தூத்துக்குடியிலும் தேர்தலை நிறுத்த சதி: வருமான வரித்துறை சோதனைக்கு பின் கனிமொழி

கனிமொழி

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images

வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியதுபோல் தூத்துக்குடியிலும் மக்களவைத் தேர்தலை நிறுத்தும் சதி நடைபெறுவதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த தொகுதியில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 18-ம் நடக்குவுள்ள நிலையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்தன.

கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை செய்த வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் அடை அதிகாரிகள் வெறுங்கையுடன் திரும்பியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், "நான் எதிர்க்கட்சி வேட்பாளராக இருப்பதாலேயே என்னை சோதனையிட வந்துள்ளனர் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு இங்கு எதுவுமே கிடைக்கவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டபின் திரும்பி சென்றுவிட்டனர்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் கனிமொழி.

"வேலூரில் தேர்தலை நியாயமற்ற முறையில் நிறுத்திவிட்டது போல் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, தோல்வி பயத்தால் இங்கும் தேர்தலை நிறுத்தலாம் என்ற நப்பாசையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது."

"தமிழிசை செளந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளது. அங்கு சென்று சோதனை நடத்த முடியுமா?" என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

தூத்துக்குடியில் பிரசாரத்துக்காக கடந்த இரண்டு மாதங்களாக கனிமொழி குறிஞ்சி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார். இந்த வீட்டில்தான் வருமான வரித்துறையின் சோதனை நடைபெற்றது.

திமுகவைச் சேர்ந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்னன் வீட்டிலும் பண்ணை வீட்டிலும் 2-3 நாள்கள் வருமான வரித் துறை சோதனை செய்தது. ஆனால் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. ஆவணங்கள் மட்டும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

11.48 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது - தேர்தல் ஆணையம்

செவ்வாய் மாலை வேலூர் தொகுதியில் மக்களவைத் தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் திமுக சார்பில் வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீடு மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் வீடுகளிலும், பிற இடங்களிலும் வருமான வரித்துறையால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 11.48 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது என தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

வார்டு வாரியாக பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் தனித்தனி கட்டுகளில் இருந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட பணம் குறித்து கதிர் ஆனந்த் தரப்பில் முறையான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என்றும், வேலூர் தொகுதியில் தேர்தலை நிறுத்தியதற்கான காரணமாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை ரத்து செய்வதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 14-ம் தேதி தேர்தல் ஆணையம் அளித்த பரிந்துரையை ஏற்று வேலூர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு ஓர்உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை குடியரசுத் தலைவர் ரத்து செய்ததாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் முப்பதாம் தேதியன்று, முன்னாள் தி.மு.க. அமைச்சரும் அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் இல்லத்திலும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :