வேலூர் தேர்தல் ரத்து பற்றி மு.க.ஸ்டாலின் கேள்வி: "யாரைத் திருப்திப்படுத்த இந்த நடவடிக்கை?"

மு.க.ஸ்டாலின் படத்தின் காப்புரிமை Facebook/M.K.Stalin

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஜனநாயகப் படுகொலை என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று எண்.8 வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்துள்ளார்.

"யாரைத் திருப்திப்படுத்த?"

"வேலூர் தொகுதி தேர்தல் ரத்து - தூத்துக்குடியில் வருமான வரித்துறை ரெய்டு; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது? தேர்தலில் நடுநிலைமை என்ற தேர்தல் ஆணையக் கோட்பாடு பிரதமர் நரேந்திர மோதியின் காலில் மிதிபட்டு கிடக்கிறது - ஜனநாயகத்தை காப்பாற்ற எங்களை வீதிக்கு வந்து போராடும் சூழலை நீங்களே உருவாக்கி விட வேண்டாம்" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

"தி.மு.க.வை குறி வைத்தே "செலவினப் பார்வையாளர்கள்" மற்றும் "சிறப்பு செலவினப் பார்வையாளர்கள்" சுற்றிச் சுற்றி வந்தனர். அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வேட்பாளர்களின் முறைகேடுகள் பற்றி அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. துணை முதலமைச்சர் திரு ஓ.பன்னீர் செல்வம் தொகுதியில் இரவு பகலாக தலா 1,000 ரூபாய் விநியோகிக்கப்பட்டு - அதுகுறித்த வீடியோக்கள் வெளிவந்தும் தேர்தல் ஆணையம் ஓடி ஓளிந்து கொண்டது.

அ.தி.மு.க அமைச்சர்கள் பொறுப்பில் உள்ள தொகுதிகள் அனைத்திலும் வாக்காளர்களுக்கு பணம் தண்ணீராக கொடுக்கப்படுகிறது. ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் வெளிப்படையாகவே வழங்கப்படுகின்றன" என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருத்து

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால், வேட்பாளர் மட்டும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

திட்டமிட்ட சதி

படத்தின் காப்புரிமை Twitter

இந்த சூழலில் செய்தியாளார்களிடம் பேசிய துரைமுருகன், "தேனியில் பணம் விநியோகிக்கப்பட்டது ஊடகத்தில் வந்துள்ளது. அது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால், எங்கள் மீது நேரடி குற்றச்சாட்டை சாட்டாமல் எங்களிடம் எந்த விளக்கத்தையும் கேட்காமல் தேர்தலை ரத்து செய்திருப்பது திட்டமிட்ட சதி" என்று கூறி உள்ளார்.

ஜனநாயகத்திற்கு வெற்றி

வேலூர் தொகுதியில் தேர்தலை ரத்து செய்துள்ளது ஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

" ஏற்கெனவே தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பாக புகார் அளித்துள்ளோம். திமுக மற்றும் தினகரனின் அமுமுக முழுமையாக நம்பி இருப்பது பணம்தான். தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது ஜனாநாயகத்திற்கு கிடைத்த வெற்றி" என்று அவர் கூறினார்.

மேலும் அவர், "தேர்தலை ரத்து செய்வதைவிட, பணம் கொடுத்த வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்க குறைந்தது 25 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும். இதுதான் எங்கள் கோரிக்கை" என்று துரைமுருகன் கூறி உள்ளார்.

தேர்தல் ஆணையம் சுயமாக இயங்குகிறதா?

தேர்தல் ஆணையாம் சுயமாக இயங்குகிறதா? அல்லது யாருடைய கட்டுபாட்டிலோ உள்ளதா? என்று கேள்வி எழுப்புகிறார் திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன்.

இந்தியா முழுவதும், தமிழகம் முழுவதும் பரவலாக பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் ஒரு தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்ய வேண்டிய காரணம் என்ன?

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்க வேண்டியதுதான் என்றாலும், இது ஜனநாயகத்தின் வெற்றியாக முழுமையாக கொண்டாட முடியாத அளவிற்கு தேர்தல் ஆணையத்தின் அண்மைய செயல்பாடுகள் உள்ளன. அவர்கள் ஆளுங்கட்சியின் கைப்பாவையாக செயல்படுகிறார்கள் என்று செயற்பாட்டாளர் சந்திரமோகன் கூறுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :