பாஜக தேர்தல் அறிக்கை - சபரிமலை நம்பிக்கை பற்றி விரிவாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்போம்

பாஜக படத்தின் காப்புரிமை Getty Images

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜகவின் பிற முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜெட்லி ஆகியோர் இன்று (திங்கள்கிழமை) டெல்லியில் பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

"ஐந்து வருடங்களில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு 50 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது." என்று தெரிவித்தார் அமித் ஷா.

ஜம்மு காஷ்மீர்

"ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பு சட்டத்தின் 370-வது பிரிவை நீக்கவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்.

அரசமைப்பு சட்டத்தின் 35A பிரிவு, காஷ்மீரில் நிரந்தரமாக குடியிருப்போர் அல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக பாரபட்சமாக இருப்பதால் அதை நீக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இந்த சட்டப் பிரிவு தடையாக உள்ளது என்று நம்புகிறோம். காஷ்மீர் பண்டிட்டுகள் பாதுகாப்பாக திரும்புவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுப்போம். மேற்கு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர், சம்ப் பகுதிகளில் இருந்து அகதிகளை மறுகுடியேற்றம் செய்வதற்காக நிதியுதவி வழங்குவோம்" என்று பாஜக தேர்தல் அறிக்கை கூறுகிறது.

சபரிமலை

"சபரிமலை தொடர்புடைய நம்பிக்கை, மரபு, வழிபாடு ஆகியவற்றை விரிவாக உச்சநீதிமன்றத்தின் முன் எடுத்துரைப்பதை உறுதி செய்வதற்காக எல்லா முயற்சிகளும் எடுக்கப்படும். நம்பிக்கை தொடர்புடைய பிரச்சனைகளில் அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு வழங்கப் பாடுபடுவோம்" என்று பாஜக-வின் தேர்தல் அறிக்கை தெரிவிக்கிறது.

பாஜக தேர்தல் அறிக்கையின்முக்கிய அம்சங்கள்

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும், முத்தலாக்கிற்கு எதிரான சட்டம் கொண்டுவந்து முஸ்லிம் பெண்களுக்கான நீதி உறுதி செய்யப்படும் ஆகிய சில வாக்குறுதிகள் அதில் இடம் பெற்றுள்ளன.

அந்த அறிக்கையில் இருந்த பிற முக்கிய அம்சங்கள்:

  • பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின்படி விவசாயிகளுக்கு அதிகப்படியான வருமானம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • வட்டியில்லாமல் ஒரு லட்சம் வரை விவசாயிகளுக்கு குறுகிய காலக் கடன் வழங்கப்படும்.
  • அனைத்து குடும்பங்களுக்கும் வீடு கிடைக்குமாறு செய்யப்படும்.
  • 100% அனைத்து வீடுகளுக்கும் மின் வசதி ஏற்படுத்தி தரப்படும்.
  • அனைவருக்கும் வங்கி கணக்கு இருப்பது உறுதி செய்யப்படும்.
  • அடுத்த ஐந்தாண்டுகளில் 60 ஆயிரம் கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்போம்.

ஸ்மார்ட் ரயில்வே நிலையங்கள்

  • ஒவ்வொரு குடும்பங்களிலிலும் கழிப்பிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்.
  • வர்த்தகம் செய்ய ஏதுவான நாடாக இருக்கும் பட்டியலில் இந்தியாவை மேலும் முன்னேற்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • இந்தியா முழுவதும் ஸ்மார்ட் ரயில்வே நிலையங்கள் உருவாக்கப்படும்.
  • ஒவ்வொரு தனி நபருக்கும் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வங்கி சேவைகளை அணுகும் வசதி செய்து தரப்படும்.
  • நீதிமன்றங்கள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் நீதிமன்றங்கள் நவீனமயமாக்கப்படும்.
  • டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்கப்படும்.

20 ஆயிரம் கோடி நிதி

  • புதிய தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி நிதித் தொகுப்பு ஒன்று உருவாக்கப்படும்.
  • காற்று மாசை குறைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படும்.
  • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் தொடங்கப்படும்.
  • கிராமப்புறங்களில் ஏழ்மையான வீடுகளுக்கும் எல்பிஜி தொடர்பு கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • வரி விகிதங்கள் குறைக்கப்படும் மற்றும் அதிகப்படியான வரி வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்படும்.

''நமது பொருளாதார கொள்கை வரி விகிதத்தை குறைப்பது மற்றும் இணக்கத்தை மேம்படுத்துவதற்கான கொள்கை மூலம் வழிநடத்தப்படுகிறது. இதன் மூலம் வரி அடிப்படை அதிகரிக்கிறது.

மேம்பட்ட இணக்கத்தன்மை மற்றும் அதிக வரி விதிப்பு ஆகியவற்றின் மூலம், மொத்த உள்நாட்டு உற்பத்தி மீதான வரி 12% ஆக உயர்ந்துள்ளது, 2013-14 ஆண்டு காலகட்டத்தில் இது 10.1% ஆக இருந்தது'' என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்