ஜெயப்பிரதா குறித்து அவதூறு பேசிய அசம் கான்: மகளிர் ஆணையம் நோட்டீஸ்

நடிகை ஜெயப்பிரதா படத்தின் காப்புரிமை Hindustan Times
Image caption நடிகை ஜெயப்பிரதா

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் நடிகை ஜெயப்பிரதா குறித்து, அவதூறாக பேசியதாக சமாஜ்வாதி கட்சியின் அசம் கானுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், ராம்பூர் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் அசம் கான், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், தனக்கு எதிராக அங்கு போட்டியிடும் ஜெயப்பிரதா குறித்து அவதூறாக பேசியதாக காணொளிகள் வெளியாகின.

கடந்த 2004 மற்றும் 2009ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் சமாஜ்வாதி கட்சியில் இருந்து போட்டியிட்ட ஜெயப்பிரதா இரு முறையும் எம்பி-யாக தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சிக்கு எதிராக செயல்படுவதாக கூறி 2010ஆம் ஆண்டு அவர் நீக்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் பாஜகவில் இணைந்தார் ஜெயப்பிரதா.

"…17 நாட்களில் அவர்களது உள்ளாடை நிறம் 'காக்கி' என்பதை நான் கண்டுபிடித்து விட்டேன்…" என்று அசம் கான் பேசியதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் பகிரப்பட்டன.

ஆனால், தான் ஜெயப்பிரதாவின் பெயரை குறிப்பிடவில்லை என்று கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்படி தான் அவதூறாக பேசியது நிரூபிக்கப்பட்டால், தாம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அசம் கான் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை NurPhoto
Image caption சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் அசம் கான்

ஜெயப்பிரதா குறித்த அசம் கானின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. பெண்கள் குறித்து கீழ்த்தரமான கருத்துகளை தெரிவித்ததற்காக அசம் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மகளிர் ஆணையம், விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மகாபாரதத்தில் வருவது போல திரௌபதியின் சேலை இழுக்கப்பட்டிருக்கிறது. பீஷ்மரைப் போல அமைதியாக இருந்து தவறு செய்யாதீர்கள் என்று முலாயம்சிங் யாதவிடம் அதில் அவர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்திலுள்ள ராம்பூர் தொகுதியில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது.

ஜெயப்பிரதா என்ன கூறுகிறார்?

அசம் கான் இவ்வாறு இழிவாக பேசுவது ஒன்றும் புதிதல்ல என்று ஜெயப்பிரதா தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை GETTY IMAGES / FACEBOOK / JAYAPRADA

"நான் 2009ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டேன். அப்போதும் என்னை குறித்து அவதூறாக அவர் பேசினார். அப்போது எனக்கு அக்கட்சியில் யாரும் ஆதரவளிக்கவில்லை" என்று கூறினார்.

அசம் கான் பேசிய சில வார்த்தைகளை தாம் திரும்ப கூறவே முடியாத அளவிற்கு உள்ளது என்று குறிப்பிட்ட ஜெயப்பிரதா, அவர் தேர்தலில் போட்டியிடுவது ரத்து செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுபோன்றவர்கள் தேர்வு செய்யப்பட்டால், சமூகத்தில் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியாது என்றார்.

இது தொடர்பாக அசம் கான் மீது ராம்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :