பச்சிளம் குழந்தைக்காக ஐந்தரை மணி நேரத்தில் 400 கி.மீ. ஆம்புலன்ஸ் பயணம்

குழந்தை

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி - பச்சிளம் குழந்தைக்காக ஐந்தரை மணி நேரத்தில் 400 கி.மீ. பயணம்

இதய பாதிப்பு சிகிச்சைக்காக பச்சிளம் குழந்தையுடன், கர்நாடக மாநிலம், மங்களூரில் இருந்து கொச்சிக்கு ஐந்தரை மணி நேரத்தில் ஆம்புலன்ஸ் விரைந்து சென்றது. அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு - ஆதரவால் இது சாத்தியமானது, என விவரிக்கிறது தினமணி நாளிதழின் செய்தி.

மங்களூரில் இருந்து கொச்சி செல்வதற்கு சுமார் 400 கிலோ மீட்டரை கடக்க வேண்டும். இந்தத் தொலைவை சாலை மார்க்கமாக கடக்க குறைந்தது 9 மணி நேரமாவது ஆகும்.

இதய பாதிப்பால் விரைவாக சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த, பிறந்து 15 நாள்களே ஆன குழந்தையை உறவினர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க திட்டமிட்டிருந்தனர். மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் செல்ல சுமார் 12 மணிநேரம் ஆகும். இரு நகரங்களுக்கு இடையேயான தொலைவு 600 கிலோ மீட்டர்.

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, இந்த விவகாரத்தில் தலையிட்டு கொச்சியில் உள்ள அம்ருதா மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு குழந்தையின் உறவினர்களை வலியுறுத்தினார்.

அதைத் தொடர்ந்து குறைந்த பயண தூரத்தில் குழந்தை கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் ஆம்புலன்ஸ் மங்களூரில் இருந்து புறப்பட்டது.

குழந்தையின் உயிரைக் காப்பதற்காக ஆம்புலன்ஸ் தடையின்றி விரைந்து செல்வதற்கு உதவி புரியுமாறு பொதுமக்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்தார். இது, சமூக வலைதளங்களிலும் மிக வேகமாகப் பரவி மக்களிடம் சென்றடைந்தது. இரு மாநில பொதுமக்களும், அரசு அதிகாரிகளும் எந்தவித தடையுமின்றி ஆம்புலன்ஸ் செல்வதற்கு வழி அமைத்து உதவினர், என்கிறது தினமணி செய்தி.

தினத்தந்தி - மூன்று ரூபாய் கூடுதலாக வசூலித்த செருப்புக்கடைக்கு அபராதம்

பட மூலாதாரம், Getty Images

சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் பிரசாத் ரதிரி என்பவர் அங்குள்ள பாட்டா நிறுவனத்தின் கடை ஒன்றில் காலணிகள் வாங்கியுள்ளார். அப்போது, காலணிகளை எடுத்துச் செல்வதற்கான துணிப் பைக்கும் சேர்த்து 3 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது என்று தினத்தந்தி நாளிதழ் செய்தி கூறுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த அந்த நபர், அங்குள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், நுகர்வோரின் வழக்கு செலவுத்தொகையாக ஆயிரம் ரூபாய், நுகர்வோருக்கு இழப்பீட்டுத் தொகையாக மூவாயிரம் ரூபாய் மற்றும் அபராத தொகையாக ஐயாயிரம் ரூபாய் என மொத்தம் ஒன்பதாயிரம் ரூபாயை பாட்டா நிறுவனம் செலுத்தவேண்டும் என உத்தரவிட்டது.

மேலும், பொருட்களை வாங்கும் நுகர்வோர்களுக்கு இலவசமாக துணி பைகளை வழங்குமாறும் அந்நிறுவனத்தை அறிவுறுத்தியுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மேலும் சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்

பட மூலாதாரம், Getty Images

கடன் சுமையில் சிக்கியுள்ள, இந்தியாவின் மிகவும் பழைய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் இயக்கம் விமானங்களின் எண்ணிக்கை வெறும் ஐந்தாகக் குறைந்துள்ளது.

சேவைகள் மேலும் பாதிப்படையாமல் இருக்க கடன் வழங்குநர்களிடம் அவசரகால நிதியைக் கேட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடன் தொகை மற்றும் பிற நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை 10,000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் சூழலில், வங்கிகள் 1,500 கோடி ரூபாய் மட்டுமே வழங்க முன்வந்துள்ளன என்கிறது அந்தச் செய்தி.

தி இந்து - இந்தியாவில் பிரசாரம் செய்த வங்கதேச நடிகர்

வங்கதேசத்தைச் சேர்ந்த பிர்தௌஸ் அகமது எனும் நடிகர் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ததால் சர்ச்சை வெடித்தது என்று தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

விசா விதிமுறைகளை அவர் மீறியதால், அவரது விசாவை ரத்து செய்துள்ள இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகம், அவரை நாட்டை விட்டு வெளியேற, செவ்வாயன்று உத்தரவிட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :