தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை: தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா ?

ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் படத்தின் காப்புரிமை Getty Images

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தின்போது 19 வயது ஸ்னோலின் உள்பட 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதில் இருந்து இன்னும் தூத்துக்குடிவாசிகள் மீளவில்லை.

பல வீடுகளில் மே 22ம் தேதி வரவுள்ள போராட்டத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கான வேலைகள் நடந்துவருகின்றன.

''இங்குள்ள குழந்தைகள் ஆஸ்துமா, கேன்சர் நோய்களால் அவதிப்படக்கூடாது என்று எண்ணி என் மகள் ஸ்னோலின் போராட்டத்தில் கலந்துகொண்டாள். என்னையும் போராட்டத்திற்கு கூட்டிக்சென்றாள். அவளை என் கண் முன்னே பறிகொடுப்பேன் என்று எண்ணவே இல்லை. இந்த தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதைவிட, எந்த கட்சி வந்தாலும், இந்த ஆலையை இயக்க அனுமதிக்க நாங்கள் விடமாட்டோம்'' என்கிறார் ஸ்னோலினின் தாய் வனிதா.

துப்பாக்கிச்சூடு ஏற்படுத்திய ரணம் ஆறவில்லை

போராட்டத்தில் பங்கேற்காத திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஜான்சி, காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தலை சிதறி உயிரிழந்தார். ஜான்சியின் கணவர் ஜேசுபாலன் கடந்த ஓராண்டாக கடலுக்கு செல்லவில்லை.

''இரண்டு பெண் குழந்தைகளை தனியாக விட்டு நான் என்ன செய்வேன்? அவர்களை பள்ளிக்கு கூட்டிச்செல்லவும், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்குமே தெம்பில்லாமல் நிற்கிறேன்,'' என்கிறார் ஜேசுபாலன்.

படத்தின் காப்புரிமை Reuters

நடக்கவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்து கேட்டபோது, ''எங்கள் ஊரில் அமைதி வேண்டும். மக்கள் இந்த போராட்டத்தை மறக்கவில்லை. மத்திய, மாநில அரசுகள் எங்கள் மீது கவனம் செலுத்தவில்லை என்ற வருத்தத்தில் உள்ளோம்,''என்கிறார் ஜேசுபாலன்.

உறவுகளை இழந்தவர்கள் ஒருபுறம், அதேபோல ஸ்டெர்லைட் ஆலையில் பணிபுரிந்தவர்கள் ஆலைபூட்டப்பட்டதால், வாழ்வாதாரத்தை இழந்துவிட்டதாகவும், ஆலை திறக்கவேண்டும் என வேட்பாளர்களிடத்தில் மனு கொடுப்பதாகவும் ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

தற்போது நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக கனிமொழி, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) சார்பாக புலனேஸ்வரன் ஆகியோர் பிரதான போட்டியாளர்களாக உள்ளனர்.

இவர்களில் திமுக, அமமுக உள்ளிட்டோர் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் காரணமாக ஆலை திறப்பிற்கு எதிராக பேசிவருகின்றனர்.

பாஜக வேட்பாளர் தமிழிசை, துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தாலும், 13 பேர் சுடப்படாமல் இருந்திருந்தால், 1,000 பேர் பலியாகியிருப்பார்கள் என கூறியது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தூத்துக்குடி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், திருச்செந்தூர், ஸ்ரீ வைகுண்டம் மற்றும் கோவில்பட்டி ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம்,ஸ்ரீ வைகுண்டம் பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின் தாக்கம் வாக்காளர்கள் மத்தியில் உள்ளது.

தூத்துக்குடி தொகுதி நிலவரம் என்ன?

மீதமுள்ள சட்டமன்ற தொகுதிகளில் அடிப்படை தேவைகள், சாலை வசதிகள் மற்றும் ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு கேட்கும் சிறு, குறு நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள், பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை முக்கிய பிரச்சனைகளாக பார்க்கப்படுகின்றன என்பதை தேர்தல் நிலவரத்தை அறிந்துகொள்ள நாம் சென்ற பகுதிகளில் சந்தித்த மக்களிடம் இருந்து பெற்ற கருத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியிலுள்ள விளாத்திகுளம் பகுதி ஏப்ரல் 18-ம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலையும் சந்திக்கிறது.

திமுகவை சேர்ந்த ஜெயக்குமார், அதிமுகவில் சின்னப்பன் மற்றும் சுயேட்சையாக அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், அமமுக சார்பில் கே.ஜோதிமணி ஆகியோர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

இங்குள்ள வாக்காளர்கள் ஸ்டெர்லைட் பிரச்னையைக் காட்டிலும், தங்களது தொகுதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தரும் சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதில் கவனம் கொண்டுள்ளனர். அதைப் பின்பற்றி மக்களவை வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளதை அறியமுடிகிறது.

விளாத்திகுளத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் தனது இரண்டு மகள்களுக்கு வேலைவாய்ப்பை கொடுக்கும் அரசுக்கு வாக்களிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறுகிறார்.

''என் பிள்ளைகளுக்கு வேலை வேண்டும். என் சக்திக்கு உட்பட்டு எல்லா கஷ்டங்களையும் நான் அனுபவித்தாலும் அவர்களை பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். அவர்கள் வாழ்க்கையை சரியாக அமைத்துக்கொண்டால் போதும். வேலை கிடைப்பது பெரிய பிரச்சனையாக உள்ளது,''என்கிறார் சண்முகம்.

படத்தின் காப்புரிமை TWITTER
Image caption அதிமுக கூட்டணி வேட்பாளர் தமிழிசை

ஜி.எஸ்.டி.-யால் கசப்பாகிய கடலைமிட்டாய்

கோவில்பட்டியை பொறுத்தவரை ஜிஎஸ்டி வரிவிதிப்பால் கடலை மிட்டாய் தயாரிப்பு நிறுவனங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டது.

18 சதவீதமாக அறிமுகம் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வரி, ஐந்து சதவீதமாக குறைக்கப்பட்டாலும், வரி விதிப்பில் இருந்து விலக்கு தேவை என மிட்டாய் தயாரிப்பை குடிசை தொழிலாக செய்வோர் கூறுகின்றனர்.

''கோவில்பட்டியில் கடலை மிட்டாய் தொழிலில் ஈடுபடும் சுமார் 200 நிறுவனங்கள் அவதிப்பட்டன. 1920-களில் இருந்து இங்கு மிட்டாய் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை வரிவிதிப்பில்லாமல் இருந்த பொருளுக்கு அதிரடியாக 18 சமவீத வரி விதித்தது அதிர்ச்சியாக இருந்தது. எட்டு மாதத்திற்கு பிறகு வரி குறைக்கப்பட்டாலும், ஒரு கிலோ ரூ. 120ஆக விற்கப்பட்ட மிட்டாய், தற்போது ரூ.140க்கு விற்கவேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடலை மிட்டாய் ஏழைகளின் முந்திரி, வெகு சாதாரணமாக பெட்டிக்கடைகளில் கிடைக்கக்கூடிய எளிய மக்களுக்கான மிட்டாய். வரி விலக்கு கட்டாயம் தேவை,''என்கிறார் கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கே.கண்ணன்.

படத்தின் காப்புரிமை Getty Images

நம்பிக்கையோடு பிரசாரம் செய்யும் அதிமுக

நம் பயணத்தில் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜுவை சந்திக்க நேர்ந்தது.

மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்துபேசிய அமைச்சர், '' அதிமுக கூட்டணிக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. மக்களிடம் வரவேற்பு உள்ளது. தூத்துக்குடி போராட்டத்தை அடுத்து, மக்களின் விருப்பத்திற்காக அரசு ஆலையை மூடிவிட்டது. எங்கள் எதிரணியில் இருப்பவர்கள் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளே போதும் அவர்களுக்கு எதிராக மக்கள் வாக்களிப்பார்கள். கிராமங்களில் குடிநீர் பிரச்னையை தீர்த்திருக்கிறோம். முன்னர் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர். இப்போது கோவில்பட்டியில் தண்ணீர் பஞ்சம் கிடையாது,''என்றார்.

ஆலைகளுக்கு தண்ணீர் வழங்க தடை

திருச்செந்தூர் பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தின் தாக்கம் ஓட்டுகளை தீர்மானிக்கும் பிரச்சனையாக மாறவில்லை என்று தோன்றுகிறது.

உள்ளூரில் மேம்படுத்தப்படாத குடிநீர் மற்றும் சாலை வசதி, பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட உடன்குடி மின் திட்டம் தொடங்கப்படாததும் பெரிய ஏமாற்றமாக உள்ளது.

வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்புவதாக இல்லை என்பதால் சிலர் நோட்டாவுக்கு வாக்களிப்பதைப் பற்றியும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

ஒட்டப்பிடாரம் தொகுதியில் இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதால், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் வேளையில், இங்கு மக்களவைத் தேர்தல் மட்டுமே நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது.

1962-ல் சட்டமன்ற தொகுதியான ஓட்டப்பிடாரம், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என எல்லா கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுத்த தொகுதியாக இருக்கிறது.

அதேவேளை, இந்த பகுதியைச் சேர்ந்தவர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால், தூத்துக்குடி போராட்டம் அவர்களின் வாக்குகளை தீர்மானிக்கும் ஒரு காரணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தூத்துக்குடி மக்களவை வேட்பாளராக போட்டியிடும் திமுக-வின் கனிமொழி மற்றும் பாஜகவின் தமிழிசை ஆகியோர் ஸ்ரீ வைகுண்டத்தில் எதிர்கொள்ளவேண்டிய முக்கிய பிரச்சனையாக தென்படுவது பாசன நீர் பிரச்சனை.

கடந்த 10 ஆண்டுகளாக தாமிரபரணி நீரில் தொழிற்சாலைகளுக்கு தினமும் 9.2 கோடி லிட்டர் நீரை லிட்டருக்கு ஒரு பைசா என விற்கும் அரசு, விவசாய பாசனத்திற்கு முறையாக நீர் வழங்கவில்லை என்பது இங்குள்ள விவசாயிகளின் முக்கியமான குற்றச்சாட்டு.

தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் அளிக்கப்படுவதற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் இன்னும் இறுதி தீர்ப்பு வரவில்லை என்றாலும், விவசாயிகளுக்கு இல்லாமல் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வழங்குவதற்கு பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ வைகுண்டத்தில் கடந்த இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுகவை ஆதரித்த வாக்காளர்கள் இந்த முறை மக்களவைத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.

அதேநேரம், திருச்செந்தூர் மற்றும் ஸ்ரீ வைகுண்டம் தொகுதிகளில் இந்து மத கோயில்கள் இருப்பதால், பாஜகவுக்கு வாக்குகள் சேர வாய்ப்புகள் உள்ளதாக உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தூத்துக்குடி தொகுதியில் எதிரொலிக்கும் வாய்ப்புகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் மணியிடம் கருத்து கேட்டோம்.

''தூத்துக்குடியில் எல்லா தொகுதியிலும் ஸ்டெர்லைட் பிரச்சனை மட்டுமே வாக்குகளை தீர்மானிக்கும் என்று சொல்லமுடியாது. தூத்துக்குடி நகரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு எதிராக இருந்தாலும், மற்ற இடங்களில் அந்தந்த பகுதி பிரச்சனைகளோடு மேலும் ஒரு காரணியாக ஸ்டெர்லைட் பிரச்சனை இருக்கலாம். இதை மட்டுமே கருத்தில் கொண்டு வாக்களிப்பவர்களாக மற்ற இடங்களில் உள்ள வாக்காளர்கள் இருக்க வாய்ப்பு குறைவுதான். ஸ்டெர்லைட் பிரச்னையை அரசு சரியாக கையாளவில்லை என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியள்ளது உண்மை,''என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :