தேர்தல் 2019: கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா? இந்தியாவின் நலனுக்கு ஏற்றது எது?

elections 2019 படத்தின் காப்புரிமை Getty Images

மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதற்கு பதிலாக, இந்தியாவில், குறிப்பாக கடந்த சில தசாப்தங்களாக நடக்கும் தேர்தல்கள் ஆளுமைகளை முன்னிறுத்தி நடக்கின்றன.

அரசியல் கட்சிகளும் தங்கள் கொள்கைகளைவிடவும் தங்கள் தலைவர்களையே முன்னிறுத்தியே பிரசாரம் செய்கின்றன. கூட்டாட்சி அமைப்பும், நாடாளுமன்ற மக்களாட்சியும் கொண்ட இந்தியாவின் சமீபத்திய சட்டமன்ற மற்றும் மக்களவைத் தேர்தல்களை நோக்கினால், அவை அதிபர் முறை அமலில் உள்ள நாடுகளில் நடக்கும் தேர்தல்களைப்போலவே தோன்றுகிறன.

'நேர்மையான தலைவர்களைத்' தேர்வு செய்ய வேண்டும் என்ற கோஷத்தைவிட 'வலிமையான தலைவரைத்' தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கோஷம் நிலவி வருகிறது.

இந்தியாவில் இனிமேல் மத்தியில் கூட்டணி ஆட்சிதான்; எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்று 1989 முதல் நிலவிய பரவலான கூற்று, 2014இல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மை பெற்ற பின்னர் வலுவிழந்தது மட்டுமல்லாமல் பலரது எதிர்பார்ப்பையும் கணிப்புகளையும் பொய்யாக்கியது.

பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு முக்கிய தேசியக் கட்சிகளின் கூட்டு வாக்கு விகிதத்துக்கு நிகரான வாக்குகளை குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமே வலுவாக இருக்கும் பிற தேசியக் கட்சிகள் மற்றும் மாநிலக் கட்சிகள் ஆகியன பெற்றிருந்தாலும், சூழலை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டால், தங்கள் செல்வாக்கு அல்லது மேலாதிக்கத்தை உறுதி செய்துகொள்வதற்கான நம்பிக்கை அளிக்கும் ஒன்றாகவே அந்த முடிவுகள் தெரிந்தன.

தற்போதைய 2019 மக்களவைத் தேர்தலிலும் எந்த ஒரு தேர்தலையும் போல மாநில மற்றும் பிராந்தியக் கட்சிகள் ஆகியவற்றுடன் கூட்டணிக் கணக்குகள் வகுக்கப்பட்டிருந்தாலும், ஒற்றைத் தலைமை, ஒரு கட்சி ஆட்சி ஆகிய முழக்கங்கள் ஒப்பீட்டளவில் கடந்த தேர்தல்களைவிடவும் கூடுதலாகவே உள்ளன.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

ஆனால், ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்களுக்கு எதிரான மனநிலை உள்ளிட்ட காரணிகள், 2014இல் தனிக்கட்சிக்கு பெரும்பான்மையைக் கொடுத்திருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன.

கொள்கைத் திணிப்பு, தொடர்புடையவர்கள் அனைவரிடமும் கலந்தாலோசிக்காமல் முடிவுகளை கட்டாயமாக அமலாக்குவது, பிராந்திய, மத, மொழி ரீதியிலான பாரபட்சங்கள் மற்றும் குற்றங்கள் அதிகரிக்க தனிக்கட்சி அல்லது ஒரு பெரிய கட்சியால் கட்டுப்படுத்தப்படும் கூட்டணி அரசு மீதான விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன.

அதே வேளையில், முக்கியமான கொள்கை முடிவுகளை எடுப்பதில் தாமதம் அல்லது இயலாமை, நிலையற்ற ஆட்சி, பல கட்சிகள் அல்லது தலைவர்கள் தங்களை முன்னிறுத்திக்கொள்ளவும், தாங்கள் விரும்பும் வகையில் ஆட்சியை செலுத்த முயல்வது உள்ளிட்டவற்றால் நிர்வாகத்தின் செயல்திறனில் உண்டாகும் பாதிப்பு உள்ளிட்டவை கூட்டணி அரசுகள் மீதான விமர்சனங்களாக முன்வைக்கப்படுகின்றன.

தனிக்கட்சி ஆட்சி அல்லது கூட்டணி ஆட்சி ஆகிய இரண்டில் நாட்டின் வளர்ச்சிக்கு எது உகந்தது என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார் கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருக்கும் சென்டர் ஃபார் டெவெலப்மென்ட் ஸ்டடீஸ் எனும் சமூக ஆய்வு நிறுவனத்தின் பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான கே.என்.ஹரிலால்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

பன்முகத்தன்மை என்பதை தனது இயல்பாகவே கொண்டுள்ள இந்தியா போன்றதொரு நாட்டுக்கு வளர்ச்சி மற்றும் பங்களிப்பை உறுதிசெய்ய கூட்டணி ஆட்சியே சிறந்தது என்று கூறும் ஹரிலால், அதற்கான வாதங்களையும் அடுக்குகிறார். இந்தியாவின் இயல்பிலேயே கூட்டணி அரசுக்கான தேவை உள்ளது என்கிறார் அவர்.

தனியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு ஒரு கட்சி பெரும்பான்மை பெற்றாலும், நாட்டின் சில பகுதிகளில் மட்டுமே அந்தக் கட்சிகள் வெல்கின்றன. அதனால் சில பகுதிகளைச் சேர்ந்தவர்களே ஆட்சியில் பங்குகொள்ள முடிகிறது. அனைத்து பிராந்தியங்களையும் சேர்ந்தவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்க கூட்டணி ஆட்சியே உதவும், என்கிறார் ஹரிலால்.

கூட்டணி ஆட்சியில் பங்குகொள்ளும் கட்சியின் பிரதிநிதி, தனது கட்சிக்கான வாக்காளர்கள் எந்தப் பகுதியில் உள்ளார்களோ அந்தப் பகுதிக்கு அதிக நிதி ஒதுக்குவது உள்ளிட்ட பாரபட்சங்களைக் காட்டவும், அதை அரசியல் காரணங்களுக்காக கட்டுப்படுத்தாமல் இருக்கும்போது மத்திய அரசுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளதே என்று கேள்விக்கு, "தனிக்கட்சி ஆட்சியில் அமைச்சராக இருக்கும் ஒருவர் தனது சொந்த மாநிலத்திற்காக, பிற பகுதிகளுக்கு பாரபட்சம் காட்டவும் வாய்ப்புண்டு," என்றார்.

பல கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டணி அரசுகளே கேரளாவில் கடந்த பல தேர்தல்களாக தொடர்ந்து அமைந்து வருகின்றன. அனைத்துப் பகுதிகளுக்குமான வளர்ச்சி மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியன இங்கு வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என்று கூறும் ஹரிலால் கேரள மாநிலத் திட்டக்குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.

பல கட்சிகள் ஒன்றாக ஆள்வதைவிட ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் அரசு நிலையாக இருக்கும் என்ற வாதம் குறித்து கேட்டபோது, "தொடக்க காலத்தில் கூட்டணி ஆட்சிகள் நிலையற்றவையாகவே இருந்தன. ஆனால், காலப்போக்கில் அது மாறி வருகிறது. எனினும், கூட்டணி அரசுகளை நிறுவுவதற்கான பொறியமைவு உருவாக்கப்பட வேண்டும், " என்கிறார் ஹரிலால்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்