வேலூரில் தேர்தல் ரத்தாகுமா?

வேலூரில் தேர்தலை ரத்து செய்ய விரும்பும் தேர்தல் ஆணையம்

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - "வேலூரில் தேர்தலை ரத்து செய்ய விரும்பும் தேர்தல் ஆணையம்"

தமிழகத்தில் வருகின்ற 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தலை ரத்து செய்ய விரும்புவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் திமுக தலைவர்களிடமும் இருந்து தேர்தல் ஆணையம் கைப்பற்றிய பணத்தை அடுத்து வேலூரில் நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

கடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டது.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுவதால் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இரு நாட்களுக்குப் பிறகு, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் சிமென்ட் குடோனிலிருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டதையும் அந்த செய்தி விவரித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரை நேற்றிரவுதான் (திங்கட்கிழமை) ராஷ்டிரபதி பவனுக்கு வந்தததாகவும், தேர்தல் ஆணையத்தின் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவரால் நிராகரிக்க முடியாது ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவரிடமிருந்து அதிகாரபூர்வ ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்படும் முதல் தொகுதி வேலூர் இருக்கும் என்று மேலும் அந்த செய்தி தெரிவித்துள்ளது.

தினத்தந்தி: "நீரவ் மோதி உள்பட 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்"

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption நீரவ் மோதி

சமீப காலங்களில் 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடி விட்டதாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.

"தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோதி போன்றவர்கள்தான் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாக பரவலான கருத்து நிலவுகிறது. ஆனால், 36 தொழிலதிபர்கள் சமீப காலங்களில் தப்பி ஓடி இருப்பதாக அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் கைதான ஆயுத தளவாட தரகர் சூசன் மோகன் குப்தா என்பவரின் ஜாமீன் மனு மீது டெல்லி சிறப்பு நீதிமன்றத்தி நேற்று நடந்த விவாதத்தின்போது, இத்தகவலை தெரிவித்தது.

விஜய் மல்லையா, லலித் மோதி, நீரவ் மோதி, மெகுல் சோக்சி, ஸ்டெர்லிங் நிறுவனத்தின் சந்தேசரா சகோதரர்கள் ஆகியோரும் சமூகத்துடன் பிண்ணி பிணைந்தவர்கள்தான். இருப்பினும், அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி விட்டனர். சமீப காலங்களில், இதுபோன்று 36 தொழிலதிபர்கள் வெளிநாட்டுக்கு ஓடியுள்ளனர். இவரும் தப்ப வாய்ப்புள்ளது" என்று நீதிமன்றத்தி அமலாக்கத்துறை கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து தமிழ்: "கோலி படைக்கு 7வது தோல்வி"

படத்தின் காப்புரிமை Twitter

மும்பையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐபிஎல் 2019-ன் 31வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோலி தலைமை ஆர்சிபி அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 10 புள்ளிகளுடன் 3ம் இடம் வகிப்பதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி ஏ.பி.டிவில்லியர்ஸ் (75), மொயின் அலி (50) ஆகியோரது அற்புத பேட்டிங்கினால் 171 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் என்ற ரன் எண்ணிக்கையை எட்டியது.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19 ஓவர்களில் 172/5 என்று வெற்றி பெற்று ஆர்சிபிக்கு 7வது உதை கொடுத்தது. ஆட்ட நாயகனாக மலிங்கா தேர்வு செய்யப்பட்டார்" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி: "8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வைப்போம்"

படத்தின் காப்புரிமை Twitter

சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் உள்ள பிரச்னையை மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் எடுத்துக்கூறி அத்திட்டத்தைக் கைவிட வைப்போம் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

"சேலம் கூட்டத்தில் பேசிய நிதின்கட்கரி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில்தான் 8 வழிச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார். தமிழக மக்களிடையே அந்த திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பு நிலவி வருவதை அவர் உணர்ந்திருக்கவில்லை. அவர் கூறிவிட்டார் என்பதாலேயே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவிடாது.

8 வழிச்சாலைத் திட்டம் குறித்த உயர்நீதிமன்றத் தீர்ப்பை அரசு செயல்படுத்தும். அது அரசின் கடமை என்று முதல்வர் கூறியுள்ளார். மாநில அரசின் ஒத்துழைப்பும், ஆதரவும் இல்லாமல் எந்தத் திட்டத்தையும் செயல்படுத்துவது சாத்தியமல்ல. மேலும், 8 வழிச்சாலைத் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து விளக்கி அது தேவையில்லை என்பதை நிதின் கட்கரிக்கு புரிய வைப்போம்" என்று அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் விவரிக்கப்பட்டுள்ளது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - "அதிகரிக்கும் தங்க கடத்தல்"

படத்தின் காப்புரிமை Getty Images

முன்னெப்போதும் இல்லாத வகையில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தை கடத்தும் சம்பவங்கள் நடைபெறுவதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"கடந்த நிதியாண்டில் மட்டும், அதாவது 2018-2019இல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தங்கத்தை கடத்தியதாக 461 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சுங்க அதிகாரிகளை ஏமாற்றி வெளிநாடுகளிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கும் கடத்த முயன்றதாக கடந்த ஆண்டில் மட்டும் 270.597 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் 85.55 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவை விட லண்டன் மற்றும் துபாய் போன்ற பகுதிகளில் தங்கத்தின் விலை குறைவாக இருப்பதால் அவற்றை விதிகளுக்கு புறம்பாக கடத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்" என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :