டிக்டாக் காணொளி பதிவு செய்தபோது துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி

டிக்டாக் படத்தின் காப்புரிமை Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "டிக்டாக் காணொளி பதிவு செய்தபோது துப்பாக்கி வெடித்து இளைஞர் பலி"

டெல்லியில் டிக்டாக் காணொளி பதிவு செய்தபோது துப்பாக்கி வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலியானாதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"டெல்லியின் ஜப்ராபாத் பகுதியை சேர்ந்த சல்மான் என்ற கல்லூரி மாணவர், தனது நண்பர்களான அமிர், சொகைல் ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு காரில் இந்தியா கேட் பகுதிக்கு சென்றார். பின்னர் வீடு திரும்பும் வழியில் அவர்கள் துப்பாக்கியை உடலில் குறிவைப்பது போன்று டிக்-டாக் வீடியோ ஒன்றை பதிவு செய்ய முடிவு செய்தனர்.

இதற்காக காரின் டிரைவர் இருக்கையில் இருந்த சல்மானின் கன்னத்தில், நாட்டுத்துப்பாக்கி ஒன்றின் முனையை வைத்தவாறு சொகைல் போஸ் கொடுத்தார். அப்போது திடீரென அந்த துப்பாக்கி வெடித்தது. இதில் குண்டுபாய்ந்ததால் படுகாயமடைந்த சல்மான், காரிலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

இதனால் பதறிப்போன நண்பர்கள், உடனே அவரை தங்கள் உறவினர் ஒருவருடன் சேர்ந்து மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சல்மான் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சல்மானின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "மீண்டு வருமா ஜெட் ஏர்வேஸ்?"

படத்தின் காப்புரிமை Getty Images

நிதி நெருக்கடியால் முடங்கியுள்ள இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸின் எதிர்காலம் குறித்த முக்கிய முடிவு இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒருகாலத்தில் இந்தியா விமானப் போக்குவரத்து துறையில் கொடிக்கட்டி பறந்த பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவையே வீழ்த்தி, முதலிடத்தில் நீடித்த ஜெட் ஏர்வேஸ் கடந்த பல மாதங்களாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி திணறி வருகிறது.

இதன் காரணமாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானங்கள் பல்வேறு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, விமானிகள் உள்பட ஊழியர்களுக்கான சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று (திங்கட்கிழமை) முதல் ஊதிய பாக்கியை தரும் வரை விமானத்தை இயக்க போவதில்லை என்று இந்நிறுவனத்தின் விமானிகள் சங்கம் அறிவித்திருந்த நிலையில், இன்று கடன் உதவி பெறுவது தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கியுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படும் என்ற நோக்கில் தங்களது பணி புறக்கணிப்பு போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்" என்று அந்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்து தமிழ் - "உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று தேர்வு"

படத்தின் காப்புரிமை HAGEN HOPKINS

இங்கிலாந்தில் வரும் மே மாத இறுதியில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி இன்று (திங்கட்கிழமை) மும்பையில் தேர்வு செய்யப்பட உள்ளது. இதில் 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்திக் தேர்வு செய்யப்படுவாரா அல்லது இளம் ரிஷப்பந்த் தேர்வு செய்யப்படுவாரா என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது என்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

"அதேபோல 4-வது பந்துவீச்சாளராக வேகப்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்படுவார் என்றால் ஆல்ரவுண்டர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைக்குமா அல்லது நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குரியாக இருக்கிறது.

ஒருவேளை மூன்றாவது சுழற்பந்துவீச்சாளர் தேவை என்றால், ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விகள் முன் நிற்கின்றன. ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களின் செயல்பாடுகளை வைத்து வீரர்கள் நிச்சயம் தேர்வு செய்யப்போவதில்லை.

இப்போதுள்ள சூழலில் இந்திய அணிக்கு இருக்கும் முக்கியச் சிக்கல் 4-வது இடத்தில் எந்த வீரரைத் தேர்வு செய்வது, மாற்று ஓபனிங் பேட்ஸ்மேன் யாரைத் தேர்வு செய்வது என்பதுதான். அந்த வகையில் அம்பதி ராயுடு, ராஹனே, ஸ்ரேயாஸ் அய்யர், விஜய் சங்கர், கே.எல்.ராகுல் ஆகியோரின் பெயர்கள்தான் தீவிரமாக பரிசீலிக்கப்படும் எனத் தெரிகிறது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "அம்பேத்கரால்தான் தேநீர் விற்றவர் பிரதமராக முடிந்தது"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நரேந்திர மோதி

அம்பேத்கர் அமைத்த வலுவான அரசியலமைப்புச் சட்டத்தால்தான் தேநீர் விற்றவர் பிரதமராக முடிந்தது என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பேசிய பிரதமர் நரேந்திர மோதி, ஏழை, எளிய மக்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அம்பேத்கர் வடிவமைத்துக் கொடுத்த அரசமைப்புச் சட்டம் மூலம் கிடைத்துள்ளது. இதனால்தான் என்னைப் போன்ற எளிய பின்னணியைக் கொண்டவர் கூட பிரதமராக முடிகிறது.

தேநீர் விற்றவரை பிரதமராக்கியது அம்பேத்கர் வடிவமைத்துக் கொடுத்த சிறப்பான அரசியலமைப்புச் சட்டம்தான். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவராக உள்ள வெங்கய்ய நாயுடு ஆகியோர் கூட மிகவும் சாதாரண விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்தான்.

அம்பேத்கர் சட்டமேதை மட்டுமல்ல. சிறந்த பொருளாதார நிபுணர், அரசியல் கொள்கைகளை வகுத்தவர், எழுத்தாளர். அவருக்கு ஆட்சியில் இருந்தவர்கள் (காங்கிரஸ்) என்ன செய்தார்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை. அவரது திறமையையும், புகழையும் மூடி மறைக்கும் அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் செய்தது" என்று மோதி கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :