நள்ளிரவு முதல் தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை: தீர்வை எதிர்நோக்கி தமிழக மீனவர்கள்

நள்ளிரவு முதல் தமிழக விசைபடகுகள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை

ஆழ்கடலில் மீன் இனப்பெருக்கத்திற்கு ஏதுவாக 60 நாட்களுக்கு மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால் சென்னை நீலாங்கரை முதல் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் வரையிலான விசைப்படகுகளை மீனவர்கள் கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.

மீன் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 60 நாட்களுக்கு விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடைவிதித்துள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை தமிழக அரசு 45 நாட்கள் மட்டுமே இத்தடைக்காலத்தை கடைபிடித்து வந்தது. ஆனால், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் என்ற நடைமுறையை அரசு பின்பற்றி வருகிறது.

தடைகாலம் நள்ளிரவில் அமலுக்கு வருவதால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துகுடி, நாகை,தஞ்சை, சென்னை, திருவள்ளுர் உள்ளிட்ட நீலாங்கரை முதல் குளச்சல் வரையிலான கிழக்கு கடற்கரை துறைமுகங்களில் உள்ள 13 மீன்பிடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்து 600 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மீனவர்கள் மீன்பிடிவலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பாக வைக்க வீட்டிற்கு கொண்டு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அரசுக்கு ஆண்டு தோறும் பல கோடி அண்னியச் செலவாணியை ஈட்டித்தரும் மீன்பிடி தொழிலாளர்கள், தற்போது தங்களது வாழ்வாதாரத்தை தேடி, மாற்றுத் தொழிலுக்காகவும் மீன்பிடி தொழில் தேடியும் வேற்று மாநிலங்களுக்கு புறப்பட தயாராகி வருகின்றனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ், "மீன்பிடி தடைக்காலத்தில் தமிழக அரசு வழங்கும் 5000 ரூபாயை உயர்த்தி பத்தாயிரம் ரூபாய் நிவாரணத் தொகையை கூடுதலாக்குவதோடு அதை தடைக் காலத்திலேயே வழங்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்துச் செல்லப்பட்ட தங்களது வாழ்வாதாரமான விசைபடகுகளை மீட்டுத்தர வேண்டும். மீன் இனப்பெருக்க காலத்தில் விசைப்படகுகளைப் போல இயந்திரம் பொருத்திய நாட்டுப் படகுகளுக்கும் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

அப்போதுதான் அரசின் திட்டம் நிறைவேறும் என்பது மட்டுமல்லாமல் தடைக்காலம் முடிந்து செல்லும் விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது என கோரிக்கை விடுத்துள்ள அவர், இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைளால் ராமநாதபுரம் மாவட்டத்தின் பிராதான தொழிலான மீன்பிடி தொழில் தடைக்காலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே முற்றிலும் பாதிப்படைந்துள்ளதால் தங்களின் வாழ்வாதாராமும் கேள்விக்குறியாகிப்போனது என்று தெரிவித்தார்.

"ஆகவே கிடப்பில் போடப்பட்டுள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தையை தடைக் காலத்திற்குள்ளாகவே பேசி நிரந்தர தீர்வை ஏற்படுத்தி, பாரம்பரிய இடத்தில் இருநாட்டு மீனவர்களும் பரஸ்பரமாக மீன்பிடிக்க இலங்கை-இந்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தமிழகம் முதல் புதுவை வரையிலான ஒட்டு மொத்த மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது" என தெரிவித்தார்.

மீன்பிடி தடைக்காலத்தால் சுமார் 4 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் சுமார் 15 லட்சத்திற்கும் மேறப்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் முற்றிலும் வேலையிழந்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்