ஆ.ராசா: "எங்கேயோ சோதனை நடத்திவிட்டு திமுக-வோடு முடிச்சுப் போடுகிறார்கள்"

ராசா படத்தின் காப்புரிமை Hindustan Times/Getty Images

வேறெங்கோ சோதனை நடத்திவிட்டு அதனை திமுக-வோடு முடிச்சுப் போடுகிறார்கள் என்று பேசியுள்ளார் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஆ.ராசா.

திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான அவர் பிபிசி தமிழின் அகிலா இளஞ்செழியனுக்கு அளித்த நேர்க்காணல்.

கேள்வி: நீலகிரி மக்களவைத் தொகுதியின் தலையாய பிரச்சினைகளாக நீங்கள் பார்ப்பவை என்ன?

பதில்: நீலகிரி மக்களவைத் தொகுதி பூகோள ரீதியாக இரண்டாகப் பிரிந்துள்ளது. கூடலூர், குன்னூர், உதகை ஆகியவை மலைப்பிரதேசங்கள். அவிநாசி,மேட்டுப்பாளையம், பவானிசாகர் போன்றவையெல்லாம் தரைப்பகுதிகள்.

மலைப்பிரதேசங்களுக்கும், சமவெளிக்கும் பிரச்சினைகள் வேறுபடும். இரண்டையும் பிரித்துதான் பார்க்க வேண்டும். மேலே உள்ள மலைவாழ் மக்களுக்கு மிக முக்கியமாக மருத்துவ வசதி இல்லை.

கூடலூர் பகுதியில் இருப்பவர்கள் மருத்துவத் தேவைக்காக கேரளாவிற்கு செல்ல வேண்டியிருக்கின்றது. சில பகுதிகளில் இருப்பவர்கள் கர்நாடகத்திற்கு செல்ல வேண்டியிருக்கின்றது.

எனவே, முதற்கட்டமாக நீலகிரி மாவட்டத்திற்கு தரமான அரசு மருத்துவமனையும், மருத்துவக்கல்லூரியும் அவசியத் தேவையாக இருக்கின்றது.

படத்தின் காப்புரிமை PRAKASH SINGH

கே: நீலகிரி பகுதிகளை எடுத்துக்கொண்டால், பழங்குடி இன மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். வளர்ச்சித் திட்டங்களால் காடழிப்பு, சூழல் பாதிப்பு ஆகிய சிக்கல்கள் ஏற்படுகின்றன. மக்களின்வாழ்வாதாரத்தையும் பெருக்க வேண்டும். இந்த அனைத்து சிக்கல்களுக்குமான தீர்வு என்னவாக இருக்கும்.

ப: நீலகிரியில் வன விலங்குகள் காடுகளை விட்டு வெளியில் வருவதற்கான காரணங்கள் அத்துமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் தான். அதனை இந்த ஐந்து ஆண்டு காலமாக தெரிந்தோ தெரியாமலோ ஒழுங்கு படுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

அதை இப்பொழுது உச்ச நீதிமன்றமே நேரடி கண்காணிப்பில் எடுத்து பல கட்டிடங்களுக்கு சீல் வைத்துள்ளனர். இதை எல்லாம் தவிர்த்து இருந்தால் நீலகிரியின் உயிர்பன்மையம், சமச் சீரான சுற்றுசூழல் ஆகியவற்றை பாதுகாத்து இருக்க முடியும்.

என்ன காரணத்தினாலோ இன்றைக்கு உள்ள மாநில அரசு அதை செய்ய தவறிவிட்டனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றபோது அவற்றை எல்லாம் கண்காணித்து நிலைத்த வளர்ச்சியினை கொண்டு வருவோம்.

அதாவது, சுற்றுசூழலுக்கும் பாதிப்பு இல்லாமல், வளர்ச்சித் திட்டங்களையும் நெறிப்படுத்தி இரண்டையும் ஒரு ஒத்திசைவான புள்ளியில் சந்திக்க வைத்து மக்களுக்கும் பாதிப்பில்லாமல், சுற்றுசூழலுக்கும் பாதிப்பு இல்லாமல் கொள்கைகளை வகுத்து செயல்படுவோம்.

கே: மேற்கு மாவட்டங்களில் திமுக இன்னும் வலிமையடையவில்லை என்ற விமர்சனம் உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கும், பொதுவாகவே பலமான கட்சியாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா. ஏன், மேற்கு பகுதிகளில் நீங்கள் இன்னும் கவனம் செலுத்தவில்லையா?

படத்தின் காப்புரிமை RAVEENDRAN

ப: மேற்கு மாவட்டங்களில் திமுக பலமாக இல்லையோ என்ற ஒரு தோற்றத்தினை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதற்கு காரணம் போன தேர்தலில் நடந்த பணப்பட்டு வாடா.

அதனால் மேற்கு மாவட்டங்களில் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவில் வெற்றிபெறவில்லை. போனமுறை 80-90 சதவீதம் பணப்பட்டுவாடா நடந்தது. மக்கள் ஒரு மயக்கத்தில் ஓட்டு போட்டு விட்டனர்.

ஆனால், இந்த முறை நிறைய மாற்றங்கள் தெரிகின்றன. போன முறை அதிமுக கையாண்ட குறுக்கு வழியினால், பணப்பட்டுவாடவினால் ஏற்பட்ட விளைவு. அந்த விளைவே நிரந்தரம் என்றோ, அதுதான் மேற்கு மண்டலத்தின் படிந்த படிவு என்றோ முடிவுக்கு வரக்கூடாது. அதை மட்டுமே அடிப்படையாக வைத்து மேற்கு மாவட்டங்களில் திமுக வலிமையாக இல்லை என்பது தர்க்க ரீதியாக சரியாக இருக்காது.

கே: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கின்றது. ஏன் அரசியல் கட்சிகள் இதைத் தொடர்கின்றன?

ப: பணமோ , சாதியோ ஒரு சுற்றுக்கு வரும். அது உணர்வின் அடிப்படையில் அல்லது தேவையின் அடிப்படையில் வரும். பணம் கொடுத்தே ஓட்டு வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டால் ஜனநாயகம் நீடிக்காது. பணம் கொடுத்தே அனைத்து தேர்தல்களிலும் ஜெயித்து விடமுடியாது .

பொதுமக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அதுவும் இந்த முறை நிறைய இளம் வாக்காளர்கள் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் ஓட்டை விற்க கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ஜனநாயகத்தில் ஒரு விபத்து அவ்வளவுதான். அது தொடர்ந்து நடக்காது.

படத்தின் காப்புரிமை CHANDAN KHANNA/Getty Images

கே:தொடர்ந்து நடக்கின்ற வருமான வரி சோதனைகள், குறிப்பாக திமுகவினரின் இல்லங்களில் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

ப: வருமான வரிச் சோதனையினை தவறு நான் என்று சொல்லவில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து தாக்குதல் என்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது.

வேண்டுமென்றே திட்டமிட்டே எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்ட வேண்டும், அவர்களை தேர்தலில் போட்டியிட விடக்கூடாது, அவர்கள் மீது களங்கம் சுமத்த வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு செய்வது பாரதிய ஜனதா கட்சிக்கோ, அதிமுகவிற்கோ புதிதல்ல.

அவர்களின் அடிப்படையான வக்கிர மனநிலை அதுதான். அரசமைப்புச் சட்டத்தில் மாண்புக்குரிய எல்லா அமைப்புகளையும் சிதைத்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிப்பதுதான் மோதி அரசாங்கம். அதில் வருமானவரித் துறையும் விதிவிலக்கல்ல.

கே: ஆனால், திமுக தங்கள் மீதுள்ள தவறை மறைப்பதற்காக அவர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள் என்று எதிர்த் தரப்பினர் கூறுகிறார்களே?

ப: என்ன தவறு உள்ளது, நேரடியாக உங்களால் குற்றஞ்சாட்ட இயலுமா? திமுகவின் நேரடி மந்திரி வீட்டிலேயோ, அவர்கள் பிள்ளைகள் வீட்டிலோ பணத்தினை எடுத்து இது திமுகவின் பணம் என உங்களால் கூற இயலுமா? எங்கேயோ சோதனை நடத்துவது, அதை எங்களோடு முடிச்சு போடுவது. 2ஜி மாதிரிதான். அதில் ஒன்றும் இல்லை என ஆரம்பத்தில் இருந்தே நான் கூறிக்கொண்டு இருந்தேன். யாரும் கேட்கவில்லை, ஏழு ஆண்டுகள் கழித்து ஒன்றும் இல்லை என்கின்றனர், அதுபோல்தான் இதுவும்.

கே: கோவையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி , திமுக பெண்களுக்கு எதிரான கட்சி என விமர்சித்து உள்ளாரே.

ப: அது எந்த அடிப்படையில் வைத்தார் என்று எனக்கு தெரியவில்லை. பெண்ணுரிமைக்காக போராடிய இயக்கம்தான் திராவிட இயக்கம். பெண் ஏன் அடிமை ஆனாள் என்று 100 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகம் எழுதினார் பெரியார். பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது நாங்கள், பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என பாடுபட்டது நாங்கள்.

பெண்களை இன்றைக்கு வரைக்கும் கோவிலுக்குள் போக கூடாது என்று கூறுகின்ற கட்சி இதைப்பற்றி பேசலாமா, பெண் படிக்கக் கூடாது, பெண் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்க கூடாது என்றார்கள்.

பெண் படிக்க வேண்டும், பெண் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், பெண்ணுக்கு சம உரிமை வேண்டும் என்றவர்கள் நாங்கள். திராவிட முன்னேற்ற கழகம் தான் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கொடுத்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட இயக்கம் இந்தியாவில் திராவிட இயக்கம்தான். அதனால் , அவரின் குற்றச் சாட்டு என்பது நியாயமற்றது. இந்திய நாட்டின் வரலாறு, பண்பாட்டியல், சமூகத் தளங்களில் இயங்குகின்ற இயக்கங்கள், இயக்கங்களின் பின்புலம் எதையுமே அறியாத ஒரு பிரதமரை நாம் பெற்றுள்ளோம் என்றுதான் அர்த்தம்.

ஏனெனில், ஒரு தேசத்தின் பிரதமர் ஓர் இடத்திற்கு செல்லும்போது அந்தப்பகுதியினை பற்றிய புரிதலோடு பேச வேண்டும்.

தென்னிந்தியாவினைப் பற்றி, தமிழ் நாட்டினை பற்றிய போதுமான புரிதல் வேண்டும். தமிழ் நாட்டினைப் பற்றி போதுமான புரிதல் வேண்டமென்றால் திராவிட கழகத்தைப் படிக்க வேண்டும், திராவிட வரலாறை, திராவிட பண்பாட்டை படிக்க வேண்டும். முதலில் அவர்களால் ஏன் தமிழ் நாட்டில் கால் ஊன்ற முடியவில்லை என்பதை சிந்தித்து பார்க்கட்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :