தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மூவரை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை - அதிமுகவின் கணக்கு என்ன?

ஆட்சியைத் தக்கவைக்குமா அ.தி.மு.க.?

பட மூலாதாரம், ARUN KARTHICK

டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருக்கிறார்.

இது அதிமுகவுக்கு எந்த வகையில் பலனளிக்கும்? அதிமுக எத்தனை தொகுதிகளில் வெல்ல வேண்டும்?

22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தல்களோடு சேர்த்து இடைத்தேர்தலை அறிவித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். மிகக் குறைந்த பெரும்பான்மையோடு ஆட்சியைக் கையில் வைத்திருக்கும் அ.தி.மு.க., ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க எத்தனை தொகுதிகளில் வென்றாக வேண்டும்? தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும் வாய்ப்பு உள்ளதா?

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. 136 இடங்களைக் கைப்பற்றியது. இதில் மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த தனியரசு, முக்குலத்தோர் புலிப்படையைச் சேர்ந்த கருணாஸ் ஆகியோரும் அடக்கம்.

ஆனால், இவர்கள் மூவருமே அ.தி.மு.கவின் சின்னமான இரட்டை இலைச் சின்னத்திலேயே நின்று வெற்றிபெற்றதால், இவர்களும் அ.தி.மு.க. உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அ.தி.மு.கவின் கொறடா உத்தரவு இவர்களுக்கும் பொருந்தும்.

தி.மு.க. கூட்டணி

தி.மு.க. கூட்டணியைப் பொறுத்தவரை அக்கட்சி 98 இடங்களைக் கைப்பற்றியது. இதில் தி.மு.க. 89 இடங்களையும் காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்தையும் பெற்றிருந்தன.

2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்த நிலையில், அ.தி.மு.கவின் பலம் 135ஆகக் குறைந்தது. இதற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வமும் அதன் பின் எடப்பாடி பழனிச்சாமியும் முதல்வராகப் பதவியேற்றனர். ஆனால், கட்சிக்குள் பழனிச்சாமி தரப்பிற்கும் தினகரன் தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட பிளவால் தினகரன் பிரிவைச் சேர்ந்த 19 பேர் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை நீக்குமாறு ஆளுனரிடம் மனு அளித்தனர்.

பட மூலாதாரம், THE INDIA TODAY GROUP

இவர்கள் பத்தொன்பது பேரையும் தகுதி நீக்கம் செய்யப்போவதாக விளக்கம் கேட்டு சபாநாயகர் பி. தனபால் கடிதம் அனுப்பினார். அதில் எஸ்.டி.கே. ஜக்கையன் அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் அவரைத் தவிர்த்த 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் தனபால். இதனை நீதிமன்றமும் உறுதிசெய்தது.

இதனால், அக்கட்சியின் பலம் சட்டப்பேரவையில் 117ஆகக் குறைந்தது. இதுதவிர, திருப்பரங்குன்றம் தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.கே. போஸ், சூலூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் உயிரிழந்ததால் அக்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 115ஆகக் குறைந்துள்ளது.

சட்டப்பேரவையில் தற்போது 212 உறுப்பினர்களே உள்ளதால், தற்போது அவையில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் நீடிக்கிறது.

தி.மு.கவைப் பொறுத்தவரை 89 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதி உயிரிழந்ததால் அவர்களது பலம் 88 ஆக குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

வெற்றிபெற்றது செல்லாது

2016ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் 18 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தேர்தல் கமிஷனிடம் முறையிட்டுவந்தன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் ஏ.கே. போஸ் வெற்றிபெற்றது செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது. இதையடுத்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கும் மே 19ஆம் தேதியன்று வாக்குப் பதிவை நடத்தப்போவதாக தேர்தல் ஆணையம் ஏப்ரல் 9ஆம் தேதியன்று அறிவித்துள்ளது.

ஆகவே காலியாகவுள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆளும் அ.தி.மு.க. அரசு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், தற்போதுள்ள 115 இடங்கள் போக குறைந்தது 4 இடங்களையாவது கைப்பற்றியாக வேண்டிய நிலையில் உள்ளது. ஆனால், இது வெறும் அதிகாரபூர்வமான கணிப்புதான்.

காரணம், தற்போது அ.தி.மு.க வசமுள்ள 115 உறுப்பினர்களில் விருதாச்சலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதி, கள்ளக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு ஆகியோர் வெளிப்படையாகவே டிடிவி தினகரன் ஆதரவு மனநிலையில் உள்ளனர்.

மேலும், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மனிதநேய ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி போன்றவர்கள், அ.தி.மு.க. பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததில் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போதுதான் இவர்களது நிலைப்பாடு தெரியவரும். ஆகவே, இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் 22 தொகுதிகளில் குறைந்தது 8 இடங்களிலாவது ஆளும் அ.தி.மு.க. வெற்றிபெற்றாக வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.கவால் நிம்மதியாக ஆட்சியைத் தக்கவைக்க முடியும்.

"இந்த நான்கு தொகுதிகளுக்கு தேர்தலை தனியாக நடத்துவதே தற்போதைய அ.தி.மு.க. அரசுக்கு ஒரு ஆதரவான நடவடிக்கைதான். நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்த பிறகு, ஆளும் கட்சி பெரும் பலத்தை அங்கே குவித்து வெற்றிபெற முடியும். ஆனால், தி.மு.க. இந்தத் தேர்தல்களின் மூலம் பெரும்பான்மையை பெற்றாலும் சட்டமன்றத்தைக் கலைக்கவே சிபாரிசு செய்யும்" என்று பிபிசி செய்தியாளர் முரளிதரனிடம் தெரிவித்தார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

தி.மு.கவைப் பொறுத்தவரை குறைந்தது 20 இடங்களை கைப்பற்றினால் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து 118 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றலாம். இதில் ஒரு இடம் குறைந்தால்கூட ஒரு தொகுதியைத் தன்வசம் வைத்திருக்கும் டிடிவி தினகரனின் தயவு அக்கட்சிக்குத் தேவைப்படும்.

ஆனால், அப்படி ஒரு ஆதரவை தி.மு.க கோரிப் பெறுவதோ, அம்மாதிரி தி.மு.க. அரசை டிடிவி தினகரன் ஆதரிப்பதோ தினகரனின் அரசியல் எதிர்காலத்திற்கு நிச்சயம் பொருத்தமானதாக அமையாது. ஆகவே அம்மாதிரியான ஒரு சூழலில், மீண்டும் தேர்தலைச் சந்தித்து ஆட்சியைப் பிடிக்கவே தி.மு.க. விரும்பும்.

"ஒன்றிரண்டு இடங்கள் குறைவாகக் கிடைத்தால், தினகரனின் ஆதரவை தி.மு.க. கோராது என்றே நான் நினைக்கிறேன். அப்படி நடந்தால் அது தி.மு.க செய்யும் மிகப் பெரிய தவறாக முடியும். அதே நேரம் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி வென்றால் ஆட்சியை நடத்தவே விரும்புவார்கள்" என்கிறார் பிபிசியிடம் பேசியஅரசியல் ஆய்வாளர் ஆர். முத்துக்குமார்.

ஆனால், தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை அவை உண்மையிலேயே மக்கள் உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றனவா என்பதில் பலரும் கருத்துவேறுபடுகின்றனர். குறிப்பாக, நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு தனியாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முடிவுகளைக் கணிப்பது தற்போதைய சூழலில் அவ்வளவு சுலபமான காரியமல்ல.

மூன்று உறுப்பினர்கள் தகுதி நீக்கம்

இப்படியான சூழ்நிலையில் டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு அதிமுக கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருக்கிறார்.

கடந்த வாரம் சபாநாயகர் தனபாலை சந்தித்த கொறடா ராஜேந்திரன், "கட்சிக்கு எதிராக செயல்படும் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகிய 3 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனு அளித்துள்ளார்.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்பட்சத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் 3 குறையும்.

22 தொகுதிகளுகான தேர்தல் முடிவுகள் மே 23ஆம் தேதி வெளியான பின்னர் தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை சபாநாயகர் நீங்கலாக 230 ஆக இருக்கும். அதில் அ.தி.மு.க. பெரும்பான்மை பெற 116 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. எனவே இந்த 22 தொகுதிகளில் குறைந்தது 4 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் தான் பெரும்பான்மையை தக்க வைக்க முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :