கமல்நாத்: ம.பி. முதல்வரின் செயலர் வீட்டில் பணக்குவியல் இருப்பதாக காட்டும் வீடியோ உண்மையா? போலியா? #Factcheck

'கருப்புப் பணத்தை' கண்டுபிடித்தார்களா 'செளகிதார்கள்'? படத்தின் காப்புரிமை SM Viral Post

வலதுசாரி ஆதரவாளர்கள் சிலர், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்தின் செயலரின் வீட்டில் இருந்து வருமானவரித் துறையினரின் சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகள் என்று சொல்லி ஒரு காணொளியை பகிர்ந்து வருகிறார்கள்.

வண்ணமயமான ரூபாய் நோட்டுகள் ஒரு டிராலியில் வைக்கப்பட்டிருக்கிறது. மற்றொரு புறத்தில் வைக்கப்பட்டுள்ள பச்சை மற்றும் இளஞ்சிவப்பு நிற நோட்டுகள் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் நெருப்பு வைக்க முயற்சிகள் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

சனிக்கிழமை நள்ளிரவு சுமார் இரண்டரை மணியளவில் மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் செயலர் பிரவீண் கக்கட் மற்றும் கமல்நாத்தின் முன்னாள் ஆலோசகர் ஆர்.கே.மிக்லானியின் பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது.

வருமான வரித்துறை மூத்த அதிகாரிகளின் கருத்துப்படி, கடந்த இரு நாட்களில் போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி மற்றும் என்.சி.ஆர் பகுதிகளில் மொத்தம் 52 இடங்களில் இது தொடர்பான சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனைகளில் சுமார் 14.6 கோடி ரூபாய் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. மிகப்பெரிய ஊழல் மூலமாக 281 கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது.

ஆனால் சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ, வருமான வரித்துறை சோதனைகளுக்கு பின்னர் எடுக்கப்பட்டதில்லை. அது போலியானது.

படத்தின் காப்புரிமை Twitter

போலி வீடியோ

டிவிட்டரில் @RohiniShah73 என்ற கணக்கில் இருந்து அந்த பழைய வீடியோ பகிரப்பட்டு, அதில் தவறான விவரங்கள் தெரிவிக்கப்பட்டிருப்பது, தகவலை பகிர்ந்தவரின் உள்நோக்கத்தை கேள்வி எழுப்புகிறது.

சுமார் 60 ஆயிரம் முறை அந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான முறை பகிரப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதியும், பாஜக பொதுச்செயலர் குல்ஜீத் சிங்கும் இந்த டிவிட்டரை பின்தொடர்பவர்கள்.

படத்தின் காப்புரிமை Twitter

' செளகிதார் ரோஹிணி' என்ற பெயரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பகிர்ந்த பெரும்பாலானவர்களின் பெயரின் முன்னர் ' செளகிதார்' என்று சேர்க்கப்பட்டுள்ளது.

பாஜக சமூக ஊடகங்களில் "நானும் செளகிதார்" என்ற பிரசாரம் தொடங்கிய பிறகு, பாஜக ஆதரவாளர்கள் பலர் தங்கள் பெயரின் முன்பு செளகிதார் என்ற வார்த்தையை சேர்த்துக் கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த கணக்குகளில் எத்தனை போலியானவை அல்லது அசலானவை என்று சொல்வது சிரமமமானது; இந்த உண்மையை பிபிசியால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

ஆனால், வைரலான வீடியோவை பகிர்ந்தவர்கள் கூறியது போலியானது என்பதை கூற முடியும்.

படத்தின் காப்புரிமை Instagram

டிவிட்டரைத் தவிர வலதுசாரி ஆதரவாளர்கள், 'நமோ ஃபேன்" "நரேந்திர மோதி 2019" போன்ற பேஸ்புக் பக்கங்களிலும் இதுபோன்ற வீடியோக்களை தவறான நோக்கத்துடன் பகிர்கின்றனர். வாட்ஸ்-ஏப் செயலி மூலமாகவும் இந்த வீடியோக்கள் பகிரப்படுகின்றன. ஏன், பிபிசிக்கே வாட்ஸ்-அப் மூலம் இந்த வீடியோ அனுப்பப்பட்டுள்ளது.

எனவே இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை கண்டறிய நினைத்தோம்.

வீடியோவின் உண்மைத்தன்மை

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோ 2018 பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டது.

இந்த வீடியோவில் காணப்படும் பணக்குவியல் உண்மையில் ஒரு கலைப்படைப்பு. மரப்பலகையில் பென்சிலால் வரையப்பட்ட ஓவியம். ஸ்பெயின் ஓவியக்கலைஞர் அலேஜாந்த்ரோ மோங்கே வரைந்த ஓவியம் இது.

இது 3D ஓவியம் என்று ஓவியர் சொல்கிறார். உண்மையில் இது ஓவியம் அல்ல, பழைய நோட்டுக்களின் குவியல் என்றே தெரிகிறது.

ஸ்பெயினில், 2018 பிப்ரவரி 21 முதல் 25 வரை நடைபெற்ற 'Art Madrid Fair' கண்காட்சியில் இந்த கலை படைப்பும் வைக்கப்பட்டது. அந்த கண்காட்சியில் ஓவியத்தை யாராவது வீடியோ எடுத்திருக்கலாம் என்று அலெஜாந்த்ரோ மோங்கோ ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு கொடுத்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

இந்த ஓவியம் உட்பட தன்னுடைய கலைப்படைப்பு தொடர்பான பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் அவர் இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Instagram/monge_art

இந்த ஆண்டு பிப்ரவரியில் அலெஜாந்த்ரோ மாங்கோ இந்த வீடியோவை மீண்டும் இன்ஸ்ட்ராகிராமில் பகிர்ந்துள்ளார். மேலும், 500 யூரோ ரூபாய் நோட்டை தனது கைகளில் ஓவியமாக வரைந்திருப்பதையும் பார்க்கமுடிகிறது.

ஓவியமாக வரையப்பட்ட ரூ. 500 நோட்டுகள்

"இண்டர்நெட்டில் எந்த விஷயம் எப்போது வைரலாகும் என்பது யாருக்குமே தெரியாது. மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியாமல், வருவதை எல்லாம் பகிர்ந்து விடுகிறார்கள்" என்று அலெஜாந்த்ரோ மாங்கோ தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ பகிரப்படுவதோ, சம்பந்தப்படுத்தி பேசப்படுவதோ இது முதல் முறையல்ல. இந்தியாவிற்கு முன்பே, ரஷ்யா, கேமரூன், ஸ்பெயின், பாகிஸ்தானிலும் பல விதமான புரளிகளை பரப்புவதற்கு அடிப்படையாக இந்த வீடியோ பயன்படுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Instagram

"பணக்குவியல்" என்ற இந்த ஓவியத்தின் வீடியோவை எந்தவொரு தனிமனிதருக்கும் அல்லது அமைப்புக்கும் எதிராகவோ பயன்படுத்துவது முதல் முறையல்ல என்பதும், இது கடந்த சில தினங்களில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதும் எங்கள் உண்மை கண்டறியும் சோதனையில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்