இடைதேர்தல் நடக்கும் 22 தொகுதிகளின் பிரதான பிரச்சனைகள் என்ன?

மேப் படத்தின் காப்புரிமை Google MAPS

தமிழகத்தில் ஏப்ரல் 18அன்று நடைபெறும் மக்களவை தேர்தலின்போது 39 தொகுதிகளுக்கு வாக்களிப்பதோடு, 22 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து டிடிவி தினகரன் அணியில் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதிநீக்கத்தால் 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மற்ற நான்கு தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினரின் மரணம், பணபட்டுவாடா வழக்கு தொடர்பாக தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட தொகுதி என மொத்தம் 22 தொகுதிகள் இடைத்தேர்தலை சந்திக்கின்றன.

இந்த 22 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் தங்களது தொகுதியின் பிரதானமான பிரச்சனை என எதை கருதுகிறார்கள் என்பதை புரிந்துகொள்ள அந்தந்த தொகுதியில் உள்ள ஆர்வலர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

தொகுதி: பெரம்பூர்

வாக்காளர்கள்

ஆண் 144866
பெண் 148684
திருநங்கை 59
மொத்தம் 293609

முக்கிய போட்டியாளர்கள்

திமுக ஆர்.டி.சேகர்
அதிமுக ஆர்.எஸ்.ராஜேஷ்
அமமுக வெற்றிவேல்

தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த பகுதி வடசென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதி.

சென்னையில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதியில் திமுகவின் ஆதிக்கம் நிறைந்த தொகுதியாக பெரம்பூர் கருதப்படுகிறது. இடைத் தேர்தலில் அதிகபட்சமான போட்டியாளர்களாக, நாற்பது நபர்கள் களம் இறங்கும் தொகுதி இது. குடிசைவாழ் மக்கள் பல காலமாக நிரந்தர குடியிருப்புகள் தேவை என்ற கோரிக்கை ஏற்கபடாமல் இருக்கிறது என்கிறார்கள். சென்னையின் நெரிசலான பகுதியாக இருக்கும் பெரம்பூரில் தென் சென்னைக்கு இணையாக வீடுகளின் மதிப்பை உயர்த்துவதற்கு போக்குவரத்து பிரச்சனை தடையாக இருப்பதாக முதலீட்டார்கள் கருதுகிறார்கள்.

தொகுதி: திருப்போரூர்

வாக்காளர்கள்

ஆண் 133301
பெண் 137433
திருநங்கை 24
மொத்தம் 270758

முக்கிய போட்டியாளர்கள்

திமுக இயதவர்மன்
அதிமுக ஆறுமுகம்
அமமுக கோதண்டபாணி

தேர்தல் நிலவரம்: ஐந்து முறை திமுக, நான்கு முறை மற்றும் பாமக ஒரு முறை வெற்றிபெற்ற தொகுதி திருப்போரூர். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் 950 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றிபெற்றது. திருப்போரூரில் இந்த நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது விவசாயிகளின் பிரச்சனை. விளைநிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் உயர்அழுத்த மின்சார கோபுரங்கள் அமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் மத்தியில் பெரும் எதிர்ப்பு உள்ளது. போதிய இழப்பீடு இல்லாமல் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என விவசாயிகள் வழக்கு தொடுத்துள்ளனர்.

தொகுதி: சோளிங்கர்

வாக்காளர்கள்

ஆண் 129177
பெண் 132358
திருநங்கை 2
மொத்தம் 261537

முக்கிய போட்டியாளர்கள்

திமுக அசோகன்
அதிமுக சம்பத்
அமமுக மணி

தேர்தல் நிலவரம்:ஐந்து முறை காங்கிரஸ் மற்றும் அதிமுக வென்ற தொகுதி இது. இதுவரை திமுக ஒரே ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. சமீபகாலத்தில் பாமகவின் வாக்கு வங்கி அதிகரித்துள்ள தொகுதி சோளிங்கர். ஆன்மீக தலங்கள் அதிகம் இருந்தாலும், இந்த தொகுதியில் சுற்றுலாத்துறை வசதிகளை மேம்படுத்தினால் உள்ளூர்வாசிகள் வேலைவாய்ப்புகளை பெறவும், பொருளாதாரம் மேம்படவும் வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

தொகுதி: குடியாத்தம்

வாக்காளர்கள்

ஆண் 132148
பெண் 138580
திருநங்கை 23
மொத்தம் 270751

முக்கிய போட்டியாளர்கள்

திமுக காத்தவராயன்
அதிமுக மூர்த்தி
அமமுக ஜெயந்தி பத்மநாபன்

இடைத்தேர்தலில் வெறும் ஏழு நபர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதி இது. 1996 தேர்தலில் மட்டும் திமுக மற்றும் 2001ல் அதிமுகவை தேர்தெடுத்த வாக்காளர்கள், இதுவரை காங்கிரஸ் அல்லது கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த உறுப்பினரை மட்டுமே பெரும்பாலும் தேர்வு செய்துள்ளனர். அமமுகவின் சார்பாக போட்டியிடும் 18 வேட்பாளர்களில் ஒரே பெண் வேட்பாளர் குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் ஜெயந்தி.

கைத்தறி மற்றும் விசைத்தறி தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதியான குடியாதத்தில் மத்திய அரசின் ஜிஎஸ்டி வரியால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதால் வரியை குறைக்கவேண்டும் எனபதை இங்குள்ள வாக்காளர்கள் அரசியல் கட்சிகளிடம் பிரதான கோரிக்கையாக வைக்கிறார்கள்.

தொகுதி: ஆம்பூர்

வாக்காளர்கள்

ஆண் 87,896
பெண் 88,623
மொத்தம் 1,76,519

முக்கிய போட்டியாளர்கள்

திமுக விஸ்வநாதன்
அதிமுக ஜோதி ராமலிங்க ராஜா
அமமுக பாலசுப்பிரமணி

தோல் தொழிற்சாலைகளின் கழிவுகள் காரணமாக நிலம்,நீர் ஆதரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதி இது . ஒவ்வொரு முறையும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் சுத்தமான குடிநீர் கேட்டு வைக்கப்படும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்கிறார்கள் வாக்காளர்கள். தோல்தொழிற்சாலை கழிவுகளை முறையாக கையாளவில்லை என்ற ஆதங்கம் வாக்காளர்களிடம் உள்ளது.கிராமபகுதிகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகம் உள்ளதால், இங்குள்ள மக்கள் தண்ணீரை அதிகவிலை கொடுத்த வாங்கும் பிரச்சனைக்கு ஒவ்வொரு தேர்தலிலும் தீர்வு தேடுகிறார்கள்.

தொகுதி: ஓசூர்

வாக்காளர்கள்

ஆண் 168186
பெண் 159009
திருநங்கை 99
மொத்தம் 327294

முக்கிய போட்டியாளர்கள்

திமுக சத்யா
அதிமுக ஜோதி
அமமுக புகழேந்தி

அதிமுக அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி மீது 1998ல் பேருந்துகளை கல் வீசித் தாக்கிய வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் ஓசூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆந்திரா, கர்நாடகா என இரண்டு மாநிலங்களின் எல்லை பகுதியில் இருந்தாலும், தமிழகத்தின் நிர்வாக பகுதியாக உள்ள ஓசூரில், காங்கிரஸ் கட்சிக்கு அதிக முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

இந்த முறை யாரை தேர்வு செய்வார்கள் என்பது புதிராகவே உள்ளது. பள்ளிக்கூடங்களில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மூன்று மொழி தெரிந்த ஆசிரியர்கள் இருந்தால் குழந்தைகளின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்பது இங்குள்ள கல்வியாளர்களின் எண்ணம். மூன்று மொழிகளை கற்ற ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தவேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

வேலைவாய்ப்புக்கு இளைஞர்கள் அருகில் உள்ள பெங்களூரு நகரத்தை சார்ந்தே இருக்கிறார்கள். உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைவு என்பதால் அதிக அளவில் இடப்பெயர்வு ஆளாகியுள்ள குடும்பங்களில் உள்ளுரில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபடவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தொகுதி: பாப்பிரெட்டிபட்டி

வாக்காளர்கள்

ஆண் 127855
பெண் 125656
திருநங்கை 4
மொத்தம் 253515

முக்கிய போட்டியாளர்கள்

திமுக மணி
அதிமுக கோவிந்தசாமி
அமமுக ராஜேந்திரன்

2007ல் புதிய தொகுதியாக உருவாக்கப்பட்ட பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் இதுவரை நடந்த இரண்டு தேர்தலில் அதிமுகவில் இருந்த பழனியப்பன் வெற்றி பெற்றார். குடிநீரில் ஃப்ளோரைடு அதிக அளவில் இருப்பதால், இங்குள்ள மக்கள் தண்ணீருக்காக சிரமப்படுகிறார்கள். ஓகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் முழுமையாக நடைமுறைபடுத்தவில்லை என்பதால், குடிநீர் கேட்டு தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறும் தொகுதியாக பாப்பிரெட்டிபட்டி உள்ளது.

தொகுதி: அரூர்

வாக்காளர்கள்

ஆண் 118993
பெண் 116857
திருநங்கை 7
மொத்தம் 235857

முக்கிய போட்டியாளர்கள்

திமுக கிருஷ்ண குமார்
அதிமுக சம்பத் குமார்
அமமுக முருகன்

இதுவரை காங்கிரஸ், திமுக, அதிமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என எல்லா கட்சிகளுக்கும் வாய்ப்புகளை அளித்த தொகுதி அரூர். எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையாகப்படுத்தியாதால், விவசாயிகள் பலர் நிலத்தை இழந்ததால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அந்த திட்டத்தை ரத்து செய்ததால், மகிழ்ச்சி அடைந்த விவசாயிகள் நிலஆர்ஜிதம் செய்த பிரச்சனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய வாக்காளர்கள் மத்தியில் அவர்களின் வாக்குகளை தீர்மானிக்க நில ஆர்ஜிதம் ஒரு காரணியாக மாறியுள்ளது.

தொகுதி: நிலக்கோட்டை

வாக்காளர்கள்

ஆண் 113085
பெண் 116120
திருநங்கை 4
மொத்தம் 229209

முக்கிய போட்டியாளர்கள்

திமுக சௌந்தர பாண்டியன்
அதிமுக தேன்மொழி
அமமுக தங்கதுரை

காங்கிரஸ் மற்றும் அதிமுக கட்சிகளுக்கு பிரதிநித்துவம் அளித்துள்ளது நிலக்கோட்டை தொகுதி. மல்லிகைப் பூ விவசாயிகளை அதிகம் கொண்டுள்ள இந்த தொகுதியில், பூவுக்கு விலை நிர்ணையம் செய்வது தொடங்கி, மல்லிகை விற்பனை, வாசனை திரவியம் தயாரிப்பு என எல்லா தொழில்களிலும் தனியார் நிறுவனங்கள் விதிக்கும் கட்டுப்பாடுகள் விவசாயிகளுக்கு போதிய வருமானத்தை அளிப்பதில்லை என்ற குறை பல காலமாக நீடிக்கிறது. உள்ளூரில் வேலைவாய்ப்புகள் குறைவாக உள்ளன என்பது இந்த தொகுதி மக்களின் பிரச்சனை. பல குடும்பங்கள் வேலைதேடி அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். இடபெயர்வு வாக்காளர்கள் மத்தியில் தங்களோடு வாக்கை தீர்மானிக்கும் காரணியாக உள்ளது.

தொகுதி: திருவாரூர்

வாக்காளர்கள்

ஆண் 131879
பெண் 137255
திருநங்கை 22
மொத்தம் 269156

முக்கிய போட்டியாளர்கள்

திமுக பூண்டி கலைவாணன்
அதிமுக ஜீவானந்தம்

திமுக தலைவர் மற்றும் திருவாரூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி காலமானதை அடுத்து இந்த தொகுதி காலியாகியது. திருவாரூரை பிறப்பிடமாக கொண்ட கருணாநிதியை ஐந்து முறை சட்டமன்றத்திற்கு அனுப்பிய தொகுதி. தற்போது திமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளரான பூண்டி கலைவாணன் போட்டியிடுகிறார். திமுக தலைவரின் சொந்த தொகுதியாக இருந்த திருவாரூர், அவரது மறைவுக்கு பின் திமுக தனது இருப்பை தக்கவைத்துகொள்ள முயற்சிகளை எடுத்துவருகிறது.

தொகுதி: தஞ்சாவூர்

வாக்காளர்கள்

ஆண் 133262
பெண் 143955
திருநங்கை 52
மொத்தம் 277269

முக்கிய போட்டியாளர்கள்

திமுக நீலமேகம்
அதிமுக காந்தி
அமமுக ரெங்கசாமி

2016 சட்டமன்ற தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டது என்ற அடிப்படையில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட தொகுதி இது.

கஜா புயலின் தாக்கத்தில் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிவாரண தொகை கிடைப்பதில் இழுபறி, புயலுக்கு பின் அடிப்படை வசதிகள் மற்றும் மீட்பு பணிகளில் இருந்த தாமதம் மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காவிரி நீர் பிரச்னையை அதிமுக முடிவுக்கு கொண்டுவந்திருந்தாலும், வறட்சியில் இருந்து விடுபட உதவி கிடைக்காத ஆயிரக்ககணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

தொகுதி: மானாமதுரை

வாக்காளர்கள்

ஆண் 130478
பெண் 132975
திருநங்கை 1
மொத்தம் 263454

முக்கிய போட்டியாளர்கள்

திமுக இலக்கிய தாசன்
அதிமுக நாகராஜன்
அமமுக மாரியப்பன் கெனடி

கடந்த காலங்களில் காங்கிரஸ், சுதந்திர கட்சி,தமிழ் மாநில காங்கிரஸ் என காங்கிரஸ் சார்ந்த கட்சிகளுக்கு பெரும்பான்மையாக வாக்களித்த தொகுதியில் கடந்த மூன்று தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இங்கு அரசு கலைக்கல்லூரி அமைக்கபடவேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. சுற்றுலா தலங்கள் பல இருந்தாலும், போதிய அளவு பிரபலமாகவில்லை. திமுக சார்பில் போட்டியிடும் இலக்கியதாசன் இதுநாள்வரை செல்போன் பயன்படுத்தியதில்லை, தற்போது தேர்தல் காரணமாக மனைவியின் அலைபேசியை பயன்படுத்திகிறார் என்பதால் சமீபத்தில் பிரபலமானார்.

தொகுதி:ஆண்டிபட்டி

வாக்காளர்கள்

ஆண் 130625
பெண் 132452
திருநங்கை 23
மொத்தம் 263100

முக்கிய போட்டியாளர்கள்

திமுக மகாராஜன்
அதிமுக லோகிராஜன்
அமமுக ஜெயக்குமார்

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதி. திமுகவுக்கு திருவாரூர் என்றால் அதிமுகவுக்கு ஆண்டிபட்டி என்ற அளவில் அதிமுகவுக்கு வாய்ப்புகளை அள்ளி வழங்கிய தொகுதி இது. தங்கதமிழ்செல்வன் இரண்டாவது முறையாக எம்எல்ஏவாக தேர்தெடுக்கப்பட்டாலும், தகுதி நீக்கம் காரணமாக பதவியை இழந்தார். இந்தமுறை அமமுக சார்பில் தங்கத்தமிழ்செல்வன் தேனி நாடாளுமன்ற தொகுதியில் துணைமுதல்வர் ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத் குமாரை எதிர்த்து போட்டியிடுகிறார். சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவும் தனது வெற்றியை நிலைநாட்ட உழைத்துவருகிறது. மலைபகுதி நிறைந்த தேனியில் அதிகரித்துவரும் சாலைவிபத்துகளை கட்டுபடுத்த அரசு எடுக்கும் நடவடிக்கை கடந்த இரண்டு ஆண்டுகளாக பலன் அளித்துவருகிறது. சாலை மரங்களை குறைக்கவேண்டும் என்பது இங்குள்ள மக்களின் எதிர்பார்ப்பு. ஒரு ஆண்டுக்கு சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் தேனியில் இறக்க சாலைவிபத்துகள் காரணமாக உள்ளன.

தொகுதி: பெரியகுளம்

வாக்காளர்கள்

ஆண் 132175
பெண் 136467
திருநங்கை 97
மொத்தம் 268739

முக்கிய போட்டியாளர்கள்

திமுக சரவணகுமார்
அதிமுக முருகன்
அமமுக கதிர்காமு

துணைமுதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளம் அதிமுகவுக்கு பலமுறை வாய்ப்புகளை கொடுத்த தொகுதி. அமமுகவை தொடங்கிய டிடிவி தினகரன் 1999ல் பெரியகுளம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்வானர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக முதலில் மயில் வேல் அறிவிக்கப்பட்டு பின்னர் முருகன் போட்டியிடுவார் என்று உறுதிசெய்யப்பட்டது. சர்ச்சைக்குள்ளான நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களை பெரியகுளம் மக்கள் நடத்தினர்.

தொகுதி: சாத்தூர்

வாக்காளர்கள்

ஆண் 115388
பெண் 121288
திருநங்கை 20
மொத்தம் 236696

முக்கிய போட்டியாளர்கள்

திமுக ஸ்ரீனிவாசன்
அதிமுக ராஜவர்மன்
அமமுக சுப்பிரமணியன்

ஆறு முறை கேகேஎஸ்ஆர் ராமச்சந்திரனை சட்டமன்றத்திற்கு அனுப்பிய தொகுதி. அவர் அதிமுகவில் இருந்த போது நான்கு முறையும், திமுக சார்பாக போட்டியிட்ட மூன்று முறையும் அவருக்கு வெற்றியை வழங்கிய தொகுதி. கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுகவை தேர்தெடுத்த வாக்காளர்கள் இந்த முறை 31 நபர்களில் ஒருவரை தேர்தெடுக்கவேண்டும். ஆனால் திமுக வேட்பாளர் மற்றும் அமமுக வேட்பாளர் பெயரில் சுயேச்சையாக.போட்டியிடுகிறார்கள். இந்த தொகுதியில் நான்கு ஸ்ரீனிவாசன் ,ஐந்து சுப்பிரமணியன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். கழிவுநீர் வெளியேற்றத்திற்கு முறையான சாக்கடை வசதிகள் இல்லை என்பது இங்குள்ள மக்களின் நீண்டநாள் பிரச்சனை. நீர் ஆதாரங்கள் பலவும் தூர்வாரபடாமல், சாக்கடை வசதியும் முறையாக செய்யப்படவில்லை என இங்குள்ள வாக்காளர்கள் கருதுகின்றனர்.

தொகுதி: பரமக்குடி

வாக்காளர்கள்

ஆண் 122836
பெண் 123870
திருநங்கை 21
மொத்தம் 246727

முக்கிய போட்டியாளர்கள்

திமுக சம்பத் குமார்
அதிமுக சாதன பிரபாகர்
அமமுக முத்தையா

ஏழுமுறை அதிமுகவுக்கு வாய்ப்பு கொடுத்த இந்த தொகுதி, 1967 முதல் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியாக உள்ளது. 13 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ராமநாதபுரத்தில் சாதி,மத ரீதியிலான வாக்குகளை பெறுவதற்காக அதிமுக, திமுக முயல்கிறார்கள் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். சாதி பிளவுகள் காரணமாக கலவரங்கள் நிகழ்ந்த தொகுதியாக உள்ளது பரமக்குடி. மிளகாய் மற்றும் பருத்தி விவசாயத்திற்கு முறையான பாசனவசதி இல்லை என்பது பரமக்குடி விவசாயிகளுக்கு தீராத பிரச்சனையாக உள்ளது.

தொகுதி:விளாத்திகுளம்

வாக்காளர்கள்

ஆண் 102885
பெண் 105946
திருநங்கை 2
மொத்தம் 208833

முக்கிய போட்டியாளர்கள்

திமுக ஜெயக்குமார்
அதிமுக சின்னப்பன்
அமமுக ஜோதிமணி

அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் போட்டிவேட்பாளராக களமிறங்கியுள்ளார். அதிமுகவின் வாக்கு, அதிமுக, அமமுக, போட்டிவேட்பாளர் என மூன்று நபர்களுக்கு செல்லும் என்பதால், திமுகவுக்கு பெரிய போட்டி இருக்காது என்று கூறப்படுகிறது. மிளகாய் விவசாயத்திற்கு அதிக கவனம் செலுத்தி, அதன் விற்பனைக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள வாக்காளர்களுக்கு உள்ளது. மிளகாய் விவசாயத்தில் கூலி தொழிலாளர்கள் தொடங்கி, சிறு வியாபாரிகள் என பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்க விற்பனை நிலையங்கள் அவசியமாக உள்ளது.

தொகுதி: பூந்தமல்லி

வாக்காளர்கள்

ஆண் 163976
பெண் 168297
திருநங்கை 48
மொத்தம் 332321

முக்கிய போட்டியாளர்கள்

திமுக கிருஷ்ணசாமி
அதிமுக வைத்தியநாதன்
அமமுக ஏழுமலை

சென்னை நகரத்தை திருவள்ளூர் மற்றும் இதர மாவட்டங்களுடன் இணைக்கும் இடம் பூந்தமல்லி. இங்கு போக்குவரத்துக்கு நெரிசல் பிரதான பிரச்சனை. மூன்று பிரதான வேட்பாளர்களும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என பிரச்சாரம் செய்கிறாரகள் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயத்தை நம்பியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு மிக அருகில் இருந்தாலும், பாசன வசதி முறையாக அமைக்கப்படவில்லை என விவசயிகள் கூறுகின்றனர்.

தொகுதி: சூலூர்

வாக்காளர்கள்

ஆண் 145397
பெண் 149743
திருநங்கை 18
மொத்தம் 295158

போட்டியாளர்கள் (இதுவரை அறிவிக்கப்பட்டவர்கள்)

திமுக பொங்கலூர் ந பழனிசாமி

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள சூலூர் தொகுதியின் முக்கியமான நீர் ஆதாரமான சூலூர் ஏரியை முறையாக பராமரிக்கபடவில்லை என பல சுற்றுச்சூழல் அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோல திடக்கழிவுகளை முறையாக கையாளவில்லை என்பதால், கிராம பகுதிகளில் ஏற்பட்டுள்ள சுகாதர கேடு இங்குள்ள வாக்காளர்கள் மத்தியில் தொகுதியின் முக்கிய பிரச்சனையாக பேசப்படுகிறது.

தொகுதி: அரவாக்குறிச்சி

வாக்காளர்கள்

ஆண் 99052
பெண் 106219
திருநங்கை 2
மொத்தம் 205273

போட்டியாளர்கள் (இதுவரை அறிவிக்கப்பட்டவர்கள்)

திமுக வி. செந்தில்பாலாஜி

கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அரவக்குறிச்சி தொகுதியில் குடிநீர் தட்டப்படு தீராத பிரச்சனையாக உள்ளது. காவிரி நதியின் முக்கியமான கிளை நதியான அமராவதி பாயும் பகுதியாக இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது மற்றும் குடிநீர் விநியோகம் முறையப்படுத்தவில்லை என்பதை பிரதான பிரச்சனையாக கருதுகிறார்கள் அரவாக்குறிச்சி வாக்காளர்கள்.

தொகுதி: திருப்பரங்குன்றம்

வாக்காளர்கள்

ஆண் 150533
பெண் 153918
திருநங்கை 27
மொத்தம் 304478

போட்டியாளர்கள் (இதுவரை அறிவிக்கப்பட்டவர்கள்)

திமுக டாக்டர் பி. சரவணன்

மதுரைக்கு அருகில் இருந்தாலும், தரமான சாலைகள் இல்லை என்பதை இந்த தொகுதி வாக்காளர்கள் பிரதானமான பிரச்சனையாக கருதுகிறார்கள். பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் கோயில் உள்ளது. மதுரை கோயிலை போலவே பழமையான கோயிலாக இருந்தாலும் மேலும் வளப்படுத்தும் வாய்ப்புள்ள இருப்பதாகவும். உள்ளூர் மக்களின் வழவதாரத்தை பெருக்க அது உதவும் என்றும் கருதுகிறார்கள்.

தொகுதி: ஓட்டப்பிடாரம்

வாக்காளர்கள்

ஆண் 115080
பெண் 118751
திருநங்கை 16
மொத்தம் 233847

போட்டியாளர்கள் (இதுவரை அறிவிக்கப்பட்டவர்கள்)

திமுக எம்.சி. சண்முகையா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்ற கோரிக்கைக்காக நடந்த போராட்டத்தில் ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த பல குடும்பங்களும் கலந்துகொண்டன. இங்குள்ள வாக்காளர்களுக்கு தங்களது சட்டமன்ற உறுப்பினரை தேர்தெடுக்க ஸ்டெர்லைட் பிரச்சனை ஒரு காரணியாக உள்ளது. அதேபோல 2009ல் சிப்காட் வளாகத்திற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 230 ஏக்கர் நிலம் கையகப்படுத்தியதில் நிலத்திற்கு போதுமான இழப்பீடு தரவேண்டும் என்பது இந்த தொகுதியின் முக்கிய பிரச்சனை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :