தென்காசி தொகுதியில் தனது முதல் வெற்றியை பதித்தது திமுக

விவசாயம்

பட மூலாதாரம், Getty Images

தென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் தனுஷ் எம். குமார், அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியை விட 1,20,286 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

1956ஆம் ஆண்டு வரை திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்தது தென்காசி. அதே ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி தென்காசி தனியே பிரிக்கப்பட்டு மெட்ராஸ் மாகாணத்தோடு இணைந்தது. அதுவரை 19ஆம் நூற்றாண்டின் திருவாங்கூர் மகாராஜாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

1957ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தலை சந்தித்தது தென்காசி தொகுதி.

தனி தொகுதியான தென்காசியில் தற்போது ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி என ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

காங்கிரஸின் கோட்டையாக இருந்த தென்காசி - வளர்ச்சியும் வீழ்ச்சியும்

முதல் தேர்தலில் இருந்து 1990கள் வரை காங்கிரஸின் கோட்டையாக இருந்தது தென்காசி தொகுதி. 1957, 1962, 1967, 1971, 1977, 1980, 1984, 1989, 1991 என ஒன்பது முறை இங்கு காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றிருக்கிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அருணாச்சலம் ஆறு முறை தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டம் வெல்லனைக்கோட்டை கிராமத்தில் பிறந்தவர் அருணாச்சலம். சிறு வயதிலேயே அரசியலுக்கு வந்த இவர், முதலில் இளைஞர் காங்கிரஸ் செயலாளராக இருந்தார். முதன் முதலாக 1977ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் மத்திய அமைச்சராகவும் காங்கிரஸ் அரசில் இருந்திருக்கிறார்.

1996ஆம் ஆண்டு தென்காசி தொகுதியில் ஜி.கே மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்றது. இக்கட்சி சார்பாகவும் அருணாச்சலமே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஓங்கிய அதிமுக-வின் கை

1998ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் சார்பாக போட்டியிட்ட முருகேசன், முதன்முறையாக அங்கு காங்கிரஸின் கோட்டையை தகர்த்தார்.

அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, நீண்டகால காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி, வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் போட்டியிட்டார். அப்போது மொத்தமுள்ள 39 இடங்களில், 29 இடங்களை அதிமுக கைப்பற்றியது. இந்த வெற்றி, மத்தியில் வாஜ்பேயி அரசு அமைய முக்கிய பங்காற்றியது.

பின்னர் ஜெயலலிதா தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக, மத்தியில் ஆட்சி கவிழ்ந்தது. அடுத்து 1999ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும்ம் தென்காசி தொகுதியில் அதிமுக-வே வெற்றி பெற்றது.

கால் பதித்த கம்யூனிஸ்ட் கட்சி

2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி தொகுதியில் வென்றது. அதிமுக சார்பில் இரண்டு முறை வெற்றி பெற்ற முருகேசன், பெரும் அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

ஆனால், 2009ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிட்டு வென்றது. வெரும் 34,677 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.

தென்காசி தொகுதியில் முதல் பெண் எம்பி

முதல் தேர்தலில் இருந்து எந்த பெண் எம்பியையும் கண்டிறாத தென்காசி தொகுதியில், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் வசந்தி முருகேசன் வெற்றி பெற்றார்.

இவருக்கு எதிராக போட்டியிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி 1,61,774 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

முக்கிய பிரச்சனைகள் என்ன?

மேற்கில் கேரளாவை எல்லையாக கொண்டிருக்கும் தென்காசியின் சுமார் 15 சதவீத மக்கள் தொகை பட்டியலினத்தோரை சேர்ந்தவர்கள் என தரவுகள் கூறுகின்றன.

விவசாயம், சுற்றுலா, கைத்தறி மற்றும் பல சிறிய அளவிலான தொழில்கள் ஆகியவை இத்தொகுதியின் பொருளாதாரத்தை முக்கியமாக கட்டமைக்கின்றன.

தென்காசி மக்களின் முக்கிய தொழிலாக விவசாயமே இன்றும் இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள செண்பகவள்ளி அணை மூலம் அங்குள்ள சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது. அதனை சீரமைக்கக் கோரி பல முறை மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்பது அப்பகுதி மக்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :