தெரிவித்தார் சாந்தலிங்கம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்