தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு?

திருப்புமுனைத் தேர்தல்: ஓய்ந்தது பிரச்சாரம் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு? படத்தின் காப்புரிமை Facebook

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்திருக்கிறது. பல விதங்களிலும் தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையான, இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

தமிழ்நாட்டு - புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் 23 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடக்கவிருக்கிறது. நான்கு சட்டமன்றத் தொகுதிகளைத் தவிர்த்த பிற தொகுதிகள் அனைத்திலும் ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. 4 தொகுதிகளுக்கு மட்டும் மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளைத் தவிர்த்த பிற தொகுதிகளில் செவ்வாய்க்கிழமையன்று மாலையுடன் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருகின்றன. வியாழக்கிழமை - ஏப்ரல் 18ஆம் தேதி - வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுமே மொத்தமுள்ள நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் தலா இருபது இடங்களில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள இடங்களைக் கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுத்திருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

தமிழக அரசியல் தலைவர்களாக இருந்து, இந்தியாவையே கவனிக்கவைத்த மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மறைந்துவிட்ட நிலையில், அந்தந்தக் கட்சிகளின் அடுத்தகட்ட தலைவர்கள் தங்களை நீரூபித்துக்காட்ட வேண்டிய களமாக உருவெடுத்திருக்கிறது இந்தத் தேர்தல்.

தி.மு.கவின் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் மறைந்த தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே சில தேர்தல்களில் தி.மு.கவின் வியூகத்தையும் பிரச்சாரங்களையும் கவனித்தவர் என்றாலும், கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு வரும் முதல் தேர்தல் என்பதால் ஒரு மெச்சத்தகுந்த வெற்றியை பறித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைந்த பிறகு பல அரசியல் புயல்களுக்குள் சிக்கிக்கொண்ட அ.தி.மு.க. தற்போது முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வசமிருக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற பெயரில் தனியாக கட்சி நடத்திக்கொண்டிருக்கும் டிடிவி தினகரன், எம்.ஜி.ஆர். - ஜெயலலிதாவின் பாரம்பரியத்திற்கு உரிமை கோரிக்கொண்டிருக்கிறார்.

டிடிவி தினகரனைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, தற்போதைய தமிழக அரசு நிச்சயம் நீடிக்காது என்று கருதுகிறார். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தால் ஆளுனர் உடனடியாக மாற்றப்பட்டு, இந்த ஆட்சி கவிழும் என்பது அவர் தரப்பின் கணக்காக இருக்கிறது. அந்தத் தருணத்தில் தானே ஜெயலலிதாவின் வாரிசு என்பதை நீரூபிக்கும்வகையில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுக்காட்ட விரும்புகிறார் அவர். தேர்தல் பிரச்சாரங்களில் அவருக்குக்கூடும் கூட்டம், வாக்குகளாக மாறும்பட்சத்தில் டிடிவி தினகரன், தமிழக அரசியல்களத்தில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கக்கூடும். அதை இந்தத் தேர்தல் முடிவுகள் உறுதிசெய்யுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

ஆனால், இவர்களைவிட இந்தத் தேர்தல் தற்போதைய ஆளும் அ.தி.மு.கவின் தலைவர்களான எடப்பாடி கே. பழனிச்சாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும்தான் மிக முக்கியமான தேர்தல். தற்போதைய சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 115ஆகக் குறைந்திருக்கும் நிலையில் குறைந்தது நான்கு இடங்களையாவது வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. உண்மையைச் சொன்னால், குறைந்தது பத்து இடங்களிலாவது அந்தக் கட்சி கண்டிப்பாக வெற்றிபெற்றாக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெறாவிட்டாலும், சட்டமன்றத் தேர்தலில் இந்த இடங்களைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி.

படத்தின் காப்புரிமை Getty Images

அப்படி நடக்காவிட்டால், 234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் அறுதிப் பெறும்பான்மையின்றி இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும். அதற்குப் பிறகு, தற்போது அவர் வசமுள்ள கட்சி நிர்வாகிகள் எத்தனை நாட்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான். ஆகவே, இந்தத் தேர்தலில் ஒரு வாழ்வா, சாவா போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் முதலமைச்சர்.

தி.மு.க., அ.தி.மு.க. தவிர வேறு சில கட்சிகளுக்கும் இது மிக முக்கியமான தேர்தல். விஜயகாந்தின் உடல்நலம் வெகுவாகக் குன்றியிருக்கும் நிலையில், அ.தி.மு.கவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் தே.மு.தி.க. அரசியல் களத்தில் தாங்கள் இன்னமும் வலுவுள்ளவர்கள் என்று நிரூபித்துக்காட்ட வேண்டியுள்ளது. கடந்த சில தேர்தல்களாக தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ள இந்தக் கட்சியைப் பொறுத்தவரை, இந்த முறை 4 இடங்களில்தான் போட்டியிடுகிறது. இதில் பெறும் வாக்குகளே அதன் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்த முறை அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இக்கட்சி நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் செய்திருக்கும் பிரம்மாண்டமான விளம்பரங்கள் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. இக்கட்சி பெறும் வாக்கு சதவீதம், கமல்ஹாசனின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல, சினிமாவிலிருந்து அரசியலுக்கு வரும் நடிகர்களின் கனவையும் தீர்மானிக்கும்.

இந்தத் தேர்தல் நெடுகவே, அ.தி.மு.கவும் தி.மு.கவும் வெவ்வேறு விதமான உத்திகளை பிரச்சாரத்தில் பயன்படுத்தின. தி.மு.கவைப் பொறுத்தவரை அதன் தலைவர் மு.க. ஸ்டாலின் காலையிலும் பிற்பகலிலும் வாகன பிரச்சாரத்தில் ஈடுபடுவதையும் மாலையில் மிகப் பெரிய பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதையும் வழக்கமாக வைத்திருந்தார். இதற்கேற்றபடி அவருடைய பிரச்சார உத்தியும் கால அட்டவணையும் வகுக்கப்பட்டிருந்தது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகத்திற்கு பிரச்சாரத்திற்கு வந்தால், தான் பிரச்சாரம் செய்யும் பகுதிக்கு அருகில் பிரச்சாரம் செய்தால் அந்த மேடைகளில் மு.க. ஸ்டாலின் மேடையேறினார்.

அ.தி.மு.கவைப் பொறுத்தவரை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் தனியாகவும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனியாகவும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்தனர். முதலமைச்சர் பழனிச்சாமியைப் பொறுத்தவரை முதலிரண்டு நாட்கள் கையில் மைக்கைப் பிடித்துப் பேசியவர், பிறகு தலையில் அணிந்துகொள்ளக்கூடிய 'ஹெட்செட் - மைக்' மூலம் வாகனத்தில் இருந்தபடி பேசினார்.

தன் மகன் ரவீந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிடுவதால், அங்கு பிரச்சாரத்தில் கவனம் செலுத்திய ஓ. பன்னீர்செல்வம், பிறகு பிற தொகுதிகளிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஆனால், முதலமைச்சரைப் பொறுத்தவரை பிரதமர் மோதி வந்தால் மட்டுமே பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். மற்ற தருணங்களில் வாகனத்தில்தான் பிரச்சாரம் செய்கிறார்.

கடந்த 2014, 2016ஆம் ஆண்டு தேர்தல்களோடு ஒப்பிட்டால், இணையத்தையும் சமூக வலைதளங்களையும் அரசியல்கட்சிகள் மிகத் தீவிரமாகவும் நேர்மறையான வழியிலும் பயன்படுத்தியது இந்தத் தேர்தலில்தான். கடந்த தேர்தல்களில் சமூக வலைதளங்களில் எதிர்க்கட்சிகள் குறித்த தவறான தகவல்கள், பொய்ச் செய்திகள், தங்கள் தரப்பு குறித்த மிகைப்படுத்தப்பட்ட தகவலகள் ஆகியவை பெரிய அளவில் பரப்பப்பட்டன.

ஆனால், இந்த முறை பல அரசியல்கட்சிகள் சமூக வலைதளங்களை பாரம்பரியமான தேர்தல் பிரச்சார ஊடகங்களைப் போலவே பயன்படுத்தின. தலைவர்கள், வேட்பாளர்களின் பேட்டிகள் தொகுக்கப்பட்டு, சமூக வலைதளங்களில் ஒளிபரப்பப்பட்டன. முக்கியமான தலைவர்களின் பிரச்சாரம் ஃபேஸ்புக்கில் நேரலை ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியாவதற்கு முன்பே, அக்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அதல் இடம்பெறக்கூடிய அம்சங்களை தினமும் ஒவ்வொன்றாகச் சொல்லி எதிர்பார்ப்பை உருவாக்கிவந்தார். எல்லாக் கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கைகளை தரவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியிடச் செய்தன.

முந்தைய காலகட்டத்தோடு ஒப்பிட்டால், பொறுப்போடு சமூகவலைதளங்களையும் இணையத்தையும் பயன்படுத்திக்கொள்ளும்போக்கு இந்த முறை காணப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு?

படத்தின் காப்புரிமை Getty Images

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 135.41 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடந்த சோதனையில் மட்டும் 2.5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. பிஎஸ்கே எஞ்சினீயரின் என்ற ஒரு நிறுவனத்தில் இருந்து மட்டும் 14.17 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

பணம் தவிர, 37.42 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், 37.8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள், 1022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டுள்ளன. சேலை, குக்கர் போன்ற பரிசுப் பொருட்களும் 8.15 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 4525 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தமிழகத்திலும் புதுச்சேரியிலும் மதுரை தவிர்த்த அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் துவங்கி, மாலை 6 மணிவரை நடைபெறும். மதுரைத் தொகுதியில் மட்டும் தேர்த் திருவிழா நடைபெறுவதால் வாக்குப் பதிவு 7 மணிக்குத் துவங்கி இரவு 8 மணிவரை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :