வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தலை ரத்து

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று எண்.8 வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் 10.5 லட்ச ரூபாய் மீட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் போட்டியிடுவதால் இந்த விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்பட்ட நிலையில், இரு நாட்களுக்குப் பிறகு, கதிர் ஆனந்திற்கு நெருக்கமானவர்களின் சிமென்ட் குடோனிலிருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.

சோதனை நடத்தப்பட்ட தினத்தன்று இது குறித்துக் கருத்துத் தெரிவித்த துரை முருகன், தாங்கள் எதையும் மறைக்கவில்லை என்றும் தங்களைத் தேர்தல் களத்தில் சந்திக்க முடியாதவர்கள் இம்மாதிரி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

படத்தின் காப்புரிமை Twitter

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஏப்ரல் பத்தாம் தேதியன்று கதிர் ஆனந்த் மீதும் கட்சி நிர்வாகிகள் ஸ்ரீநிவாஸன், தாமோதரன் ஆகியோர் மீது காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்தது.

இந்த நிலையில், பெருந்தொகையான பணம் வேலூர் தொகுதியில் பிடிபட்டதால் அந்தத் தொகுதியில் தேர்தலை ரத்துசெய்ய வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் அந்தத் தொகுதியில் தேர்தல் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குடியாத்தம், ஆம்பூர் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

2017ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்டபோது பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அ.இ.அ.தி.மு.கவினர் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கருதிய தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்தது.

இது தொடர்பான அறிவிக்கையையும் இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை GoI

அந்த அறிவிக்கையில்,"வேலூர் மக்களவைத் தொகுதியில் சில வேட்பாளர்கள் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுப்படுவதாகவும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்துவது பாதிப்புக்குள்ளாகி உள்ளதாகவும் கூறியது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் ஏப்ரல் 18ஆம் தேதி வேலூர் தொகுதியில் நடக்கவிருந்த மக்களவைத் தேர்தலை ரத்து செய்கிறார்." என்று விவரிக்கிறது.

'' டிடிவி தினகரன் அதிமுக வாக்குவங்கியை அசைக்கமுடியாது'' | Jayakumar Interview |

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்