குஜராத் சரக்கால் பாதிப்பு: உப்பிட்டவர்களின் சுவையற்ற வாழ்வு - திணைகளின் கதை

உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் குறித்து மக்கள் மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.

மலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பு உற்பத்தியாளர்களின் துயரம் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.

அதன் தொகுப்பு இது.

இந்திய எல்லையில் ஒரு முனையில் இருக்கும் கோடியக்கரை அருகே இருக்கிறது அகஸ்தியம் பள்ளி கிராமம். நம் உணவுத்தட்டுக்கும் இந்த கிராமத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம், நாம் உண்ணும் உணவுக்கு சுவையூட்டும் உப்பு இந்த கிராமத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால், அந்த உப்பு உற்பத்தியாளர்கள் தங்கள் வாழ்வு சுவையற்று போனதாக கூறுகிறார்கள். அதற்கு குஜராத்தும் ஒரு காரணம் என்கிறார்கள்.

குறிஞ்சி திணை:மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்

முல்லைதிணை:‘இதுதான் எங்கள் விதியோ’ - பூச்சி கொல்லி தெளித்து விவசாயி மரணம்: யார் பொறுப்பு?

மருதம் திணை:‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - மருத நில மனிதர்களின் துயர்மிகு கதை


திணை: நெய்தல் | இடம்: கோடியக்கரை

கஜா புயலுக்கு பின்பான வாழ்வு

படத்தின் காப்புரிமை Getty Images

"டெல்டா மாவட்டங்களை மிக மோசமாக பாதித்தது கஜா புயல். அப்போது பேசியவர்கள் எல்லாம் விவசாயிகளையும் மீனவர்களையும் குறிப்பிட்டு பேசினார்களே தவிர எங்களுக்காக யாரும் பேசவில்லை" என்கிறார் உப்பு உற்பத்தியாளர் பக்கிரிசாமி.

அவரே தொடர்கிறார், "விவசாயிகளுக்காக, மீனவர்களுக்காக ஏன் பேசினீர்கள் என்று கேட்கவில்லை. அவர்கள் மோசமான பாதிப்புக்கு உள்ளானர்கள். ஆனால், அதே அளவில் நாங்களும் பாதிக்கப்பட்டோம். எங்களுக்காக எந்த குரலும் ஒலிக்கவில்லை, எந்த நிவாரணமும் வந்து சேரவில்லை" என்கிறார் பக்கிரிசாமி.

கஜா புயலினால் உப்பு உற்பத்தி செய்யும் இடம் பாதிக்கப்பட்டதாகவும், அதனை சரி செய்ய ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவானதாகவும் கூறும் பக்கிரிசாமி. இதிலிருந்து மீள ஓராண்டாகும் என்கிறார்.

கண்ணீரின் சுவை உவர்ப்பு

உப்பு நீரில் நின்று, வெயிலில் காயந்து சிரமப்பட்டு உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு உரியவிலை கிடைப்பதில்லை என்கிறார் பக்கிரிசாமி.

அவர், "ஒரு டன் உப்பு ரூ 800க்குதான் கொள்முதல் செய்யப்படுகிறது. அதாவது ஒரு கிலோ 80 காசு. இந்த வருவாயை வைத்து எப்படி வாழ்வது?. இந்தாண்டாவது பரவயில்லை சென்றாண்டு ஒரு டன் 500 ரூபாய்க்குதான் கொள்முதல் செய்யப்பட்டது. சரி... இப்போது விற்க வேண்டாம் பிறகு விற்கலாம் என இருப்பு வைத்தோம். ஆனால், அது அனைத்தும் கஜா புயலில் அடித்து செல்லப்பட்டுவிட்டது" என்கிறார் பக்கிரிசாமி.

இது உப்பு உற்பத்தியாளர்களின் நிலை என்றால் அங்கு பணி செய்பவர்களும் மிக குறைந்த வருவாயில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

வேதாரண்யத்தில் உள்ள உப்பளத்தில் பணிசெய்யும் சந்தனமேரி, "ஒரு நாள் முழுவதும் நெருப்பு சூட்டில் அமைந்து உப்பு பாக்கெட் போட்டல் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்கும். எல்லா நாட்களும் வேலை கிடைக்குமா என்றால்... அதுவும் கிடையாது. அதுமட்டுமல்ல, இங்கு கழிப்பறை வசதி கூட இல்லை. இவ்வளவு சிரமத்திற்கிடையேதான் நாங்கள் வேலைபார்க்கிறோம்" என்று நம் உணவு மேஜையில் உள்ள உப்பின் பின்னால் உள்ள வலியை நம்மிடம் பகிர்கிறார் அவர்.

குஜராத் சரக்கால் பாதிப்பு

வேதாரண்யம் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் உப்பளங்களில்தான் இருக்கிறது. அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு நாகப்பட்டினம் மாவட்டத்தின் மொத்த பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் என்கிறார் உப்பு சிறு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மீனாட்சி சுந்தரம்.

அவர், "இப்போது ஏற்பட்ட சிரமத்திற்கு கஜா புயல் காரணம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே இங்கு உப்பு உற்பத்தியாளர்கள் வாழ்வாதார சிக்கலில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் தமிழக சந்தையை குஜராத் உப்பு கைப்பற்றியதுதான்" என்கிறார்.

இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் வேதாரண்யம் பகுதி உப்பு உற்பத்தியாளர்கள் வாழ்வாதாரத்தை முழுக்க இழந்து உள்ளூரிலேயே அகதிகள் ஆவார்கள் என்கிறார் மீனாட்சி சுந்தரம்.

குஜராத் உப்பளங்கள் மிகப்பெரியவை, அவற்றுக்கு ரயில் போக்குவரத்து வசதியும் உள்ளது. ஆனால், வேதாரண்யத்தில் ஒப்பீட்டளவில் குறைவான உப்பளங்களே உள்ளன. இதற்கு ரயில் போக்குவரத்து வசதியும் இல்லை. எனவே வெளியில் உப்பை எடுத்துச் செல்வதற்கு சாலை வழியை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. இது செலவு பிடிக்கக்கூடியதாகவும் இருக்கிறது என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்