நீலகிரி மக்களவைத் தொகுதி - திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி

  • விக்னேஷ்.அ
  • பிபிசி தமிழ்
தேயிலைத் தோட்டத் தொழிலாளி.

பட மூலாதாரம், Getty Images

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் திமுகவின் ஆர். ராசா நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா அதிமுகவின் தியாகராஜனைவிட 2,05,823 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

நீலகிரி மக்களவைத் தொகுதி நீலகிரி மாவட்டத்தில் மட்டுமல்லாது, அண்டை மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பரவி விரிந்துள்ளது.

பெரும்பாலும் மலைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் சமவெளிகளும் கணிசமான அளவில் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், குன்னூர் (தனி), கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளையும், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவிநாசி (தனி), கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது நீலகிரி மக்களவைத் தொகுதி.

மூன்று தனி சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள நீலகிரி மக்களவைத் தொகுதியும் 2009 முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தனித் தொகுதியாக உள்ளது.

6,57,991 ஆண்கள், 6,91,684 பெண்கள் மற்றும் 65 மூன்றாம் பாலினத்தவர்கள் என இந்தத் தொகுதியில் 13,49,740 வாக்காளர்கள் உள்ளனர்.

1990கள் வரை காங்கிரஸ் பலம் வாய்ந்த தொகுதியாக இருந்த நீலகிரி, தற்போது கலவையான அரசியல் களமாக உள்ளது. சமீப ஆண்டுகளில் திராவிடக் கட்சிகளும் இங்கு நன்றாக வேரூன்றியுள்ளன.

திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் தமிழகத்தின் எட்டு மக்களவைத் தொகுதிகளில் நீலகிரியும் ஒன்று.

நீலகிரி தொகுதியின் முக்கியப் பிரச்சனைகள்

தேயிலைத் தோட்டங்களும், தேநீர்த் தூள் தொழிற்சாலைகளும் அதிக அளவில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் முக்கிய வருவாய் மற்றும் வேலைவாய்ப்புக்கான ஆதாரமாக இந்தத் தொழில்களே உள்ளன. தேயிலைத் தொழிலும் தற்போது சரிவைச் சந்தித்து லாபம் குறைந்து வருவதால், அந்தத் தொழிலில் இருந்து கணிசமானவர்கள் வெளியேறி வருகின்றனர். எனவே இது தொழிற்பிரச்சனையாக மட்டுமில்லாமல் வேலைவாய்ப்புப் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது.

சுற்றுலாத் துறை வேகமான வளர்ச்சி அடைந்து வருவதும் தேயிலைத் தோட்டங்கள் சுருங்க முக்கியக் காரணமாக உள்ளது. சுற்றுலா சார்ந்த கட்டுமானங்களுக்காக தேயிலைத் தோட்டங்கள் மாற்றப்படுவது இதற்கு ஒரு முக்கியக் காரணமாக உள்ளது.

சுற்றுலா பெருகி வந்தாலும் அதற்கேற்ற உள்கட்டமைப்புகள் போதிய அளவில் இல்லாததால், இயற்கை எழில்கொஞ்சும் நீலகிரி பெரும் சூழலியல் அழுத்தங்களை எதிர்கொண்டுள்ளது.

சுருங்கும் வனப்பரப்பு, குப்பைகளில் உணவு தேடுவது உள்ளிட்ட காரணங்களால் குடியிருப்புகளுக்கு வரும் காட்டு விலங்குகள் , அதனால் உண்டாகும் மனித - விலங்கு மோதல் என இங்குள்ள பிரச்சனைகள் ஒரு சங்கிலித்தொடராக உள்ளன.

மலைப் பகுதிகளில் அனைத்து இடங்களிலும் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததும் இங்கு ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.

நீலகிரித் தொகுதியில் மலைகளும், அணைகளும் மட்டுமே நிரம்பியுள்ளன என்று கூற முடியாது. அன்னூர், அவிநாசி உள்ளிட்ட சமவெளிப்பகுதிகளில் மழை இன்மை மற்றும் நிலத்தடி நீர் குறைந்தது ஆகியன குடிநீர் மற்றும் வேளாண் தேவைகள் ஆகிய இரண்டுக்கும் சிக்கலாக உள்ளன.

பழங்குடியின மக்கள் கணிசமாக இருக்கும் இந்தத் தொகுதியின் நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில், படுகர் இன மக்கள் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ளனர்.

சமீப ஆண்டுகளில் அவிநாசி - அத்திக்கடவு நிலத்தடிநீர் செறிவூட்டல் திட்டத்தை நிறைவேற்ற நடந்த போராட்டங்கள் பல முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் வந்து ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு அழுத்தம் தரக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய மக்கள் போராட்டமாக இருந்தது.

இந்தத் திட்டத்தால் பயன்பெறக் கூடிய கோவை-ஈரோடு-திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்கள் சந்திக்கும் பகுதிகள் நீலகிரி மக்களவைத் தொகுதியில்தான் உள்ளது.

கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு, இந்தத் திட்டம் தொடக்கப்பட்டாலும், அது செயல்படுத்தப்படும் விதமும் இங்கு தற்போது அரசியல் பேசுபொருளாக உள்ளது.

சமீபத்திய தேர்தல்கள்

திமுக சார்பில் இங்கு இரு முறை போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா இப்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

தற்போது அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கோபாலகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல், தியாகராஜன் என்பவரை அதிமுக நிறுத்தியுள்ளது.

2009இல் இங்கு மதிமுக வேட்பாளரை வென்ற ராசா, 2014இல் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். 2ஜி வழக்கில் அவர் குற்றம் சாட்டப்பட்டிருந்தது அதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

2016இல் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் மேற்குத் தழிழகத்தின் நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகதான் பெரும்பான்மை இடங்களை வென்றது.

நீலகிரியில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது. ஒன்றில் திமுகவும், ஒன்றில் காங்கிரசும் வென்றன. எனிமும், நீலகிரி மாவட்டத்துக்கு வெளியே உள்ள அவிநாசி, மேட்டுப்பாளையம், பவானிசாகர் ஆகிய தொகுதிகளை அதிமுகதான் வென்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :