நரேந்திர மோதி பால் தாக்ரேவின் வாக்குரிமை பறிப்பு குறித்து பேசியது உண்மையா? #BBCFactCheck

பால் தாக்கரே படத்தின் காப்புரிமை The India Today Group

சிவசேனா தலைவர் பால் தாக்ரேவின் வாக்களிக்கும் உரிமையை காங்கிரஸ் கட்சி பறித்துக் கொண்டதாக சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்திருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் அவர் பேசும்போது, "காங்கிரஸ் கட்சிக்காரர்கள் முதலில் அவர்களது முகங்களை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும். மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசக்கூடாது. இந்த நாட்டின் ஒவ்வொரு குழந்தையிடமும் காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். அவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். பாலாசாஹெப் தாக்ரேவின் குடியுரிமையை காங்கிரஸ் எடுத்துக் கொண்டது. அவரது வாக்களிக்கும் உரிமையையும் பறித்து விட்டீர்கள்," என்றார்.

படத்தின் காப்புரிமை TWITTER / NARENDRA MODI

மோதி இதனை தாக்ரேவின் மகனும், சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்ரே முன்பு பேசினார்.

மக்களவை தேர்தலுக்கான சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி அதிகாரபூர்வமாக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

நடைபெற்று வரும் தேர்தலில், மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில், சிவசேனா 23 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் போட்டியிடுகின்றன.

படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption பிரதமர் மோதி மற்றும் உத்தவ் தாக்கரே

சிவசேனா தலைவர் குறித்து பிரதமர் மோதி பேசியது முற்றிலும் உண்மையல்ல என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

காங்கிரஸ் அரசாங்கமோ அல்லது கட்சியோ தாக்ரே தேர்தலில் போட்டியிடுவதற்கோ, வாக்களிப்பதற்கோ தடை விதிக்கவில்லை.

அப்போது இருந்த குடியரசுத் தலைவர் தாக்ரேவின் வழக்கை இந்திய தேர்தல் ஆணையத்திடம் எடுத்து செல்ல, தேர்தல் ஆணையம்தான் அவரது தண்டனையை முடிவு செய்தது.

1995 முதல் 2001ஆம் ஆண்டுவரை அவரது வாக்களிக்கும் உரிமை ரத்து செய்யப்பட்டது. சட்ட வல்லுநர்கள் இதனை "ஒருவரின் குடியுரிமையை பறிப்பதற்கு சமம்" என்று கூறினார்கள்.

படத்தின் காப்புரிமை The India Today Group

என்ன நடந்தது?

இது ஒரு 31 ஆண்டுகாலம் பழமையான வழக்கு.

மகாராஷ்டிராவின் விலே பர்லே தொகுதியில் இடைத்தேர்தல் நடந்து கொண்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் பிரபாகர் காஷிநாத் குண்டேவை எதிர்த்து, சிவசேனா ஆதரவுடன் ரமேஷ் யெஷ்வந்த் பிரபு என்ற வேட்பாளர் சுயேச்சையாக போட்டியிட்டார்.

பிரபுவுக்கு தாக்கரே தீவிரமாக பிரச்சாரம் செய்தார். 1987ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற, டிசம்பர் 14 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.

காங்கிரஸின் குண்டேவைத் தோற்கடித்து பிரபு அங்கு வெற்றி பெற்றார். இடைத்தேர்தலுக்கு முன்பு விலே பார்லே தொகுதி காங்கிரஸ் வசம் இருந்தது.

படத்தின் காப்புரிமை Hindustan Times

தாக்ரேவிற்கு தண்டனை

தேர்தல் முடிவுகளை எதிர்த்து பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் குண்டே. அதில் சுயேச்சை வேட்பாளரான பிரபுவும் தாக்ரேவும், மதத்தின் பெயரால் வாக்காளர்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951இன்படி பிரபு மற்றும் தாக்ரே இருவருக்கும் பாம்பே உயர் நீதிமன்றம் 1989ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதியன்று தண்டனை விதித்தது.

தேர்தல் முடிவுகளும் ரத்து செய்யப்பட்டன. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பிரபு.

எனினும், பாம்பே உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரிதான் என்று 1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பு உச்சநீதிமன்ற அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் உள்ளது.

"1987ஆம் ஆண்டு நவம்பர் 29, டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் விலே பார்லே மக்களவை தொகுதியில் ரமேஷ் பிரபு மற்றும் தாக்ரே இருவரும் பேசியது இந்த வழக்கின் அடிப்படையாக இருக்கிறது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், பால் தாக்கரே கூறுகையில், 'இந்துக்களை பாதுகாக்கவே இத்தேர்தலில் போட்டியிடுகிறோம். முஸ்லிம்களின் வாக்குகள் குறித்து எங்களுக்கு கவலையில்லை. இந்த நாடு இந்துக்களுடையது, அவர்களது நாடாகவே இருக்கும்' எனக் கூறியிருக்கிறார். இந்த பேச்சுகளை வைத்து பார்க்கும்போது அவர் குற்றம் செய்துள்ளார் என்று நிரூபணமாகிறது" என்று நீதிபதி ஜக்தீஷ் ஷரன் வெர்மா தீர்ப்பில் கூறியிருந்தார்.

படத்தின் காப்புரிமை Fairfax Media Archives
Image caption முன்னாள் குடியரசுத் தலைவர் கே ஆர் நாராயண்

தேர்தல் ஆணையத்தின் உதவியை நாடிய குடியரசுத் தலைவர்

சட்ட வல்லுநரும், ஹைத்ராபாத் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான ஃபைசன் முஸ்தஃபா பிபிசியிடம் கூறுகையில், "இது போன்ற வழக்குகள் நாட்டின் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கப்படும். அவரது உத்தரவில்தான் வாக்காளர் பட்டியலில் மாற்றம் செய்ய முடியும்," என்றார்.

மேலும், "இந்த குறிப்பிட்ட வழக்கை, குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயண், தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைத்தார். தேர்தல் ஆணையம்தான் தாக்ரே மற்றும் பிரபு ஆகியோர் குறித்து முடிவெடுத்தது" என்று அவர் தெரிவித்தார்

வாக்களிக்கும் உரிமையை ஆறு ஆண்டுகள் வரை பறிப்பதுதான் இதுபோன்ற வழக்குகளுக்கு அளிக்கப்படும் அதிகபட்சமாக தண்டனை என்று கூறுகிறார் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

தண்டனை காலத்தின்போது இருந்த பாஜக அரசாங்கம்

தாக்ரே வழக்கு குறித்த முடிவை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக 1998 செப்டம்பர் 22ஆம் தேதி குடியரசுத்தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தது.

"ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டார் என்று நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில், பால் தாக்ரேவின் வாக்களிக்கும் உரிமை ஆறு ஆண்டுகளுக்கு (11.12.1995 - 10.12.2001) பறிக்கப்படும்," என்று முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மனோகர் சிங் கில் எழுதினார்.

ஜூலை 1999 அன்று தாக்கரே மீதான தடையை கே.ஆர்.நாராயண் அமல்படுத்தினார். அப்போது மத்தியில் அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

படத்தின் காப்புரிமை SEBASTIAN D'SOUZA

காங்கிரஸிற்கு எந்த பங்குமில்லை

சிவசேனாவின் அரசியல் பயணம் குறித்து புத்தகம் எழுதியுள்ள மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் அகோல்கர் பிபிசியிடம் பேசுகையில், "இந்த முடிவிற்கு பால் தாக்ரே கண்டனம் தெரிவித்தார். ஆனால், இதற்காக காங்கிரஸ் கட்சியை என்றும் அவர் குற்றஞ்சாட்டியதில்லை," என்றார்.

இந்த முடிவினையடுத்து தாக்கரேவால், 1999 மக்களவை தேர்தலிலும், மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலிலும் வாக்களிக்க முடியாமல் போனது.

தடை நீக்கப்பட்ட பின்பு 2004ஆம் ஆண்டுதான் அவர் வாக்களித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :