மக்களவை தேர்தலில் திமுக - இதுவரை சாதித்ததும், சறுக்கியதும் - 7 சுவாரஸ்ய தகவல்கள்

திமுக படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று (வியாழக்கிழமை) நிறைவடைந்துள்ளது.

வரும் 18-ஆம் தேதியன்று வாக்குப்பதிவை எதிர்நோக்கும் தமிழகத்தை பொருத்தவரை பிரதான கட்சிகளில் ஒன்றான திமுக முந்தைய மக்களவை தேர்தல்களில் சாதித்தும், சறுக்கியதும் குறித்த சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே உங்களுக்காக வழங்குகிறோம்.

1. மக்களவை தேர்தலில் எப்போதெல்லாம் படுதோல்வியை சந்தித்தது திமுக?

மூன்று மக்களவை தேர்தல்களில் திமுக தான் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்திருக்கிறது. 1989,1991 மக்களவை தேர்தல்களில் ஒரு மக்களவை உறுப்பினர்கூட திமுகவுக்கு இல்லை. அதன் பிறகு தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்த திமுக, கடந்த 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வியடைந்தது.

1989 தேர்தலில் தமிழகத்தில் திமுக 31 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அனைத்திலும் தோல்வியடைந்தது. இந்த தேர்தலில் திமுகவுக்கு 26.66% வாக்குகள் கிடைத்திருந்தது. அதாவது 70 லட்சம் பேர் திமுகவுக்கு வாக்களித்தனர். ஆனால் திமுக சார்பில் ஓர் உறுப்பினர்கூட மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை.

அதே சமயம் அதிமுக போட்டியிட்ட 11 மக்களவை தொகுதியிலும் வென்றது. இந்த தேர்தலில் அதிமுக 17.12% வாக்குகள் பெற்றிருந்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிட்ட இரண்டு தொகுதியில் ஒன்றை வென்றிருந்தது.

1990 தேர்தலில் திமுக 29 தொகுதிகளில் போட்டியிட்டு 56 லட்சம் வாக்குகள் வென்றபோதும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெல்லவில்லை. அதிமுக இந்த தேர்தலில் போட்டியிட்ட 11 இடங்களிலும் வென்றது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் திமுக 23.91% வாக்குகள் பெற்றது. சுமார் 95 லட்சம் பேர் திமுகவுக்கு வாக்களித்திருந்தனர். எனினும், ஒரு மக்களவை உறுப்பினர் கூட கிடைக்கவில்லை.

2. ''ஒரே ஒரு முறை மட்டும் வெற்றி''

தமிழகத்தின் முக்கிய நகரங்களாக உள்ள மதுரை மற்றும் திருச்சி மக்களவை தொகுதிகளில் திமுக இதுவரை ஒரே ஒரு மட்டுமே வென்றுள்ளது.

திருச்சி மக்களவை தொகுதி வரலாற்றில் திமுக 1980 மக்களவை தேர்தலில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.. அப்போது திமுக வேட்பாளர் என்.செல்வராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.கே.ரங்கராஜனை வீழ்த்தினார்.

படத்தின் காப்புரிமை Samuel Bourne

திமுக 2009 மக்களவை தேர்தலில்தான் முதல்முறையாக மதுரை மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றது. திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி இந்த தொகுதியில் வென்றார்.

1989-லிருந்து நான்கு முறை திமுக மக்களவை தேர்தலில் மதுரையில் போட்டியிட்டுள்ளது. ஆனால் மூன்று முறை தோல்வியடைந்திருக்கிறது.

திருச்சி மற்றும் மதுரை போலவே பல முறை போட்டியிட்டு ஒரு முறை மட்டுமே வென்ற மற்றொரு மக்களவை தொகுதி கரூர்.

1984-லிருந்து ஏழு முறை கரூர் மக்களவை தொகுதியில் திமுக போட்டியிட்டுள்ளது. ஆனால் ஒருமுறை மட்டுமே வெற்றி கிடைத்தது.

2004-ல் அதிமுக வேட்பாளர் ராஜா பழனிசாமியை திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி வென்றார். அப்போது இவ்விருவருக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் சுமார் 1.90 லட்சம்.

3. திமுகவில் தொடர்ச்சியாக அதிக முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது யார்?

திமுக சார்பில் மூன்று பேர் இதுவரை தொடர்ச்சியாக ஐந்து முறை மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த மூவருமே 1996,1998,1999,2004,2009 என ஐந்து தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றவர்கள். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினராக இருக்கும் வாய்ப்பை பெற்றவர்கள்.

அந்த மூவரில் ஒருவர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். மற்றொருவர் டி.ஆர்.பாலு. இன்னொருவர் டி.வேணுகோபால்

இவர்களில் ஐந்து முறையும் ஒரே தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம். 1996-2014 வரை இவர் தஞ்சாவூரின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார்.

டி. வேணுகோபால் 1996, 1998,1999,2004 தேர்தல்களில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். 2009 தேர்தலில் தொகுதி மறுசீரமைப்புக்கு உருவான திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

டி.ஆர்.பாலு தென் சென்னையில் 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடந்த மக்களவை தேர்தல்களில் வென்றார். 2009-ல் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றார்.

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption ஆ ராசா மற்றும் டி ஆர் பாலு

ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில் டி.ஆர்.பாலு கடந்த 2014 மக்களவை தேர்தலில் தஞ்சாவூரில் போட்டியிட்டார். பழனிமாணிக்கம் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. தஞ்சாவூரில் தொடர்ச்சியாக வென்ற திமுகவுக்கு 2014 தேர்தலில் தோல்வி கிடைத்தது. டி.ஆர் பாலுவுக்கு தஞ்சாவூரில் 36.17% வாக்குகளே கிடைத்தன.

திமுக சார்பில் ஒரே தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து ஐந்து முறையும் வென்றவர் எனும் பெருமைக்குரியவர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம்,

2019 மக்களவை தேர்தலில் மீண்டும் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுகிறார். டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தற்போது மீண்டும் போட்டியிடுகிறார்.

4. எந்த தொகுதி திமுகவின் கோட்டை?

மக்களவை தேர்தல்களில் திமுகவின் கோட்டையாக விளங்குவது வடசென்னை தொகுதிதான்.

சி.குப்புசாமி மூன்று மக்களவை தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்றதும் இந்த தொகுதியில்தான்.

இதுவரை 10 மக்களவை தேர்தல்களில் திமுக இங்கே வெற்றி பெற்றுள்ளது.

1989,1991,2014 மக்களவை தேர்தல்களில் மட்டுமே இங்கே திமுக தோல்வியை தழுவியுள்ளது.

திருப்பத்தூரில் ஒன்பது முறை திமுக வென்றுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் எட்டு முறை வென்றுள்ளது.

மத்திய சென்னையில் ஏழு முறையும், தென்சென்னையில் ஏழு முறையும் வென்றுள்ளது.

பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூரிலும் ஏழு முறை வென்றுள்ளது.

5. ஐந்து முறை மக்களவைக்குச் சென்ற முரசொலி மாறன்

திமுக சார்பில் மக்களவையில் முக்கிய பங்காற்றியவர் முரசொலி மாறன். மத்திய அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்.

1967 மக்களவை தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுகவின் நிறுவனர் சி.என்.அண்ணாதுரை வென்றார். ஆனால் திமுக தமிழகத்தில் முதல் முறையாக ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டியபோது மக்களவை தொகுதி உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார் அண்ணாதுரை.

படத்தின் காப்புரிமை RAMON CAVALLO

இதையடுத்து தென் சென்னை தொகுதியில் இடைத்தேர்தலில் வென்று மக்களவை உறுப்பினராக பணியாற்றினார் முரசொலி மாறன்.1971 மக்களவை தேர்தலிலும் இதேதொகுதியில் வென்றார்.

1977-ல் சுமார் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

1996, 1998, 1999 மக்களவை தேர்தல்களில் மத்திய சென்னை தொகுதியில் இருந்து மக்களவைக்குச் சென்றிருக்கிறார்.

முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறன் 2004, 2009, 2014 தேர்தலில் மத்திய சென்னையில் போட்டியிட்டார். இதில் 2004 மற்றும் 2009 தேர்தல்களில் வென்றார்.

இந்நிலையில் 2019 மக்களவை தேர்தலில் மீண்டும் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார் தயாநிதி மாறன்.

6. எந்த மண்டலத்தில் திமுக வலுவானது? எதில் பலவீனமானது?

2008 தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் நடந்த கடைசி இரண்டு மக்களவை தேர்தல்களில் தேனி, விருதுநகர், தென்காசி, ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர்,ஆரணி ஆகிய ஒன்பது மக்களவை தொகுதிகளிலும் திமுக ஒருமுறை கூட வெல்லவில்லை.

தமிழகத்தை சென்னை மண்டலம், வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம் என ஆறு மண்டலங்களாக பிரித்து மக்களவை தேர்தல்களில் தற்போதுள்ள தொகுதிகளில் திமுகவின் வெற்றி வீதம் குறித்து ஆராய்ந்தோம்.

படத்தின் காப்புரிமை Stalin/fb

சென்னை மண்டலம்

இதில் ஏழு மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுக சிறப்பான வெற்றி வீதத்தை வைத்திருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரிலும் திமுக வலுவான கட்சியாக இருக்கிறது. ஆனால், அரக்கோணத்தில் திமுக ஆரம்ப காலகட்டங்களில் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது.

இதனால் அரக்கோணத்தில் திமுகவின் வெற்றி வீதம் குறைவே. காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் தொகுதிகள் மறுசீரமைப்பு பணிக்கு பின் உருவானவை. இவ்விரண்டு தொகுதிகளிலும் ஒருமுறை திமுக போட்டியிட்டது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. ஆகவே சென்னை மண்டலத்தில் மொத்தமுள்ள ஏழு தொகுதிகளில் நான்கில் திமுக வலுவான கட்சியாகவே விளங்குகிறது.

Image caption சென்னை மண்டலத்தில் திமுக (இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில்)

இம்முறை சென்னை மண்டலத்தில் உள்ள ஏழு தொகுதியில் ஆறில் திமுக போட்டியிடுகிறது. திருவள்ளூரில் மட்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறது.

வடக்கு மண்டலம்

வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய ஏழு தொகுதிகளும் வடக்கு மண்டலம் என கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

அதன்படி கள்ளக்குறிச்சி, வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மூன்று தொகுதிகளிலும் திமுகவின் வெற்றி வீதம் 50%-க்கும் அதிகமாக உள்ளது. தருமபுரியில் இதற்கு முன் 5 முறை போட்டியிட்ட திமுக இரண்டு முறை மட்டுமே வென்றது.

தொகுதி மறுசீரமைப்பு பணிக்கு பின் திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்டுள்ள திமுக, திருவண்ணாமலை தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

முன்னதாக இந்த மண்டலத்தில் திருப்பத்தூர் என்றொரு தொகுதி இருந்தது. திமுகவின் வெற்றி கோட்டையாக இருந்த தொகுதிகளில் திருப்பத்தூருக்கு முக்கிய இடமுண்டு.

வேலூரில் திமுக 5 முறை வென்றிருக்கிறது. இதில், இரண்டு முறை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றதும் அடங்கும்.

Image caption வடக்கு மண்டலத்தில் திமுக (இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில்)

வடக்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் 4-5 தொகுதிகளில் திமுக பலமாக விளங்கியிருக்கிறது என்கிறது வரலாற்றுத் தரவுகள்.

இம்முறை கிருஷ்ணகிரி, விழுப்புரம், ஆரணி ஆகிய மூன்று தொகுதிகளையும் கூட்டணிக்கு கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்துள்ள திமுக மீதமுள்ள நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் விழுப்புரம் தொகுதி விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும் அதன் வேட்பாளர் உதயசூரியன் சின்னதிலேயே போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

மத்திய மண்டலம்

நான்கு தொகுதிகளை கொண்ட சிறிய மண்டலம் இது. கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர் தொகுதிகளை மத்திய மண்டலமாக வகைப்படுத்தியிருக்கிறோம். திமுக அதிக வெற்றி வீதம் வைத்திருக்கக்கூடிய தொகுதிகள் தஞ்சாவூர், பெரம்பலூர்.

Image caption மத்திய மண்டலத்தில் திமுக (இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில்)

அதே சமயம் மக்களவை தேர்தல் வரலாற்றிலேயே திமுக கட்சி திருச்சி மற்றும் கரூர் தொகுதிகளில் ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. அதன்படி மத்திய மண்டலம் திமுகவுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றி வீதம் அதிகம் இருக்கக்கூடியதாகவும், இரண்டில் மிகக்குறைவான வெற்றி வீதம் இருக்கக்கூடியதாகவும் விளங்கியிருக்கிறது.

இம்முறை கரூர், பெரம்பலூரில் திமுக போட்டியிடுகிறது.

கிழக்கு மண்டலம்

நாகப்பட்டினம், சிதம்பரம், கடலூர், மயிலாடுதுறை தொகுதிகள் கிழக்கு மண்டலத்தைச் சேர்ந்தவை. இதில் நாகப்பட்டினம், கடலூர் தொகுதிகளில் திமுக கணிசமான வெற்றி பெற்றுள்ளது. சிதம்பரம் தொகுதியும் திமுக ஓரளவு வெற்றி வீதத்தை வைத்திருக்கக் கூடிய தொகுதியாகவே உள்ளது.

மயிலாடுதுறையில் திமுக ஆறு முறை போட்டியிட்டு இரண்டு முறைதான் வென்றுள்ளது. கிழக்கு மண்டலம் திமுக அதிக வெற்றி வீதத்தை வைத்திருக்கக் கூடிய பகுதியாகும்.

Image caption கிழக்கு மண்டலத்தில் திமுக (இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில்)

இம்முறை கடலூர் மற்றும் மயிலாடுதுறையில் மட்டும் திமுக போட்டியிடுகிறது.

மேற்கு மண்டலம்

நீலகிரி, பொள்ளாச்சி, சேலம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் குறைந்தது ஐந்து முறைக்கும் அதிகமாக திமுக போட்டியிட்டுள்ளது. ஆனால் இதில் எந்தவொரு தொகுதியிலும் திமுகவின் வெற்றி வீதம் 50ஐ தாண்டவில்லை.

ஆனால் கோயமுத்தூரில் மூன்று முறை போட்டியிட்டு இரண்டு முறை வெற்றிகண்டுள்ளது திமுக.

Image caption மேற்கு மண்டலத்தில் திமுக (இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில்)

மேற்கு மண்டலத்தில் தற்போதுள்ள ஏழு தொகுதிகளில் எந்தவொரு தொகுதியும் திமுகவுக்கு கடந்த காலங்களில் அதிக வெற்றிகளைத் தந்ததில்லை.

2019 மக்களவை பொதுத்தேர்தலில் மேற்கு மண்டலத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் நீலகிரி, பொள்ளாச்சி , சேலம் ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.

மேற்கு மண்டலத்தின் திமுகவின் கூட்டணிக் கட்சிகளான கொமுதேக நாமக்கல் தொகுதியிலும், மதிமுக ஈரோடு தொகுதியிலும் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே இந்த முறை போட்டியிடுகின்றன.

தெற்கு மண்டலம்

பத்து மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியது தெற்கு மண்டலம். திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பத்து தொகுதிகள் இம்மண்டலத்தில் இருந்தாலும் திமுகவின் கோட்டை எனச் சொல்லக்கூடிய தொகுதிகளோ அல்லது திமுகவுக்கு தொடர்ச்சியாக கணிசமான வெற்றி கிடைத்த தொகுதி என்றோ இம்மண்டலத்தில் ஒரு மக்களவை தொகுதியைகூட அடையாளப்படுத்த முடியாது.

Image caption தெற்கு மண்டலத்தில் திமுக (இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில்)

குறிப்பாக திருநெல்வேலி, ராமநாதபுரம் தொகுதிகளில் திமுகவின் வெற்றி வீதம் குறைவாக உள்ளது.

இம்முறை தென்மண்டலத்தில் தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நான்கு தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. மற்ற ஆறு தொகுதிகளையும் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியுள்ளது.

7. திமுக சார்பில் எத்தனை இஸ்லாமியர்கள் மக்களவைக்கு சென்றிருக்கிறார்கள்?

திமுக கூட்டணி சார்பில் இஸ்லாமிய வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். திமுக சார்பிலும் மக்களவை தேர்தலில் அரிதாக இஸ்லாமிய வேட்பாளர் களமிறக்கப்பட்ட வரலாறு இருக்கிறது. மத சிறுபான்மையினர் ஆதரவு திமுகவுக்கு உண்டு எனக் கூறப்படுவது வழக்கம்.

ஆனால் திமுக கட்சியிலிருந்து 1962 பொதுத்தேர்தலில் இருந்து அதாவது, கடந்த 57 ஆண்டுகளில் ஒரு இஸ்லாமியர் கூட மக்களவை உறுப்பினராகவில்லை என்பதே வரலாறு.

ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு இஸ்லாமியர்கள் மக்களவைக்குச் சென்றிருக்கிறார்கள்.

படத்தின் காப்புரிமை NurPhoto

வேலூர் தொகுதியில் இருந்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு மக்களவைக்குச் சென்றுள்ளார்கள்.

இந்தியாவில் தேர்தலில் ஒரு சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெறும் நபர் அந்த சின்னத்தை வைத்திருக்கும் கட்சியின் கொறடா உத்தரவை மீறி நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிக்கமுடியாது. நுட்பமாக பார்த்தால் அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுகிறார்களோ அந்த சின்னத்தை கொண்டிருக்கும் கட்சியின் உறுப்பினராகவே கருதப்படுவார்கள்.

அந்த வகையில் திமுகவின் மக்களவை உறுப்பினராக இஸ்லாமியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் திமுக சார்பில் நேரடியாகக் களமிறக்கப்பட்டு இஸ்லாமியர்கள் மக்களவை உறுப்பினராக இருந்ததில்லை.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் சுமார் 42 லட்சம் இஸ்லாமியர்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது.

திமுக, அதிமுக இரு கட்சிகளும் தற்போது நடக்கவுள்ள மக்களவை தேர்தலில் இஸ்லாமியரை வேட்பாளராக நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்