தன்னம்பிக்கைப் பெண் சந்திராவின் கனவு: "இழுத்தடிக்காமல் விவசாயக் கடன், விளை பொருளுக்கு நியாய விலை"

சந்திரா, சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம்
Image caption சந்திரா, சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம்

"இரவு 12 மணிக்கு பூப்பறிக்க போவேன். அப்போதுதான் சம்பங்கிப்பூவை பறிக்க முடியும். இரவுதான் அது மலரும். பூக்களை பறித்து முடிக்க காலை ஐந்தரை அல்லது ஆறு மணியாகிவிடும். பின்னர் வேனில் பூவை ஏற்றி மதுரைக்கு அனுப்புவோம். எவ்வளவு சீக்கிரம் பூவை அனுப்பி வைக்கிறோமோ அதற்கு ஏற்றவாறு பணம் கிடைக்கும்" என்கிறார் விவசாயி சந்திரா

இரண்டு குழந்தைகளுக்கு தாய். கணவரை திருமணம் ஆன சில ஆண்டுகளில் இழந்துவிட்ட சந்திரா, தன்னம்பிக்கையோடு விவசாயம் பார்த்து தன் வாழ்க்கையை நடத்துகிறார்.

இரவு முழுக்க பூப்பறித்தால் எப்போது தூங்குவீர்கள் என்று கேட்டதற்கு, "கஷ்டம்தான். காலைல சமைக்கும்போதுல்லாம் சில சமயம் தூங்கியிருக்கேன்" என்கிறார்.

சிவகங்கை மாவட்டம் மேலக்காடு கிராமம். பச்சை பசேலென்று இல்லை என்றாலும், ஆங்காங்கே விவசாய நிலங்கள்.

Image caption சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம்

வாகனங்கள் போகவே கடினமாக இருக்கும் சாலைகள். அங்கு ஒரு ஓட்டு வீட்டில் வசிக்கிறார் சந்திரா. இரண்டு குழந்தைகள். மேலும் ஆடு, மாடு, முயல், நாய்க்குட்டிகள், தனது நிலம் என்று தன் வாழ்க்கையை வாழ்கிறார்.

"திருமணாகி 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணமான சில ஆண்டுகளில் என் கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்துவிட்டார். அதற்கு பிறகு, என்னையும் என் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள விவசாயம்தான் கைகொடுத்தது" என்கிறார் சந்திரா.

இவர் தனது விவசாய நிலத்தில் சம்பங்கிப்பூ போட்டிருக்கிறார்.

இரவு பூக்களை பறிக்க கடினமாக இருக்காதா? ஒரு பெண்ணாக இதை எப்படி செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "ஒரு மாதத்திற்கு முன்பாக பாம்பு கடித்துவிட்டது. ஆனால், அப்படித்தான். வேறு வழியில்லை. இரவு லைட்டு வெச்சுதான் பூப்பறிக்க போவோம். காலில் ஷூ அணிந்து கொள்வோம். வேறு எதுவும் செய்ய முடியாது. இந்த பூ இரவுதான் மலரும். இங்கே ஐந்தரை மணியளவில் பூவை ஏற்றி அனுப்பினால், மதுரை சென்று சேர ஏழு மணியாகிவிடும்" என்று கூறினார்.

தண்ணீர் பிரச்சனை

Image caption சந்திராவின் வீடு

தற்போதைய காலகட்டத்தில் கணவர் மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்கூட குடும்பத்தை சமாளிப்பது கடினம். இங்கு நான் ஒருத்திதான் என்று தெரிவிக்கிறார் சந்திரா.

சில ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தில் காய்கறி போட்டிருந்த சந்திரா தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது சம்பங்கி போட்டிருக்கிறார்.

"என் போன்ற விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் அரசு கடனுதவி செய்ய வேண்டும்" என்று கோருகிறார்.

"மூன்று ஆண்டுகளாக இங்கு நல்ல மழை இல்லை. வறட்சிதான்" என்று கூறும் சந்திரா, அங்கு நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையையும் தனி ஒரு ஆளாக சமாளிக்கிறார்.

"சொட்டு நீர் பாசனத்திற்கு அரசு மாணியம் வழங்குகிறார்கள். ஆனால், நான் பட்டர் ஃப்ளை பைப் (நீர் தெளிப்பான்) போட்டுள்ளேன். அதற்கு மானியம் கேட்டேன். கிடையாது என்றார்கள். இங்கு தண்ணீர் பற்றாற்குறை அதிகம் இருப்பதினால், இந்த முறையை பயன்படுத்தும் போது, இது குறைந்த அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தும். மேலும் நீரை சேமிக்க முடியும்" என்கிறார்.

சொட்டு நீர் பாசனத்தை எடுத்துக் கொண்டால், ஒரு ஏக்கருக்கு ஒன்றரை அல்லது இரண்டு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஆனால், இதற்கு அவ்வளவு நேரமாகாது.

"பூச்சிக் கொல்லி விலைதான் உயர்கிறது… என் பூ விலை உயரவில்லை"

விவசாயத்திற்கு தேவையான கருவிகளை அரசு மானியத்தில் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார் சந்திரா.

"பூக்கள் எந்த விலைக்கு விற்றாலும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லியின் விலை மட்டும் உயர்ந்து கொண்டே போகிறது. ஐந்து ஆறு ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும், உரம் மற்றும் பூச்சிக் கொல்லியின் விலை உயர்ந்திருக்கிறது. ஆனால், எனது வருமானமோ குறைகிறதே தவிர, உயரவில்லை."

சில நேரம் நல்ல வருமானம் இருக்கும். சில நேரம் இருக்காது. இல்லாத நேரத்தில் அருகில் கடன் வாங்கிதான் வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. தங்களின் உற்பத்தி பொருளுக்கு அரசு ஒரு நல்ல விலையைத் தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.

தகுந்த நேரத்தில் ஏன் வங்கிகள் கடன் கொடுப்பதில்லை?

வங்கியில் கடன் வாங்கச் சென்றால், அதற்கு குறைந்தது ஆறு ஏழு மாதங்கள் ஆகின்றன. திடீரென்று தண்ணீர் பிரச்சனை. ஏதாவது கோளாறு என்றால், அந்த நேரத்திற்கு காசு கிடைக்காமல், அவர்கள் நடைமுறை எல்லாம் முடிந்து ஐந்தாறு மாதங்களுக்கு பிறகுதான் கடன் தருகிறார்கள் என்று கூறும் சந்திரா, அவரது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

"ஒரு முறை தண்ணீர் சுத்தமாக வரவில்லை. கேனி வெட்ட பணம் வேண்டும் என்று லோன் எடுக்க போனேன். இரண்டு மாதங்கள் அதற்காக அலைந்தேன். எனினும், நான் கேட்ட தொகையை வழங்க அவர்கள் தயாராக இல்லை. அந்த நடைமுறை எல்லாம் குறைத்து, தகுந்த நேரத்தில் அரசு கடன் வழங்க வேண்டும்" என்று கோருகிறார்.

ஒரு நாள் 300 ரூபாய், அடுத்த நாள் 30 ரூபாய்

மாத ஊதியம் மாதிரி கிடையாது. பூக்கள் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு விலை போகும் என்று சந்திரா கூறுகிறார்.

"சமீபத்தில் சம்பங்கிப்பூ கிலோ 20 ரூபாய் அல்லது 30 ரூபாய்க்கு விலை போனது. இதுவே முகூர்த்த நாள் என்றால், 100 அல்லது 150 ரூபாய் விலை போகும். விழாக்காலங்களில் 250ல் இருந்து 300 ரூபாய் வரை இருக்கும். ஆனால், இது குறிப்பிட்ட நாட்களில் மட்டும்தான். பெரும்பாலான நாட்களில், 20 அல்லது 30 ரூபாய்தான்."

எப்படி இருந்தாலும், தன் குழந்தைகளை படிக்க வைப்பதற்காக தன்னால் முடிந்தவரை உழைத்துக் கொண்டிருக்கிறார் சந்திரா.

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
தன்னம்பிக்கையோடு விவசாயம் செய்யும் தனி ஒரு பெண்ணின் வாழ்வு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :