சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்; தொடர்ந்து ஏறும் பயணச்சீட்டு விலை - தீர்வு எட்டப்படுமா?

ஜெட் ஏர்வேஸ் படத்தின் காப்புரிமை AlexeyPetrov

கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸுக்கு கடனுதவி அளிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கையில், இன்று முதல் விமானத்தை இயக்கப் போவதில்லை என்னும் தங்களது அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாகவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமானிகள் முதல் பொறியியலாளர்கள் வரை அனைத்து விதமான ஊழியர்களுக்கும் கடந்த ஜனவரி மாதம் முதல் ஊதியம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ள நேஷனல் ஏவியேட்டர்ஸ் கில்ட் என்னும் விமானிகள் சங்கம், "கடனுதவி தொடர்பாக நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையை அடுத்து, 'ஊதியமின்றி பணி செய்ய முடியாது' என்ற நிலைப்பாட்டை விடுத்து, நிறுவனத்தின் செயல்பாட்டை தக்கவைப்பதற்கு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மும்பை அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு அந்நிறுவனத்தின் விமானிகளும், மற்ற ஊழியர்களும் முடிவு செய்துள்ளனர். முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று, விமான நிறுவனத்தின் எதிர்காலம் குறித்து எடுக்கப்பட்டுள்ள முடிவு பற்றி தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜெட் நிறுவன ஊழியர்கள் டெல்லி விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை Hindustan Times

கடந்த வியாழக்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நேரத்தில் ஜெட் நிறுவனத்தின் பல்வேறு சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்த போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், "வரும் 16ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சர்வதேச விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கும். அதுவரை பல்வேறு மார்க்கங்களில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக, கடந்த வெள்ளிக்கிழமையன்று பிரதமர் அலுவலகத்தில், விமானப் போக்குவரத்து துறையின் செயலாளர் பிரதீப் சிங் கரோலா தலைமையில் அவசர கூட்டம் நடைபெற்றதாக ஈ.டி. நவ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த கூட்டத்திற்கு பிறகு பேசிய கரோலா, வாரயிறுதியில் 6-7 விமானங்களை இயக்குவதற்கு தேவையான பணம் மட்டுமே ஜெட் நிறுவனத்திடம் உள்ளதாகவும், திங்கட்கிழமை முதல் தொடங்கும் வாரத்திலிருந்து எத்தனை விமானங்கள் இயக்கப்படும் என்பது கடனுதவி கிடைப்பதை பொறுத்தே அமையுமென்றும் தெரிவித்திருந்தார்.

சுமார் 1.2 பில்லியன் டாலர்கள் கடன் சுமையில் சிக்குண்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் செயல்பாட்டை தக்க வைக்கும் வகையில், சுமார் 217 மில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குவதற்கு கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடனுதவி கிடைக்கும் பட்சத்தில் அதை ஜெட் நிறுவனம் எவ்வாறு பயன்படுத்தும் என்பது குறித்த அறிக்கையை அந்நிறுவனம் தயார் செய்தவுடன், ஸ்டேட் வங்கி தலைமையிலான கடனுதவி வழங்கும் வங்கிகள், முதல் கட்டமாக 145 மில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக பிசினெஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே கடன் பிரச்சனையால் ஆட்டம் கண்டு வருகிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த விவகாரத்தில் தலையிட்ட மத்திய அரசு, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு உதவுமாறு பொதுத்துறை வங்கிகளை கேட்டுக்கொண்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் அதை சார்ந்துள்ள 23,000 பேரின் வேலைக்கு ஏற்படும் பாதிப்பையும், மக்களவைத் தேர்தலையும் மனதில் வைத்தே இந்த முடிவை பிரதமர் நரேந்திர மோதி எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தற்காலிகமாக நிலைநிறுத்துவதற்கு வங்கிகளின் கடனுதவி உதவும் என்றாலும், புதிய முதலீட்டாளர்களை ஈர்ப்பதே நீண்டகால அடிப்படையில் தீர்வாக இருக்குமென்றும் கருதப்படுகிறது. இந்நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் விண்ணப்பிப்பதற்காக காலக்கெடுவை மே 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆறு மாதகாலத்தில் உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் விமான பயணச்சீட்டின் விலை 30-40 சதவீதம் அதிகரித்துள்ளதாக சந்தை மதிப்பீட்டு நிறுவனமான ஐசிஆர்ஏ தெரிவித்துள்ளது.

"குறைந்த விலை விமான சேவைகளை சார்ந்தே இந்தியாவின் உள்நாட்டு போக்குவரத்து இயங்கி வருகிறது. இந்நிலையில், விமான பயணச்சீட்டு விலை உயர்வின் காரணமாக கடந்த 53 மாதங்களில் இல்லாத அளவுக்கு உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. அதாவது, வருடாந்திர சராசரியுடன் ஒப்பிடும்போது கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8.9 சதவீதம் சரிந்துள்ளது" என்று அந்த அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :