மாஃபா பாண்டியராஜன் - ‘அடிமைதனத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது‘

அடிமைதனத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது: தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் பலவிதமான வாக்குறுதிகளை தருகிறார்கள் என்றும் தமிழகத்தின் உரிமைகளை கேட்டு பெற தேசியஅளவில் ஒரு தொடர்பு வேண்டும் என்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துளோம் என்கிறார் அதிமுக அமைச்சர் மாபா பாண்டியராஜன்.

தீவிர பிரச்சாரத்திற்கு மத்தியில் பிபிசி தமிழின் பிரமிளா கிருஷ்ணனிடம் அவர் அளித்த பேட்டியிலிருந்து:

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு 37 இடங்களை வென்றது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் பிற கட்சிகளுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? கூட்டணி பலம் அவசியமா?

அப்போது அம்மா (ஜெயலலிதா) இருந்தார். அவர் அமரராகிவிட்டார். கூட்டு தலைமையாக இபிஎஸ்-ஒபிஎஸ் பொறுப்பை ஏற்றுள்ளார்கள். முதலில் கட்சியில் பிளவு ஏற்பட்டு, பின்னர் ஒன்றிணைந்து தற்போது வலிமையான கட்சியாக அதிமுக மாறியுள்ளது.

அதே நேரத்தில் நாம் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய ஒன்று, அம்மா(ஜெயலலிதா) இருந்தபோது அதிமுக முந்தைய தேர்தல்களில் கூட்டணி வைத்து வெற்றிபெற்றுள்ளது. 2014ல் மட்டும் தனித்து நின்று வெற்றி பெற்றார். அவர் இல்லாத இந்த நேரத்தில் மாநில உரிமைகளை கேட்டு பெற தேசிய அளவில் நமக்கு ஒரு தொடர்பு இருக்கவேண்டும் என்பதற்காக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் தேச பாதுகாப்பு என்பதை முதன்மையாக வைத்து இந்த தேர்தலை அணுகிறார். இந்த நேரத்தில் வலிமையன பாரதம், வளமான தமிழகம் என்பது நமக்கு தேவையாக உள்ளது. அதனால் இந்த கூட்டணி வெற்றிக்கூட்டணியாக அமைந்துள்ளது.

பாமக, தேமுதிக என எங்களுடன் இணைந்துள்ள ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள வாக்குவங்கி ஒன்றுசேர்ந்து எங்கள் கட்சிக்கு இந்த தேர்தலில் அதிக பலம் சேர்க்கவுள்ளது. இந்த தேர்தலில் எந்த ரிஸ்க்கையும் எடுக்க நாங்கள் விரும்பவில்லை.

15 கட்சிகள் ஒன்றுபட்டுள்ள இந்த கூட்டணி ஒன்றாக இயங்குமா என்ற கேள்வி முதலில் முன்வைக்கப்பட்டது. அந்த கேள்விக்கான விடை தற்போது கடந்த இரண்டு வார கால பிரச்சாரத்தில் கிடைத்துள்ளது. நாங்கள் ஒன்றுகூடி நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40, இடைத்தேர்தலில் 18 தொகுதிகளிலும் வென்று எங்கள் இலக்கை அடைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள் என்பதை பிரச்சாரத்தில் பார்க்கமுடிகிறது.

கூட்டணி தலைமையை பற்றி பேசுகையில், இந்த தேர்தலின்போது மட்டுமல்ல, அதிமுக கட்சி மற்றும் அரசை பாஜக அதாவது மோதி வழிநடத்துகிறார் என்ற விமர்சனத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?திமுகவின் பிரச்சாரத்தில் ஆதிக்கவாதிகள் வேண்டாம், அடிமைகளும் வேண்டாம் என்று வெளிப்படையாக விமர்சனம் செய்வது பற்றி சொல்லுங்கள்.

திமுகவின் பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை என்பது மக்கள் மத்தியில் வெளிப்படையாக தெரிந்துவிட்டது. அடிமைதனத்திற்கும் அதிமுகவிற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ஒபிஎஸ்-இபிஎஸ் எந்த நேரத்திலும் மத்தியில் உள்ள ஆட்சிக்கோ, கட்சிக்கோ அடிபணிந்து செல்லவில்லை என்று நாங்கள் நம்புகிறோம். நீட்,ஜிஎஸ்டி, உதய் திட்டம் என எல்லாவற்றிலும் அம்மா(ஜெயலலிதா) தனது தனித்துவத்தை நிலைநாட்டினார். தற்போது அதிமுக தனது உரிமைகளுக்காக வலிமையாக பேசிவருகிறது.

மத்திய அரசிடம் மாநில உரிமைகளுக்காக பேசிவருகிறோம் என்கிறீர்கள். நீட் விஷயத்தில், திமுக தேர்வை ரத்து செய்யவேண்டும் என்கிறது. அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கேட்க வலியுறுத்தப்படும் என்கிறது.

நீட் தேர்வுக்கான அடிப்படை பிரச்சனை, கல்வி மாநில அரசின் பட்டியலில் இருந்து பொதுபட்டியலுக்கு போனதுதான். இதை செய்தது காங்கிரஸ்கட்சி.

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சி காலத்தில் கல்வி பொது பட்டியலில் வைக்கப்பட்டது. எங்களைப் பொறுத்தவரை, கல்வியை முதலில் மாநில பட்டியலுக்கு கொண்டுவரவேண்டும். அதனால்தான் எங்கள் தேர்தல் அறிக்கையில் மாநில பட்டியலுக்கு கொண்டுவருவது பற்றி வாக்குறுதி அளித்துள்ளோம். திமுக போல தேர்வை ரத்து செய்வது உடனடியாக செய்யமுடியாது.

நீட் வருவதற்கு பாதை வகுத்தது காங்கிரஸ். அந்த கட்சியோடு கூட்டணி வைத்த திமுக நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்வது வியப்பாக உள்ளது. நீட் தேவையற்ற ஒன்று என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை. நாங்கள்தான் தேர்வை ரத்து செய்யவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டோம். திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் பலவிதமான வாக்குறுதிகளை தருகிறார்கள்.

இந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் அதிமுக ஓட்டுகளில் ஒரு பகுதியை பெறுவார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். டிடிவி தினகரனின் வாக்குவங்கியை பற்றி சொல்லுங்கள்.

டிடிவி தினகரனின் வாக்கு வங்கி சரிந்துகொண்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க டிடிவி தினகரனின் கூட்டத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தொண்டர்கள் வெளியேறுகிறார்கள். அதிமுகவின் வாக்கு வங்கியில் இருந்து அவர் பெறப்போவது ஒரு சிறு பகுதி மட்டுமே. அவர் திமுகவின் வாக்குகளை கூட பெறுவார் என்று எண்ணுகிறோம். அதிமுக வாக்காளர்கள் இரட்டை இலைக்கு மட்டுமே வாக்களிப்பார்கள். இரட்டை இல்லை என்பது ஒரு தேர்தல் சின்னம் மட்டும் கிடையாது. அது ஒரு அடையாள சின்னம். அதிமுக வாக்காளர்கள் இந்த சின்னத்தை மட்டுமே நம்புவார்கள்.

கீழடி அகழ்வு பணிகளின் முடிவுகளை வெளியிடாமல், தமிழர் நாகரீகத்தை மறைக்கும் முயற்சிகளில் பாஜக ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. தொல்லியல் துறை அமைச்சராக உள்ள நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.?

கீழடி பழமையை வெளியுலகத்திற்கு கொண்டு வந்தது அதிமுக என்பதை யாரும் மறுக்கமுடியாது. கீழடி அகழ்வு பணிகள் நான்கு கட்டமாக நடந்தது. இதில் மத்திய அரசையும், மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய தொல்லியல் துறையையும் பிரித்து பார்க்கவேண்டும் என நினைக்கிறன். மோதி சொல்லி கீழடி கண்டுபிடிப்புகளை நிறுத்திவைத்துவிட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. தற்போது ஐந்தாம் கட்ட அகழ்வு பணிகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது.

அகழ்வைப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சிகளை எடுப்பது அதிமுக அரசு. இந்த வேலைகள் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தெரியாமல் போயிருக்கலாம். அங்கு சென்று திமுக அகழ்வைப்பகம் கொண்டுவருவோம் என்று சொல்வதில் தெளிவு இல்லை என மக்களுக்கு புரிந்திருக்கும். இதுவரை நான் ஐந்து முறை அங்கு சென்று நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்தோம். அந்த பிரச்னையை உருவாக்கியது திமுக. அதேபோல ஆதிச்சநல்லூர் கண்டுபிடிப்புகளை 17 ஆண்டுகளுக்கு பின்னர் நீதிமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பிக்க வைத்தது நாங்கள்தான். தமிழனின் தொன்மையை வெளிக்கொண்டுவர எல்லா முயற்சிகளையும் நாங்கள் எடுத்துவருகிறோம்.

அதிமுக கொண்டுவந்த எட்டுவழிச்சாலை திட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றம் அந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த தீர்ப்பு அதிமுக மீது விழுந்த அடி என்று புரிந்துகொள்ளலாமா?

நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்ட திட்டம் இது. சென்னையில் இருந்து சேலம் செல்வதற்கான பயண தூரத்தை குறைக்கும். செங்கம் போன்ற இடங்களில் தொழில்வளர்ச்சியை பெருக்கும். சேலத்தின் வளர்ச்சிக்கு ஒர் உந்துசக்தியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தொடங்கினோம்.

இந்த திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டது மிகவும் வெளிப்படையாக நடந்தது என்று கூறிய அமைச்சர் பாண்டியராஜன், ''இந்த திட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளது என தற்போது உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. நிலம் கையகப்படுத்துவதை நிறுத்திவைக்குமாறு கூறியுள்ளது.தேர்தல் நேரத்தில் விதிமுறைகளை பின்பற்றவேண்டும என்பதால் தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தற்போது கூறமுடியாது.தேர்தலுக்கு பின், மேல்முறையீடு செய்யலாமா அல்லது இதில் மாற்றுவழி அமைக்கமுடியுமா என்று முடிவு செய்யமுடியும்.

இந்த தீர்ப்பைக் கொண்டு எங்கள் கட்சி மீது விழுந்த அடியா, மக்கள் மீது விழுந்த அடியா அல்லது வளர்ச்சி மீது விழுந்த அடியா என யூகிக்க நான் விரும்பவில்லை. இது நல்ல எண்ணத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம். எதிர்க்கட்சிகள் சொல்வது போல பெரிய திட்டம் கொண்டுவந்தால், ஊழலுக்கு வாய்ப்பு உள்ளது என்பதால் இதை செய்தோம் என்பது கிடையாது. நாங்கள் மனவருத்தம் அடையவில்லை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :