"கஜ புயலில் தென்னந்தோப்பை இழந்த விவசாயிகளுக்கு உளுந்து விதை தந்த அரசு"

தமிழக விவசாயிகளின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும்? படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

கஜ புயலின் தாக்கத்தில் இருந்து இன்னும் தென்னை விவசாயிகள் மீளவில்லை. தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் தென்னை மரங்களை அப்புறப்படுத்த போதுமான பணம் இல்லாததால், வேரோடு சாய்ந்த மரங்கள் இன்னும் தோப்புகளில் கிடக்கின்றன.

தஞ்சாவூர் பொன்னவராயன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த 52 வயது இளமுருகன் ஐந்து ஏக்கர் நிலத்தில் தென்னை விவசாயம் செய்துவந்தார். பட்டதாரியாக இருந்தாலும், தனது குடும்பத்திற்கு சொந்தமான தென்னந்தோப்பை கவனித்துக்கொண்டு அந்த வருமானத்தில் வாழ்ந்துவந்தார்.

டெல்டா சோகம்

''கஜ புயலில் ஐந்து ஏக்கரில் இருந்த தென்னை மரங்களில் 80 சதவீதம் விழுந்துவிட்டன. அரசாங்கம் ஒரு மரத்திற்கு ரூ.1,100 கொடுத்தது. ஆனால் அந்த பணம் விழுந்த தென்னை மரங்களை அப்புறப்படுத்துவதற்கு செலவாகிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஆலோசிக்காமல் அரசாங்கம் தென்னை விவசாயிகளுக்கு உளுந்து பயிர்செய்துகொள்ளுங்கள் என உளுந்து விதைகளை கொடுத்துள்ளது. பாதிப்புக்கு ஆளான நிலத்தை இன்னும் பதப்படுத்தவில்லை, இந்த விதைகள் எங்கள் நிலத்திற்கு ஏற்றவையாகவும் இல்லை. எனவே, பலரும்  உளுந்து விதைகளை சந்தையில் விற்றுவிட்டனர்,''என்கிறார் இளமுருகன்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப் படம்

கடந்த 30 ஆண்டுகளாக முழுநேர தென்னை விவசாயியாக வேலை செய்த இளமுருகன் இனி விவசாயத்தை தொடர்வதா? இல்லையா? கடனில் இருந்து எப்படி மீள்வது? என்ற குழப்பத்துடன் இருப்பதாக கூறுகிறார். இந்த தேர்தலில் அரசியல் கட்சியினர் கொடுக்கும் வாக்குறுதிகளை நம்புவதற்கு தயாராக இல்லை என்கிறார் இளமுருகன்.

பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வீரசேனன் கூறுகையில், கஜ புயல் நிவாரணமாக கொடுத்த தொகையை பல விவசாயிகள் தங்களது கடனுக்கு வட்டி கட்டுவதற்கு பயன்படுத்த முடிந்தது என்றார். ''ஒரு ஏக்கரில் 175 தென்னை மரங்கள் என்ற விதிப்படி ஒரு மரத்திற்கு ரூ.1,100 என இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மரம்  சுமார் 50 ஆண்டுகள் வரை வருமானம் தரும். ஒரு மரத்தை இழந்தவருக்கு வெறும் ரூ.1,100 மட்டும் கொடுப்பதால் என்ன லாபம் கிடைக்கும்?'' என கேள்வி எழுப்புகிறார் வீரசேனன்.

விவசாயிகளுக்கு பயிர் கடனை ரத்து செய்வது குறித்து எல்லா தேர்தல் நேரத்திலும் பேசப்படுகிறது, ஆனால் விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது பற்றி அரசியல்வாதிகள் பேசுவதில்லை என்கிறார் செயற்பாட்டாளர் மன்னார்குடி ரங்கநாதன்.

''விவசாயிகளுக்கு விளைச்சலுக்கு ஏற்ற விலையை கொடுக்காமல், தேவையான பயிர்க் காப்பீடு திட்டத்தை கொண்டுவராமல், ஒவ்வொரு தேர்தலிலும் கடனை ரத்து செய்வதில் நியாயம் இல்லை. காப்பீட்டுத் திட்டம் கொண்டுவரப்பட்டால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால், விவசாயிகளுக்கு உதவித் தொகை தருவதற்கு பதிலாக காப்பீட்டு தொகை பெருமளவு அவர்களுக்கு உதவும்.  அதே நேரம் பூச்சி  பாதிப்பு உள்ளிட்ட விளைச்சலில் பிரச்சனை வந்தாலும் அதற்கு விவசாயிகள் கவலைப்படாமல் இழப்பீட்டுத் தொகையை  கொண்டு நம்பிக்கையுடன் வாழலாம்,'' என்கிறார் அவர்.     

எட்டுவழிச்சாலை

தஞ்சாவூரை அடுத்து எட்டுவழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட சேலம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளைச் சந்திக்கச் சென்றோம்.

எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவந்த விவசாயிகள், நிலம் கையகப்படுத்தப்பட்டபோது தங்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு எந்த விதத்திலும் பயன் தராது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுவரும் வேளையில், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்தப்படும் என்றும், விவசாயிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நிதின் கட்கரி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி போராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயி ராமசந்திரனிடம் பேசினோம்.

''தேர்தல் அறிக்கை வெளியிடுவது, பிரச்சாரம் செய்வது போன்ற நேரங்களில் விவசாயிகளை கருத்தில் கொண்டு பணியாற்றுகிறோம் என தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால் மீண்டும் தேவையற்ற திட்டங்களை கொண்டுவரவுள்ளதாக உறுதியாக பேசுகிறார்கள். இதுபோன்ற பேச்சுகள் எங்களை மீண்டும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது,''என்கிறார் ராமச்சந்திரன்.

சென்னை-சேலம் எட்டு வழிச் சாலை திட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விவசாயி பி.கிருஷ்ணமூர்த்தி தனக்கு மேலும் ஒரு சவால் காத்திருக்கிறது என்று நினைக்கிறார். ''சேலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதியாக பேசுகிறார். ஆயிரக்கணக்கான விவசாயிகள் எதிர்க்கிறோம் எனத் தெரிந்தும் இந்த திட்டத்தை செயல்படுத்தப்போவதாக கூறுவது விவசாயிகளுக்கு எதிரான ஒரு செயல். எட்டு வழிச் சாலை திட்டத்திற்காக நிலம் கையப்படுத்தியதில் இருந்து பல விவசாயக் குடும்பங்கள் எதிர்காலம் என்னவாகும் என்ற பயத்தில், மன உளச்சலில் இருக்கிறோம். கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தங்கள் நிலத்தில் நாங்கள் பயிர் செய்ய முடியாமல், பல விவசாயிகள் கடனாளிகளாக மாறிவிட்டனர்,''என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

எட்டுவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்தால், உச்சநீதிமன்றத்தை நாடி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க விவசாயிகளும் தயாராகி உள்ளனர். ''சென்னை-சேலம் இடையே ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள மூன்று சாலைகளை விரிவுபடுத்தினால் பயண நேரம் மிச்சம் ஆகும். அதைவிட வணிக நோக்கத்திற்காக சிந்தித்தால்கூட, தற்போதுள்ள ரயில் சேவையை மேம்படுத்தி, விரைவு ரயில் பாதை ஒன்றை தனியாக அமைத்தால் போதுமானது,''என்கிறார் கிருஷ்ணமூர்த்தி.

அரசின் மீது புகார்கள் இருந்தபோதும், பாதிக்கப்பட்ட விவசாயிகள் வெவ்வேறு அரசியல் பின்புலம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை கணிப்பது கடினம். நோட்டாவுக்கு வாக்களிக்க இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

''கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகள் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். தஞ்சாவூர் டெல்டா பகுதி தொடங்கி, மீத்தேன் திட்டம், கதிராமங்கலம் எண்ணெய் குழாய் உடைப்பு, பாசனத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்த விவசாயிகள், புயல், வெள்ளத்தில் அவதிப்பட்டவர்கள் என பலரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஆனால், இந்த தேர்தலில் யார் மீதும் நம்பிக்கை ஏற்படவில்லை என்பதால், நோட்டாவுக்கு வாக்களிக்க உள்ளோம்,''என்கிறார் புதுக்கோட்டை விவசாயி சீனிவாசன்.   

விவசாயிகள் கூட்டமைப்பு

விவசாயிகள் இந்த தேர்தலில் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று இயற்கை வேளாண்மை செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் பாமயனிடம் கேட்டபோது, "கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களால் உள்ளதுபோல விவசாயிகள் சங்கங்கள் தமிழகத்தில் வலுவாக இல்லை என்பதால் அவர்களது வாக்குகள் யாருக்கு மொத்தமாக கிடைக்கும் என்பதை உறுதியாக கணிக்கமுடியாது" என்றார்.

''தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேறுவேறு பிரச்சனைகள் உள்ளன. விவசாயிகள், தங்களின் சொந்த பிரச்னையை முன்னிறுத்தி வாக்களிப்பார்கள். விவசாய அமைப்புகள் தனித்தனியாக இருப்பதால், விவசாயிகளின் வாக்குகள் ஒரு கட்சிக்கு கிடைக்கும் என்று கூறமுடியாது. பயிர்க்கடன் தள்ளுபடி போன்ற அறிவிப்புகள் கவர்ச்சிகரமாக இருக்கின்றன. அந்தந்த தொகுதி வேட்பாளர்களைப் பொருத்தும் விவசாயிகளின் தேர்வு மாற வாய்ப்பிருக்கிறது''என்கிறார் பாமயன்.  

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :