பூச்சி கொல்லி தெளித்து விவசாயி மரணம்: இப்படியும் சாகிறார்கள் உழவர்கள் - முல்லை திணையின் கதை

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
பூச்சிக் கொல்லி மரணம்

2019 மக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பளம் அருகே கழிப்பறை இல்லாமல் தவிக்கும் மக்கள் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.

அதன் தொகுப்பு இது.

திணை: முல்லை | இடம்: பெரம்பலூர்

விவசாய தற்கொலைகள் தமிழகத்திற்கு புதிதல்ல. கடன் தொல்லையால், வெள்ளாமை பொய்த்ததால் தமிழ் நிலத்தில் விவசாயிகள் பூச்சி மருந்து அருந்தி மரணித்து இருக்கிறார்கள். ஆனால், இப்போது பூச்சி மருந்து தெளிக்கும் போதும் இறக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

ஆட்கொல்லி மருந்து

ஆனந்தியிடம் சொல்ல ஒரு கதை இருக்கிறது அது துயரத்தின் கதை, அறியாமையின் கதை, அலட்சியத்தின் கதை, அது தன் கணவர் செல்வத்தை பறிகொடுத்த கதை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த செல்வம் பெரம்பலூர் ஒதியத்தில் இருக்கும் தனது வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்கும் போது, அதிகமான விஷத்தை எதிர் கொண்டதால் வயலில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே மயங்கி விழுந்திருக்கிறார். இரண்டு நாட்கள் தீவிரமாக சிகிச்சை அளித்தும் பலனின்றி தீவிரமான வயிற்றுப் போக்கால் இறந்திருக்கிறார்.

படக்குறிப்பு,

ஆனந்தி

ஆனந்தி, "அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. பூச்சி மருந்து தெளிக்கும் போது காற்றில் பரவிய விஷத்தை சுவாசித்தாலேயே அவர் இறந்தார்." என்கிறார்.

மகாராஷ்ட்ராவில் இதுபோன்ற மரணங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. ஆனால், தமிழகத்திற்கு இவ்வாறான மரணங்கள் புதிது.

அரசு ஆனந்திக்கு நிவாரணம் வழங்கியது. மனித உரிமை ஆணையமும் இதில் தலையிட்டு இந்த மரணங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை கோரியது.

திக்கற்று நிற்கிறேன்

"கொஞ்சம் நிலம், குழந்தைகள் என சந்தோஷமாகதான் இருந்தோம். என்னை அவர் கைகளில் வைத்து தாங்கினார். சொந்த நிலத்தில் வேலை பார்க்க கூட அவர் அனுமதித்தது இல்லை. அவர் செத்த பிறகு திக்கற்று நிற்கிறேன். ஒரு நாளை கடப்பது கள்ளி செடியில் நடப்பது போல இருக்கிறது" என வெள்ளந்தியான மொழியில் கூறுகிறார் ஆனந்தி.

பூச்சி மருந்து தெளிக்கும் போது தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி இருக்க வேண்டும் தானே? என்ற கேள்விக்கு, "இதுவெல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும்? இதையெல்லாம் எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?" என்கிறார் அழுதபடியே.

இது ஆனந்தியின் நிலைமட்டும் அல்ல அந்த பகுதியில் பூச்சி மருந்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினர் நிலை இதுவாகதான் இருக்கிறது.

பூச்சிக் கொல்லிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற அதீத ஆர்வத்தில் விவசாயிகள் அதிகமாக பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதாகவும், இரண்டு மூன்று பூச்சிக் கொல்லியை கலந்து தெளித்ததாகவும் கூறி இருந்தது அப்போது இந்த மரணங்கள் குறித்து பேசிய மாவட்ட நிர்வாகம்.

மண்ணுக்கேற்ற பயிர்

இந்த மரணங்கள் வெளி உலகத்திற்கு தெரிய காரணமான செயற்பாட்டாளர் ரமேஷ் கருப்பைய்யா மண்ணுக்கேற்ற விவசாயம் செய்யாமல் போதுதான் இதற்கு காரணம் என்கிறார்.

படக்குறிப்பு,

ரமேஷ் கருப்பைய்யா

மேலும் அவர், "அப்படி மண்ணுக்கேற்ற விவசாயம் செய்யாமல் போனதற்கும் யார் காரணம்? காலம் காலமாக காக்கா சோளம், கம்பு, கேழ்வரகு என விவசாயம் செய்துவந்த மக்களிடம் பி.டி பருத்தியை திணித்தது யார்? அரசு இயந்திரம்தானே? அவர்கள்தானே அதிகம் உரம் மற்றும் பூச்சி கொல்லி தேவைப்படும் பயிர்களை விவசாயிகளிடம் அறிமுகப்படுத்தினார்கள்"என்கிறார் அவர்.

"எப்போதும் நஞ்சை நில விவசாயிகளின் பிரச்சனைதான் பெரிதாக பேசப்படுகிறது. மானாவாரி நிலத்தில் பயிர் செய்யும் முல்லை நில மக்களின் தேவைகள் அறியப்படுவதும் இல்லை. அவர்களின் துயரங்கள் களையப்படுவதும் இல்லை. பொதுவான ஒரு திட்டத்தை இந்த மக்கள் மீது திணிக்காமல், இந்த நிலத்தை புரிந்து கொண்டு அதற்கான திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவதுதான் நிரந்திர தீர்வாக இருக்கும்" என்கிறார் ரமேஷ் கருப்பைய்யா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :