முசிறி பகுதி விவசாயிகளின் பிரச்சனைகள் என்ன? #BBCTamil Ground Report

முசிறி பகுதி

திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கிறது முசிறி. முழுக்க, முழக்க கிராமப்புறங்களைக் கொண்டுள்ள இத்தொகுதியில் தொட்டியம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, மோருபட்டி ஆகிய பேரூராட்சிகளும், பிள்ளபாளையம், கரிகாலி, கார்குடி, வலையெடுப்பு, உள்ளிட்ட கிராமங்களும், அதனை சார்ந்த ஏராளமான கிராமங்களும் அடங்கியுள்ளன.

விவசாயமே பிரதான தொழிலாக விளங்கும் இப்பகுதியில், முசிறி, தொட்டியம் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு காவிரி நீர், கடைமடை வரை போய் சேருவதில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

தாத்தையங்கார்பேட்டை பகுதி விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தையே நம்பி உள்ளதால், மழை இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்காக புளியஞ்சோலையிலிருந்து மகாதேவி ஏரி வரையிலான உபரி நீர் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

அகண்ட காவிரி ஓடும் இப்பகுதியில், ஆற்றுமணல் எடுப்பதை தடுத்து காவேரியில் முறையான வாய்கால் அமைத்து பாசனத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இப்பகுதிகளில் பிரதானமாக வாழை மற்றும் வெற்றிலை விவசாயம் செய்து வருகின்னர்.

இப்பகுதி வெற்றிலை,வாழைப்பழம் என்றால் சந்தையில் தனி சிறப்பு என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். ஆனால்,தண்ணீர் இன்றி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்தை விட்டு விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாவட்டங்களுக்கு சென்று விட்டதால் இப்பகுதியில் எதிர்வரும் காலங்களில் முற்றிலும் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வாழைப்பழத்துக்கு உரிய விலை இல்லை

தொட்டியம் பகுதிகளில் வாழை சாகுபடி அதிகம். ஆனால் காவேரியில் இருந்து போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால் வாழை சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

உரங்களின் விலை உயர்வால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வாழை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனாலும் கிணற்று நீர் பாசனம் மூலம் தேவைக்கு அதிகமாகவே வாழை சாகுபடி செய்யப்பட்டாலும் வாழைப்பழங்களுக்கு தமிழகத்தில் உரிய விலை கிடைப்பது இல்லை.

ஆனால் அதே நேரத்தில் இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாழைப்பழத்திற்கு தேவை மட்டும்மல்லாது நல்ல விலையும் உள்ளது. எனவே தொட்டியம் பகுதி விவசாயிகளுக்கு வாழை எந்தப் பகுதிகளுக்கு தேவை என்ற வணிகத் தொடர்பை அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் வாழை விவசாயத்தை அழிவில் இருந்து காப்பாற்ற முடியும் என தொட்டியம் வாழை விவசாயிகள் தலைவர் மருத பிள்ளை பிபிசி தமிழிடம் கூறினார்.

சிவக்காத வெற்றிலை

தொட்டியம் பகுதிகளில் விளையும் வெற்றிலைகள் ருசி மிகுந்திருப்பதால் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளி மாநிலங்களிலும் நல்ல கிராக்கி உள்ளது. இதனால் மொத்த வியாபாரிகள் ஆர்வத்துடன் வெற்றிலைகளை வாங்கி செல்கின்றனர்.

ஒரு ஏக்கரில் வெற்றிலைக்கொடி பயிர் செய்ய ரூ. 2 லட்சத்திற்கும் அதிகம் செலவாகிறது. சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. காவிரியில் தண்ணீர் வரத்து குறைவு, கிணறுகள் வறண்டதால் நீர் பாய்ச்ச முடியவில்லை. இதனால் வெற்றிலை கொடி பயிர்கள் காய்ந்து இலைகள் சருகுகளாக காய்ந்து வருகின்றன. இதேபோல பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் வெற்றிலை கொடிகள் கீழே விழுந்து விடுகின்றன.

இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி ஏராளமான வெற்றிலை விவசாயிகள் மாற்று தொழிலுக்கு சென்று விட்டனர். இதைத் தொடர்து வெற்றிலை கொடிக்கால்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து விட்டது.

இந்த நிலையில், நடப்பாண்டில் காவேரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் கால்வாய்கள் முறையாகத் தூர் வாரப்படாததால் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டு பயிர்கள் கருகி இலைகள் உதிர்ந்து வருகின்றன.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய வெற்றிலை விவசாயி வைரவேல், "தொட்டியம் பகுதியில் 10 ஆயிரம் குடும்பங்கள் வெற்றிலை சாகுபடி செய்து வந்தனர். 2002 ஆண்டிற்கு பிறகு காவிரியில் முறையாக தண்ணீர் கிடைக்காததால், சிறிது சிறிதாக வெற்றிலைப் பயிரைக் கைவிட்டு விட்டு அண்டை மாவட்டங்களுக்கு மாற்று தொழில் தேடி சென்று விட்டனர். இதனால் வரும் ஆண்டுகளில் வெற்றிலை விவசாயம் செய்வதற்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலை ஏற்படும்" என்றார்.

வெற்றிலை விவசாய தலைவர் வரதராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிலை விவசாயம் செய்து வருகிறோம். காவிரியில் ஆற்று மணல் அள்ளுவதால் ஊற்று தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்தால் மட்டுமே வெற்றிலை விவசாயம் செய்ய முடியும். ஆனால் தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வெற்றிலைக்கு உரிய விலையும் கிடைப்பதில்லை" என்று கூறினார்.

வாழைப்பழத்தில் உணவுப் பொருள்கள் தயாரிப்பு

வாழைப்பழங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் அழுகிவிடும். அதனை பயனுள்ள உணவுப் பொருட்களாக தமிழ்நாடு வாழை விவசாயிகள் சங்கத்தினர் உற்பத்தி செய்து வருகின்றனர். இதற்காக தொட்டியம் பகுதியில் சூரிய ஒளி கூடாரம் உள்ளடக்கிய தொழிற்சாலை இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் சூரிய ஒளி தொழில்நுட்ப முறையில் பழத்தில் உள்ள நீர்சத்து நீக்கப்பட்டு, பழங்களை இயற்கை முறையில் பதப்படுத்தி உணவு பொருள்களாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த உணவு பொருள்களை ஆறு மாதம் முதல் எட்டு மாதம் வரை பயன்படுத்தலாம். இதனால் வாழைப்பழங்கள் எளிதில் கெட்டு போகமல் காக்க முடியும் என தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வாழை உற்பத்தியாளர் சங்க பொருளாளர் சுப்பிரமணியன், "2014 ஆண்டு பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கையில், இத்தொழிலை மேம்படுத்த கன்னியாகுமரி முதல் டெல்லி வரை ரயில் இயக்கபடும் என அறிவித்திருந்தனர்.

ஆனால் கடந்த ஐந்தாண்டுகளில் அதற்கான முதற்கட்ட நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் ரயில் இயக்கபடவில்லை. இருப்பினும் இந்தாண்டு தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்தனர்.

ஆனால், அறிவிப்பு எதுவும் இடம் பெறவில்லை. இந்த ரயிலினால் வட மாநிலங்களில் கிடைக்காத தமிழகத்தில் அதிகம் கிடைக்கும் வாழை ரகங்களான செவ்வாழை, நேந்திரன், ரஸ்தாளி போன்றவற்றை டெல்லி போன்ற பெரு நகரங்களில் விற்பனை செய்ய உதவியாக இருக்கும்.

அதே போல் வட மாநிலங்களில் கிடைக்கும் பழங்களை தமிழகத்திறக்கு விற்பனைக்கு கொண்டு வரவும் இந்த ரயில் பயன்படும் என்று கூறினார் சுப்ரமணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்