அபிநந்தன் பாஜக-வுக்கு வாக்களிக்க சொன்னதாக காட்டும் பதிவு உண்மையா? #BBCFactCheck

  • உண்மை கண்டறியும் குழு
  • பிபிசி நியூஸ்

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் தாம் பாஜக-வை ஆதரிப்பதாகவும், தமது வாக்கு அந்தக் கட்சிக்குதான் என்றும் கூறுவதாக காட்டும் சமூக ஊடகப் பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

பகிரப்படும் அந்தப் புகைப்படப் பதிவில் இருக்கும் நபர் அபிநந்தன் போலவே உள்ளார்.

என்ன நடந்தது?

அந்தப் பதிவில் இப்படி விவரிக்கப்பட்டுள்ளது, "இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாஜக-வை ஆதரிக்கிறார். அவரும் பிரதமர் நரேந்திர மோதிக்குதான் வாக்களித்துள்ளார். இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோதியைவிட வேறு எவரும் சிறந்த பிரதமர் இல்லை. நண்பர்களே, ஜிஹாதிகளும், காங்கிரஸும் உணரட்டும் அவர்களால் ராணுவ வீரர்களை உயிருடன் மீட்க முடியாது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் இயக்கிய போர் விமானம் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் பிப்ரவரி 27ஆம் தேதி சுடப்பட்டது. பின் பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபட்ட அவர், மார்ச் 1ஆம் தேதி இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த சமயத்தில் இரண்டு நாடுகள் இடையே பெரிய அளவில் பதற்றம் நிலவியது.

பிப்ரவரி 14ஆம் தேதி காஷ்மீரின் புல்வாமாவில், நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இறந்தனர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள ஆயுதக்குழுக்களின் முகாம்களை பிப்ரவரி 26ஆம் தேதி தாக்கியதாக இந்தியா கூறியது.

இதற்கு பதிலடியாக, மறுநாளே (பிப்ரவரி 27ஆம் தேதி) இந்திய வான் பரப்பில் புகுந்து தாக்கியதாக பாகிஸ்தான் கூறியது. அப்போது பாகிஸ்தானின் விமானத்தை திருப்பித் தாக்கிய அபிநந்தனின் விமானம் தாக்கப்பட்டதாகவும் அந்நாடு கூறியது.

அபிநந்தன் ஒரு கதாநாயகனாக இந்தியாவில் கொண்டாடப்படுகிறார்.

இவர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயமடைய வலதுசாரி குழுக்கள் முயல்வதாக தெரிகிறது. நமோ பக்த் (NAMO Bhakt) மற்றும் மோதி சேனா (MODI Sena) ஆகிய வலதுசாரி குழுக்கள் இந்த பதிவை பரவலாக பகிர்ந்தன.

இது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பல்லாயிரம் கணக்கான முறை பகிரப்பட்டது.

வாட்ஸ் ஆப் பயனர்கள் அந்த பதிவின் உண்மைத் தன்மையை அறிய அந்த புகைப்படத்தை பிபிசி-க்கு அனுப்பினர். அந்த புகைப்படத்தை ஆய்வு செய்ததில் அது உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

உண்மை என்ன?

அந்த விமானி தேசிய நாயகனாக கொண்டாடப்படுகிறார். அவரது மீசை மிகப்பிரபலமடைந்தது. இந்தியர்கள் அவரை போல மீசை வைத்துக் கொள்ள விரும்பினர்.

அபிநந்தன் போல மீசை வைத்து, மூக்கு கண்ணாடி போட்டிருக்கும் அந்த நபர் பாஜக-வின் தாமரை சின்னம் பொறித்த துண்டு அணிந்திருந்தார்.

அந்த புகைப்படத்தை துல்லியமாக ஆராய்ந்ததில் ஏராளமான வேற்றுமைகள் அந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கும் அபிநந்தனுக்கும் இருப்பது தெரியவந்தது.

அபிநந்தனுக்கு உதட்டுக்கு கீழ் மச்சம் இருக்கும். ஆனால், இந்த புகைப்படத்தில் இருக்கும் நபருக்கு அவ்வாறான மச்சம் ஏதும் இல்லை.

அந்த மனிதருக்கு பின்னால் 'சமோசா சென்டர் ' என்று குஜராத்தியில் எழுதப்பட்டிருக்கும். இதன் மூலம் இந்தப் படம் குஜராத்தில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆனால், குஜராத்தில் இன்னும் தேர்தலே தொடங்கவில்லை.

இதற்கெல்லம் மேலாக அபிநந்தன் மார்ச் 27ஆம் தேதி இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் பணிக்கு சேர்ந்துவிட்டார்.

மருத்துவ அறிக்கையின் படி, மருத்துவர்கள் அவரை நான்கு வாரம் ஒய்வெடுக்க சொன்னார்கள். ஆனால், முன்னதாகவே அவர் பணியில் சேர்ந்துவிட்டார்.

அவர் இப்போதும் இந்திய விமானப் படையில்தான் பணியாற்றுகிறார். இந்திய விமானப் படை சட்டம் 1960-ன் படி விமானப் படையில் பணியாற்றுகிறவர்களுக்கு அரசியல் கட்சிகளில் சேர அனுமதியில்லை.

இந்திய விமானப் படையில் பணியாற்றுகிறவர்கள், அந்த நபர் விங் கமாண்டர் அபிநந்தன் இல்லை என்று தீர்க்கமாக சொல்லுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :