எட்டுவழிச் சாலை திட்டத்தை அமல்படுத்துவோம் - எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் இருந்த மேடையில் பா.ஜ.க தலைவர் நிதின் கட்கரி அறிவிப்பு

நிதின் கட்கரி படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption நிதின் கட்கரி

சேலத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியை எதிர்த்து சேலத்தில் விவசாயிகள் கருப்புகொடி ஏந்தி இன்று ஆர்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு சேலத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்குபெற்று உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சேலத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்தனர்.

என்ன பேசினார்?

மத்திய அமைச்சர் பேசும் போது பாஜக மத்தியில் ஆட்சி அமைத்தவுடன் தமிழகத்தின் நீர்தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றார்.

பசுமை வழிச்சாலை குறித்து பேசிய அவர், பசுமை வழிச் சாலை பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கிறது என்று எனக்கு தெரியும். ஆனால், இந்த பகுதியின் வளர்ச்சிக்கு இந்த திட்டம் அவசியம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை பசுமை சாலை திட்டம் நிறைவேற்றப்படும், விவசாயிகளுடன் ஆலோசனை செய்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றிய பிறகு ,குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் கூறினார் நிதின் கட்கரி.

"மஹாராஷ்டிரா, குஐராத், தமிழ்நாடு, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தண்ணீர் பிரச்சனை உள்ளது .அதிகம் தண்ணீர் உள்ள பகுதியில் இருந்து மற்ற பகுதிக்கு தண்ணீரை எப்படி கொண்டுவருவது என ஆலோசித்து வருவதாகவும் , தமிழகத்திற்கு தண்ணீர் தேவை குறித்து தாங்கள் நன்கு அறிவதாகவும் கோதாவரியிலிருந்து வீணாகும் நீரை பயனுள்ளதாக மாற்றும் வகையில் தமிழகத்திற்கு கொண்டுவந்து சேர்ப்பதை முதல் பணியாக எடுத்துக்கொண்டு ரூ 60 ஆயிரம் கோடியில் பணிகள் நடைபெறும்" என்று தெரிவித்தார்.

மேலும் அவர், "தென்னிந்தியாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சனையை தீர்ப்பதே முதல் இலக்கு என்றவர் கோதாவரி இருந்து அதிகளவில் தண்ணீர் வீணாகி வந்துள்ளது. அதை தமிழகத்திற்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்படும் ,எனவும் தமிழக முதல்வரின் முயற்சியால் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகவும் கால்வாய் திட்டத்திற்கு பதிலாக குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டம் தமிழகத்திலும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெற்றி பெற்று வந்தவுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

எதிர்ப்பு

எட்டுவழி சாலை எதிர்ப்பு இயக்கத்தினரோ மத்திய அமைச்சரின் பேச்சு தங்களை கவலையடைய செய்துள்ளதாக கூறுகின்றனர்.

விவசாயி கலா, "அதிமுக கூட்டணி அரசில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வாக்குகளுக்காக பேசுகின்றனர் என்றவர், பிரசாரத்தின் முதல்நாளின் போது கருந்துறை கூட்டத்தில் முதல்வர் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் , மீத்தேன், எட்டு வழிச் சாலை போன்ற விவசாயிகளுக்கு எதிராக அதிமுக அரசு செயல்படாது என்றார், ஆனால் அவர்களின் கூட்டணி பிரசாரத்தில் மத்திய அமைச்சர் சென்னை சேலம் பசுமைவழி சாலை செயல்படுத்தப்படும் என்கிறார். அந்த மேடையில் ராம்தாஸும் இருக்கிறார். இதனை எப்படி புரிந்து கொள்வது" என்று கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :