டிடிவி தினகரன் பேட்டி: தேர்தலுக்காக வைரங்களை விற்றாரா சசிகலா?

டிடிவி தினகரன் பேட்டி: தேர்தலுக்காக வைரங்களை விற்றாரா சசிகலா?

தமிழ்நாட்டிலும் புதுவையிலும் சேர்த்து 40 நாடாளுமன்றத் தொகுதிகள் 19 சட்டமன்றத் தொகுதிகளில் பெரிய கட்சிகளின் கூட்டணி ஏதுமின்றி களமிறங்கியிருக்கிறார் டி.டி.வி. தினகரன்.

'எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேட்கலாம்; பதில் சொல்லத் தயாராக இருக்கிறேன்' என்றபடி புதுச்சேரியில் பிரசாரத்திற்குப் புறப்படும் முன்பாக, பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசிவிஸ்வநாதனிடம் பேசினார் டிடிவி தினகரன்.

கே. இந்தத் தேர்தலில் உங்கள் நோக்கம் என்ன - நாடாளுமன்ற இடங்களைக் கைப்பற்றுவதா அல்லது குறிப்பிடத்தக்க வாக்கு சதவீதத்தைப் பெற்று, நாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு என நிரூபிப்பதா?

ப. இந்தக் கேள்வி மட்டுமல்ல, இன்னொரு கேள்வியையும் கேட்கிறார்கள். அதாவது நாடாளுமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துகிறீர்களா அல்லது சட்டமன்ற இடைத்தேர்தலில் கவனம் செலுத்துகிறீர்களா என்கிறார்கள். என்னைக் கேட்டால் நான் இரண்டிலும்தான் கவனம் செலுத்துகிறேன்.

மாபெரும் வெற்றியைப் பெறுவோம். ஜெயலலிதா பல நாட்களாகவே தனித்துப் போட்டியிடவே விரும்பினார். அதை 2014லும் 2016லும் செயல்படுத்தினார். இப்போது நான் தனித்து தேர்தலை எதிர்கொள்கிறேன். கூட்டணி என்று வந்தால், காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் போன்ற தேசியக் கட்சிகளின் மீது தமிழக மக்களுக்கு நம்பிக்கையில்லை.

அந்தக் கட்சிகளுக்கு தமிழக நலன்களின் மீது அக்கறையில்லை. தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றித் தரவில்லை. அதனால்தான் ஜெயலலிதா தனித்து நிற்க முடிவுசெய்தார். நீட் தேர்வு, மீத்தேன், உதய் மின்திட்டம், கெயில் திட்டம் போன்றவற்றைத் தடுத்தார். இப்போது அதே வழியில் நாங்கள் போராடுகிறோம்.

நீங்கள் சொல்வதைப் போல இத்தனை சதவீத வாக்குகளைப் பெறுவதல்ல எங்கள் நோக்கம். குறைந்தது 37 தொகுதிகளில் நாங்கள் வெற்றிபெறுவோம். மே 23வரை பொறுத்திருந்து பாருங்கள்.

கே. அ.ம.மு.க. விரைவில் அ.தி.மு.கவுடன் இணைந்துவிடும் என மதுரை ஆதீனம் பேசியிருக்கிறார். இதன் பின்னணி என்ன?

ப. அவருடைய உண்மைப் பெயர் அருணகிரி. தமிழரசு பத்திரிகையில் நிருபராக இருந்தவர். சிறுவயதிலிருந்தே துறவறம் பூண்டவரல்ல. அவர் எப்போதுமே அரசியல்வாதி போலத்தான் பேசுவார். இவர் மட்டுமல்ல மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலேயும் இப்படிச் சொல்லியிருக்கிறார். அது அவரது விருப்பம். அவ்வளவுதான். அது உண்மையல்ல.

நான் ஆதீனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் எனச் சொன்னவுடன் வாயைத் திறக்கவில்லையே. ஆதீனத்தின் பெயரைக் காக்கவாவது, நாங்கள் அருணகிரி மீது வழக்குத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்படும் போலிருக்கிறது. இதெல்லாம் ஒரு திட்டமிட்ட சதி. தைரியமாக பொய் சொல்கிறார்கள் அவ்வளவுதான்.

கே. தி.மு.க. மீது நீங்கள் மென்மையான போக்கை கையாளுவதாக ஒரு பார்வை இருக்கிறது..

ப. அது ஒரு தவறான பார்வை. மற்றொருவர் சொல்கிறார், ஆளுங்கட்சியைத் தாக்கும் அளவுக்கு தி.மு.கவை தாக்குவதில்லை என்கிறார். நான் இருவரையும்தான் விமர்சிக்கிறேன். நீங்கள்தான் தி.மு.க. கூட்டணியைப் பெரிதாகப் பார்க்கிறீர்கள். அது ஒரு பெரிய கூட்டணியே அல்ல. கருணாநிதி இருந்தபோது இருந்த அளவுக்கு வாக்குவங்கி இல்லை. அதனால், எங்களுடைய எதிரிகளும் துரோகிகளும் உள்ள ஆளும் கட்சியை விமர்சிக்கிறேன்.

டிடிவி தினகரனின் முழுமையான பேட்டியை மேலேயுள்ள காணொளியில் பாருங்கள்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :