தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி எவ்வளவு தெரியுமா?

இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "தமிழகத்தில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பணம், தங்கம், வெள்ளி எவ்வளவு தெரியுமா?"

தமிழகத்தில் இதுவரை ரூ.105.72 கோடி, 803 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை ரூ.105.72 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.227.45 கோடி மதிப்புள்ள 803 கிலோ தங்கம், 478 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. 5-ந் தேதி மட்டும் கோவையில் 149 கிலோ தங்கம் பிடிபட்டது. தூத்துக்குடியில் ரூ.37 லட்சம், தர்மபுரியில் ரூ.1.5 கோடி பிடிபட்டுள்ளது.

அனுமதி இல்லாமல் சுவர் விளம்பரம் செய்ததாக 3,246 வழக்குகளும், பணம், பரிசு பொருள் வழங்கியதாக 302 வழக்குகளும், தேர்தல் விதிமீறல் குற்றத்துக்காக 291 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தேர்தல் நடவடிக்கை தொடர்பாக 3,839 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் அளித்துள்ள புகார்களின் அடிப்படையிலும் வழக்குகள் பதிவாகியுள்ளன" என்று அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "சிவகங்கை தொகுதியில் போட்டியிட விரும்பிய ராகுல் காந்தி"

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ராகுல் காந்தி

ராகுல் காந்தி அமேதியை அடுத்து தென்னிந்தியாவில் இரண்டாவது தொகுதியாக சிவகங்கையில் நிற்கப் பரிசீலனை செய்தார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு உள்ள நிலையில், காங்கிரஸ் தலைமை தயங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன் மகன் கார்த்திகாக அதிகம் மெனக்கெடலில் ஈடுபட்டு சீட்டை வாங்கினார் என்று பேச்சு அடிபட்டது.

இதுகுறித்து பேசிய ப. சிதம்பரம், ''அதில் சர்ச்சை எதுவும் இல்லை. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான 24 மணி நேரத்தில் சிவகங்கை வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. ஏனெனில் வயநாடு, சிவகங்கை, கர்நாடகாவில் ஒரு தொகுதி ஆகிய மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக இருந்தார். அதனால்தான் இந்தத் தாமதம். சர்ச்சை எதுவும் இல்லை'' என்று அவர் கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது..

தினமணி: "சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயர்"

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டுவதற்கான உத்தரவு தமிழக அரசிதழில் வெளிவந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"சென்னையில் உள்ள பழம்பெரும் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட வேண்டுமென தமிழக அரசின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் சென்னை அருகே நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அதற்கான அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார். இந்த நிலையில், அது தொடர்பான உத்தரவை இந்திய ரயில்வே துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் ஒப்புதலுடன் மாநில அரசு வெளியிட்டது. இந்த உத்தரவு தமிழக அரசிதழிலும் வெளியாகியுள்ளது. இந்த அரசிதழை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ளார்.

அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமானது, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்ற பெயரில் அழைக்கப்படும் என தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "கிழக்கு கடற்கரை சாலை - விதிமுறைகள் தீவிரப்படுத்தப்படுமா?"

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் பிரதான சாலையான கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பொழுதுப்போக்கு மையங்களுக்கு விதிமுறைகளை வகுப்பதற்கு தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள நூற்றுக்கணக்கான பொழுதுப்போக்கு மையங்கள் மற்றும் உல்லாச விடுதிகளில் விதிமுறைகளை மீறி பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை முதலை பண்ணையில் உள்ள அரிய வகை கியூப முதலை ஒன்று அருகிலுள்ள உல்லாச விடுதியிலிருந்து எழுப்பப்பட்டு அதிக ஒலியின் காரணமாக இறந்துவிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கான குழு ஒன்றை அமைத்துள்ளதாக தமிழ்நாடு கடற்கரை பகுதி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :