விருதுநகர் மக்களவைத் தொகுதி : பட்டாசுத் தொகுதியில் பொருளாதாரப் பிரச்சனை தேர்தலைத் தீர்மானிக்குமா?
- பிரமிளா கிருஷ்ணன்
- பிபிசி தமிழ்

பட்டாசு ஆலைகள், அச்சுத்தொழில், தீப்பெட்டி கம்பெனிகள், நெசவு தொழில் மற்றும் விவசாயம் நிறைந்திருந்தாலும், கடந்த ஐந்தாண்டுகளில் விருதுநகர் தொகுதியில் வருமானம் குறைந்து, வேலைவாய்ப்பின்மையால் வாக்காளர்கள் விரக்தியில் உள்ளனர்.
2019 மக்களவைத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள்
2019ம் ஆண்டு இந்திய மக்களவைத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பாக பொன். அழகர்சதமி, திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக் தாகூர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பரமசிவ ஐயப்பன், மக்கள் நீதி மய்யத்தின் முனியசாமி, நாம் தமிழர் கட்சியின் அருள்மொழி தேவன் ஆகியோர் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகின்றனர்.
தமிழகத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மக்களவைத் தொகுதியில் விருதுநகர், சிவகாசி, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருமங்கலம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடக்கம்.
காங்கிரஸ் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக் தாகூர், தேமுதிக சார்பில் அழகர்சாமி ஆகியோர் முன்னணி போட்டியாளர்களாக உள்ளனர். மொத்தம் 28 பேர் போட்டியிடும் இந்த தொகுதியில் 19 பேர் சுயேச்சைகள்.
தேர்தல் பிரசாரத்திற்காக செல்லும் இடங்களில் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை சொல்லி மாணிக் தாகூர் வாக்கு சேகரிக்கிறார். குறிப்பாக வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ‘நியாய் திட்டம்’ மூலமாக மாதம் ரூ.6,000 தரப்படும் என்பதை தெளிவாக சொல்லி, வாக்காளர்களை கவருகிறார்.
தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி வறுமையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்ததாகவும், தனக்கு ஒரு வாய்ப்பு தந்தால் இந்த தொகுதியை ஏற்றம் பெறச் செய்வதாகவும் சொல்லி வாக்கு கேட்கிறார்.
தலைவர்கள் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் வாக்காளர்களிடம் பேசியபோது சிறு, குறு வியாபாரிகள், விவசாயிகள் ஜிஎஸ்டி வரியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினர். மேலும் பட்டாசு ஆலைகளில் வேலை இல்லாததால் பலரும் இடம்பெயருவதாகவும் கூறினர்.
சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிற்சாலைகள் பலவும் மூடிக்கிடக்கின்றன. பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்ததை அடுத்து, சிவகாசியில் உள்ள பல நூறு பட்டாசு ஆலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
தேர்தல் சமயத்தில் இடைவிடாமல் பட்டாசு உற்பத்தி நடைபெற்ற சிவகாசியில் மயான அமைதி நிலவுகிறது. இளம் தொழிலாளர்கள் பலர் திருப்பூர் மற்றும் கேரளாவுக்கு வேலைதேடி சென்றுவிட்டனர். ஒரு சில வீடுகளில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருக்கிறார்கள்.
''எங்கள் ஊரே காலியானது போல இருக்கிறது. கந்துவட்டி வாங்கிதான் இப்போது சமாளிக்கிறோம். அடுத்த மாதம் வட்டிக்கு கொடுக்க காசில்லை,'' என்கிறார் 20 ஆண்டுகளாக பட்டாசு தொழிற்சாலையில் சரவெடிகளுக்கு திரி செய்துவந்த சித்ரா(40).
சித்ராவை போல பல தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் இருப்பதாகவும், இந்த தேர்தலை அவர்கள் விரக்தியுடன் அணுகுகிறார்கள் எனவும் புரிந்துகொள்ளமுடிந்தது.
விருதுநகரில் பல இடங்களில் குடிநீர் பிரச்சனையால் மக்கள் அவதிப்படுகின்றனர். பல ஆண்டுகளாக ஒவ்வொரு கட்சியும் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக வாக்குறுதி மட்டுமே கொடுக்கிறார்கள் என்கிறார் 50 வயது குமரேசன்.
''தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டு குடிநீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் தலைவர்கள் வாக்குறுதி தந்தார்கள். எந்த மாற்றமும் இங்கு வரவில்லை,'' என வேதனையோடு பேசுகிறார் குமரேசன்.
விருதுநகர் தொகுதியில் கணிசமான வாக்காளர்கள் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோராக இருப்பதால் சாதி மற்றும் அரசியல் சார்புகளுக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை இந்தமுறை பொருளாதார பிரச்சனைகளுக்கும் கொடுப்பார்கள் என்கிறார் பேராசிரியர் ராமஜெயம். இவர் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள சமூகவிலக்கம் மற்றும் சேர்த்தல் கோட்பாடு ஆய்வு மையத்தில் சமூக பிரச்சனைகள் தொடர்பான ஆய்வுகளை நடத்திவருகிறார்.
''2009 நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதி மறுசீரமைப்பு காரணமாக வாக்களிக்கும் தன்மை மாறியுள்ளது. ஒரு சாதியை சேர்ந்தவர்களின் வாக்குகளை பெற்றுவிட்டால் வென்றுவிடலாம் என்ற எண்ணத்தை மாற்றியமைத்த தேர்தல் அது. இந்தமுறை அதைக்காட்டிலும் வித்தியாசமான தேர்தலாக அமைந்துள்ளது.
விருதுநகர் தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் அனைத்திலும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் முனைவோர் அதிகமாக உள்ளனர். இந்த இரண்டு பிரிவைச் சேர்ந்த வாக்காளர்கள் கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர். அதிலும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதால், பொருளாதாரம் ஒரு காரணியாக அமையும் என்பது எங்கள் கணிப்பு,'' என்கிறார் ராமஜெயம்.
''ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு ஆகியவற்றால் பட்டாசு தொழில், அச்சு தொழில், பருத்தி விவசாயம் மற்றும் சிறு, குறு நிறுவனங்களில் உடல் உழைப்பு தொழிலாளர்களாக இருந்தவர்கள் பலர் வேலையை இழந்துள்ளனர். சாதாரணமாக சாதி மற்றும் அரசியல் சார்புக்கு கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை வாக்காளர்கள் இந்த தேர்தலில் பொருளாதாரக் காரணிக்கும் கொடுப்பார்கள்,''என்றும் அவர் தெரிவித்தார்.
பிற செய்திகள்
- பாரீஸ்: 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயத்தில் பெரும் தீ விபத்து
- முசிறி பகுதி விவசாயிகளின் பிரச்சினைகள் என்ன? #BBC Tamil Ground Report
- "கஜ புயலில் தென்னந்தோப்பை இழந்த விவசாயிகளுக்கு உளுந்து விதை தந்த அரசு"
- தீயில் உருக்குலைந்த பாரீஸ் நோட்ர-டாம் தேவாலயம் - புகைப்படத் தொகுப்பு
- பெண்களை மசூதிக்குள் அனுமதிக்க வேண்டும் - மனுவை ஏற்றது நீதிமன்றம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்