பிரிவினைக்கு பிறகு ஒரு ஆண்டு கால அவகாசத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் - கதை சொல்லும் புத்தகம்

நவீன இந்தியத் தேர்தலின் சுவாரஸ்யமான கதை படத்தின் காப்புரிமை Getty Images

(மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான முக்கிய புத்தகங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம்)

புத்தகம் Every Vote Counts: The story of India's Elections
ஆசிரியர் நவீன் சாவ்லா
பக்கங்கள் 362
விலை: ரூ. 699
வெளியீடு: ஹார்ப்பர் காலின்ஸ்

இந்தியாவில் தேர்தல் நடைபெறும் முறை குறித்தும் அதன் வரலாறு குறித்தும் வெளிவந்த புத்தகங்கள் மிக மிகக் குறைவு. குறிப்பாக அங்கு தலைமைப் பதவியில் இருந்தவர்கள் எழுதியது மிகக் குறைவு. இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருந்த 23 பேரில் டி.என். சேஷன், ஜே.எம். லிங்கடோ, டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஒய். குரேஷி ஆகிய நால்வர் மட்டுமே தங்கள் அனுபவங்களைத் தொகுத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் சேர்ந்திருக்கிறார் 2009லிருந்து 2010வரை தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த நவீன் சாவ்லா.

நவீன் சாவ்லா 2009ஆம் ஆண்டின் மக்களவைத் தேர்தலை, தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்து நடத்தியவர். இந்தியா மாதிரியான பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் மிகப் பெரிய ஒரு தேசத்தில், பல்வேறு விதமான கலாசாரங்களையும் நிலப்பரப்புகளையும் கொண்ட ஒரு தேசத்தில் தேர்தலை நடத்துவது எவ்வளவு சவாலானது என்பதை தன் அனுபவத்திலிருந்து விளக்கியிருக்கிறார் நவீன் சாவ்லா.

தற்போதுள்ள இந்தியத் தேர்தல் முறையில் என்னவெல்லாம் சவால்கள் இருக்கின்றன, எப்படியெல்லாம் தேர்தல் ஆணையம் மேம்பட்டு, தன்னை மாற்றவந்திருக்கிறது என்று விவரிக்கும் முதல் அத்தியாயம் ஏற்படுத்திய பிரமிப்பு அடங்குவதற்குள் இரண்டாவது அத்தியாயம் பெரிய மலைப்பையே ஏற்படுத்திவிடுகிறது.

படத்தின் காப்புரிமை Amazon

இந்த அத்தியாயத்தில் 1951 நவம்பரிலிருந்து 1952 மார்ச் வரை நடத்தப்பட்ட இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலையும் அப்போது தேர்தல் ஆணையராக இருந்த சுகுமார் சென்னைப் பற்றியும் விவரிக்கிறது. சுகுமார் சென் தன்னைப் பற்றியும் தான் நடத்திய இரு பொதுத் தேர்தல்கள் குறித்து ஏதும் எழுதிவைக்காத நிலையில், அவருடைய பின்னணியை ஆராய்ந்து அவரது வாழ்க்கை, பணி குறித்த சித்திரத்தை மெல்லமெல்ல உருவாக்குகிறார் நவீன் சாவ்லா.

அதற்குப் பிறகு, அவர் நடத்திய முதலாவது பொதுத் தேர்தல். இந்தத் தேர்தலை நடத்த நேரு அளித்த கால அவகாசம் ஒரு ஆண்டு. தேசப் பிரிவினையின் வடுக்கள் கூட ஆறவில்லை, புதிதாக இணைக்கப்பட்ட சமாஸ்தானங்களின் பிரச்சனை, புதிதாக வாக்காளர் பட்டியலை உருவாக்குவது என பல சவால்களைக் கடந்து இந்தத் தேர்தலை நடத்திக் காட்டினார் சுகுமார் சென். அப்போது இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 16 சதவீதம் பேர்தான். மேலும் ப்ரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த மாகாணங்களில் இருந்தவர்களைத் தவிர, பலருக்கும் அதுதான் முதல் தேர்தல்.

இந்தத் தேர்தலுக்காக சுமார் 24 லட்சத்து 73 ஆயிரம் வாக்குப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பெட்டிகளை கோட்ரஜ், பாய்ஸ் உள்பட ஐந்து நிறுவனங்கள் தயாரித்து அளித்தன. தமிழ்நாடு, உ.பி., மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்களும் இந்தப் பெட்டிகளைத் தயாரித்து அளித்தன. இதற்காக 8,200 டன் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டது.

அந்த முதல் தேர்தலில், பல பெண்கள் தங்கள் உண்மைப் பெயர்களைத் தர மறுத்ததால், அவர்களது பெயர்களைச் சேர்க்க வேண்டாமென உத்தரவிட்டாராம் சுகுமார் சென். இந்தத் தேர்தலுக்காக 2 லட்சத்து 24 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்காளர் பட்டியலைத் தயாரிக்க 16,500 எழுத்தாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். பிரிவினையால் தேசம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறுவதென்பது, குடியுரிமையின் ஒரு அடையாளமாகவும் நிலைபெற்றது.

இந்த அத்தியாயத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரையும் அறிமுகப்படுத்துகிறார் நவீன் சாவ்லா. அவர் பெயர் ஷ்யாம் சரண் நாகி. 1951 அக்டோபரில் நடந்த தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தில் அவர் வாக்களித்தார் . அதுவே சுதந்திர இந்தியாவில் பதிவான முதல் வாக்கு. அவரது அனுபவத்தை நேரில் கேட்டு பதிவுசெய்திருக்கிறார் நவீன் சாவ்லா.

இதற்குப் பிறகு, 2009ல் தலைமைத் தேர்தல் ஆணையராக தான் நடத்திய தேர்தலைப் பற்றிய அனுபவக் குறிப்புகளைத் தருகிறார் நவீன் சாவ்லா. ஐந்து கட்டங்களாக நடந்த இந்தத் தேர்தலில் முதல் கட்டத் தேர்தல் முடிந்தவுடன் அப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபல்சுவாமி ஓய்வுபெற்றுவிட, நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராகிறார். இந்தத் தேர்தலில்தான் முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் அவர்களது புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.

படத்தின் காப்புரிமை Google

இதற்குப் பிறகு, பண பலம், ஆள் பலம் ஆகியவை எப்படி நம் தேர்தல் முறைக்குச் சவாலாக விளங்குகின்றன. பணம் கொடுத்து வெளிவரச் செய்யும் செய்திகள் எத்தகைய சிக்கலை ஜனநாயகத்தில் ஏற்படுத்துகின்றன, சமூக வலைதளங்கள் சமீப காலமாக தேர்தல்களில் ஏற்படுத்திவரும் தாக்கம் ஆகியவை குறித்து எழுதப்பட்டிருக்கும் அத்தியாயங்கள், தற்போதைய தேர்தல்களை புரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் செய்தியாளர்களுக்கும் மிக முக்கியமானவை.

தேர்தல்களின்போது நடைபெறும் மாவோயிஸ்ட் வன்முறை, 2008 ஜம்மு - காஷ்மீர் தேர்தலின் முக்கியத்துவம், அதில் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை விவரிக்கும் நவீன் சாவ்லா, புத்தகத்தின் இறுதிப் பகுதியில் தேர்தல் முறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களையும் பரிந்துரைக்கிறார்.

முதலாவதாக, ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும் குற்றங்களை இழைத்தவர்களை தேர்தலில் நிற்கத் தடை விதிப்பது. அடுத்ததாக, தேர்தலின்போது செலவழிக்கப்படும் பணத்தைக் கட்டுப்படுத்துவது, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கைதுசெய்யத்தக்க குற்றமாக்குவது, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உள்ள அரசியல் சாஸன பாதுகாப்பை, பிற இரு ஆணையர்களுக்கும் வழங்குவது ஆகியவை. இதில் கடைசி சீர்திருத்தம், நவீன் சாவ்லாவின் சொந்த அனுபவத்திலிருந்து புறப்பட்ட கோரிக்கை என்பது அடுத்த அத்தியாயத்தில் புலப்படுகிறது.

அதாவது 2006ல் என். கோபாலஸ்வாமி தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது நவீன் சாவ்லா தேர்தல் ஆணையராக இருந்தார். இந்த நிலையில், மார்ச் 16, 2006ல் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எல்.கே. அத்வானியும் மேலும் 204 பா.ஜ.க. எம்பிகளும் இணைந்து, நவீன் சாவ்லாவை நீக்க குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிடம் புகார் அளிக்கின்றனர். அந்தப் புகார் அரசுக்கு அனுப்பப்படுகிறது. ஆனால், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பிறகு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு, ஏதும் நடக்காத நிலையில் 2007ல் வழக்கைத் திரும்பப் பெறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை VIKRAM RAGHUVANSHI

இந்த நிலையில், 2008 ஜனவரியில் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபலசாமியைச் சந்திக்கும் பா.ஜ.கவினர் அவரிடமே அந்தப் புகாரை அளிக்கின்றனர். உடனடியாக நவீன் சாவ்லாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் என். கோபலஸ்வாமி, ஒரு வருடத்திற்குப் பிறகு அவரை பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்து அரசுக்கு கடிதம் அனுப்புகிறார். முடிவில் அவரது பரிந்துரை நிராகரிக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் தன் தரப்பை, தி ஹிந்து இதழில் வெளியான கட்டுரைகளின் வழியே நிறுவ முயற்சிக்கிறார் நவீன் சாவ்லா. மேலும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு உள்ள அரசியல் சாஸனப் பாதுகாப்பை பிற இரு ஆணையர்களுக்கும் அளிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இம்மாதிரி சிக்கல்கள் உருவாகாமல் தவிர்க்கலாம் என்கிறார் அவர்.

எதிர்பார்த்ததைப் போலவே, வாக்குப் பதிவு எந்திரங்கள் தொடர்பான சர்ச்சைகள், அதற்கான தீர்வுகள் குறித்தும் ஒரு அத்தியாயம் விவரிக்கிறது.

தவிர இந்தப் புத்தகம் சில பயன்தரத்தக்க புள்ளிவிவரங்களையும் தருகிறது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையரிலிருந்து தற்போதுவரையுள்ள ஆணையர் வரையிலானவர்களின் பெயர்கள், பதவிக்காலம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளில் தேர்தலின் போது நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல்களின் எண்ணிக்கை விவரங்கள் ஆகியவை பயன்தரத்தக்கவை.

இந்தியத் தேர்தல்களைப் புரிந்துகொள்ள, அவற்றில் உள்ள பிரச்சனைகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க இந்தப் புத்தகம் ஒரு துவக்கப்புள்ளியாக அமையும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :