பிரதமர் மோதியின் மணிப்பூர் தேர்தல் பேரணியில் இருந்து மக்கள் எழுந்து சென்றது ஏன்? #BBCFactCheck

நரேந்திர மோதி படத்தின் காப்புரிமை Getty Images

மணிப்பூரின் இம்பால் நகரில் பிரதமர் நரேந்திர மோதியின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் மிகவும் பரவலானது. அதில், கூட்டத்தில் இருந்து எழுந்து போகும் மக்களை, போலீசார் கதவுக்கு வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்துவதை பார்க்க முடிகிறது.

இந்த வீடியோவுடன் '2014இல் மோதியின் கூட்டத்துக்கு மக்கள் வந்தார்கள், 2019இல் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவேண்டியிருக்கிறது" என்ற வாசகமும் அதில் காணப்படுகிறது.

'மணிப்பூர் டாக்ஸ்' என்ற உள்ளூர் வலைதளமும் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.  "மோதியின் நிகழ்ச்சியில் மக்களை தடுத்து நிறுத்தி வைக்க போலீஸ் கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.  போலீசார் தடுப்புகளைப் போட்டு அவர்களை கடுமையாக கட்டுப்படுத்த வேண்டியிருந்தது. இது வெட்கக்கேடு" என்றும் இந்த வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

டிவிட்டரில் வெளியான இந்த பதிவு மூன்று லட்சத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.  நூற்றுக்கணக்கானோர் இந்த ட்வீட்டை மீண்டும் பகிர்ந்துள்ளார்கள்.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை ஏன் சரிபார்க்கவேண்டும்?

மோதியின் உரையில் அதிருப்தியடைந்தவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற விரும்பியதாக இந்த வீடியோவை பேஸ்புக்கில் பகிர்ந்தவர்கள் தெரிவித்துள்ளவர்கள்.

போலீஸார் கூட்ட மைதானத்தில் இருந்து வெளியேறும் வாயில்களை மூடிவிட்டதாகவும் ஓரிரண்டு வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியானது.  அதில், இரும்பு கதவுகளின் மேல் ஏறி மைதானத்தில் இருந்து வெளியே செல்வதற்கு பெண்களும் முயற்சிக்கின்றனர்.

2019 ஏப்ரல் 7-ம் தேதியன்று மணிப்பூர் தலைநகர் இம்பாலில் என்ன நடந்தது? கூட்டம் நடைபெற்ற மைதானத்தில் மோதியின் உரையில் அதிருப்தி அடைந்து மக்கள் வெளியேறியது உண்மைதானா என்பதை பிபிசி உண்மை கண்டறியும் குழு ஆராய்ந்தது.

கூட்டம் நடைபெற்ற நேரம்

மணிப்பூரில் இம்பாலின் கிழக்கு மாவட்டத்தில் உள்ள கங்லா அரண்மனையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் கங்ஜேயிபுங் மைதானத்தில் நரேந்திர மோதியின் கூட்டம் நடைபெற்றது.

பிரதமர் மோதியின் பிரசார திட்டத்தின்படி, ஏப்ரல் ஆறாம் தேதி அன்று மாலை 4.10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவேண்டும்.

ஆனால், மணிப்பூர் மாநில பாஜகவின் போஸ்டரில் 2.30 மணி என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வு பற்றி செய்தி வெளியிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமையன்று அங்கு சென்றிருந்த பத்திரிகை நிருபர்களிடம் பிபிசி பேசியது.  காலை 10 மணியில் இருந்தே மக்கள் நிகழ்வு நடைபெறும் மைதானத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு, மணிப்பூரில் முனைப்புடன் செயல்படும் தீவிரவாத அமைப்பு ஒன்று அங்கு கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவரின் வருகைக்கு எதிராக இதுபோன்ற கதவடைப்பு போராட்டங்களை ஏற்கனவே நடத்தியிருக்கிறது அந்த அமைப்பு.  

பாஜகவுக்கு சவால்

பிரதமர் மோதியின் பேரணி பற்றி மணிப்பூர் மாநில பிபிசி செய்தியாளர் திலீப் குமாரிடம் கவலை தெரிவித்தார் பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய் சந்த்ரா.

"பாதுகாப்பு கவலைகளைத் தவிர, கதவடைப்பின் காரணமாக மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் மக்கள் வந்திருந்தனர்.  எனவே இரண்டரை மணிக்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால், தொலைதூர கிராமங்களில் இருந்து வந்த மக்கள் காலை 11 மணிக்கே வந்து சேர்ந்துவிட்டார்கள்" என்று விஜய் சந்த்ரா தெரிவித்தார்.

பிரதமர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களிடையே வரலாம்.  அவர் வரும்போது எல்லோரும் எழுந்து நின்று வரவேற்க வேண்டும் என்று பொதுக்கூட்ட மேடையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தவர்கள் அறிவித்ததாக சில உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

நேரமாக ஆக மக்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.  மணிப்பூரில் மாலை ஐந்து மணிக்கே சூரியன் அஸ்தமனமாகிவிடும்.

சில இணைய ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, மக்களின் சலசலப்பை பார்த்த மாநில அமைச்சர் தோங்கம் விஸ்வ்ஜித் பாடல்களை இசைக்க ஏற்பாடு செய்தார்.

மணிப்பூர் மற்றும் வடகிழக்கு இந்தியாவிற்கு மோதி என்ன செய்தி சொல்லப்போகிறார் என்பதை கேட்க கொஞ்சம் பொறுமையாக இருங்கள் என்று அமைச்சர் தோங்கம் விஸ்வ்ஜித் பேசுவது ஒரு யூடியூப் வீடியோவில் காணப்படுகிறது.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்ட நேரத்தில் இருந்து ஒன்றரை மணி நேரம் தாமதமாக பிரதமர் வந்தார்.  எனவே சிலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினார்கள்.

 போலீசாரின் கெடுபிடி

ஞாயிற்றுக்கிழமை மாலை 4.37 மணிக்கு மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் சில புகைப்படங்களை ட்வீட் செய்திருந்தார்.

"பெருமளவிலான மக்கள் மரியாதைக்குரிய பிரதமருக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்" என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

"காலையில் இருந்து காத்துக் கொண்டிருந்தவர்கள் சோர்வடைந்துவிட்டார்கள்.  இருள் கவியத் தொடங்கியதால் கவலையடைந்தார்கள்.  பிரதமர் வந்தால், அவர் உரையை முடித்துவிட்டு சென்ற பிறகுதான் வெளியே செல்லமுடியும்.  எனவே, அதற்கு முன்னதாகவே கிளம்பிவிடலாம் என்று சிலர் வாயிலுக்கு செல்ல முயற்சித்தனர்.  பாதுகாப்பு காரணங்களுக்காக போலீசார் அவர்களை தடுத்தார்கள்". என்று பாஜக செய்தித் தொடர்பாளர் வியஜ் சந்த்ரா தெரிவித்தார்.

தங்கள் விருப்பத்தின்படி கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்ற மக்களை, போலீசார் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இந்த கேள்விக்கு போலீஸ் கமிஷனர் ஜோகேஷ் சந்த்ரா ஹாவுபிஜன் எந்த பதிலும் சொல்லவில்லை.

இறுதியில் மாலை 5.23 மணிக்கு அந்த மைதானத்தில் உரையாற்றத் தொடங்கிய பிரதமர், 22 நிமிடங்கள் பேசினார். 

பிரதமரின் உரை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மக்கள் வெளியேறியதாக பகிரப்பட்ட வீடியோக்களில் கூறப்பட்டாலும், பிரதமர் பேசத் தொடங்குவதற்கு முன்னதாகவே மக்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றதாகவே நமது ஆய்வில் தெரிகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :