ஆண்டிப்பட்டியில் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் பறிமுதல்; துப்பாக்கிச் சூடு

Keyframe #9

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையைத் தடுத்தபோது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அங்குள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிமனையில் பெருமளவில் பணம் இருப்பதாக தேர்தல் அதிகாரிகளுக்கு தகவல் கூறப்பட்டது.

இந்த கட்சி அலுவலகம் ஆண்டிப்பட்டி காவல்நிலையம் அருகே உள்ள தனியார் வணிக வளாகத்தின் தரைத் தளத்தில் செயல்படுகிறது. தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித் துறையினர் அங்கு சென்றபோது, அந்த அலுவலகத்தில் இருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் அவர்களைத் தடுத்தனர்.

இதனால் உடன் வந்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது அவர்களைத் தடுத்த தொண்டர்களில் சிலர் கையில் வைத்திருந்த பண பாக்கெட்டுகளுடன் ஓடிவிட்டனர். இந்த சோதனையின்போது, ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்படும் தபால் வாக்குச் சீட்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இந்தத் தேர்தல் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட பணம், தனித்தனியாக 94 கவர்களில் இடப்பட்டு, வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் கருதுகின்றனர். இந்த சோதனையில் மொத்தமாக ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை அதிகாலை 5.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.

புதன்கிழமையன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு அமைப்பைப் போல செயல்படுகிறது என்று குற்றம்சாட்டினார். "அ.தி.மு.க. தமிழ்நாடு முழுக்க பணம் கொடுப்பது உலகத்திற்கே தெரியுது..சட்டமன்றத் தேர்தல் தொகுதிகளில் 2 ஆயிரமும் நாடாளுமன்றத் தொகுதிக்கு ஆயிரம் ரூபாயும் கொடுக்கிறது.. பெரியகுளத்திலும் ஆண்டிப்பட்டியிலும் ஆயிரம் ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். நிலக்கோட்டையில் 2,000 கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பல வீடியோக்கள் உள்ளன. என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்? யாரையாவது கைதுசெய்ய முடியுமா?" என்று கேள்வியெழுப்பினார்.

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பணம் வைக்கப்பட்டிருந்த கவர்களில் வார்டு எண், அந்த வார்டில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்பது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்ததாகவும் இந்த வார்டுகள் அனைத்தும் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டவை என்றும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த அலுவலகத்தில் இருந்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, 2 கோடி ரூபாய் கொண்டுவரப்பட்டு, ஒரு பகுதிப் பணம் விநியோகிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள பணம் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடைபெற்றதும் அந்த இடத்திற்கு தேனி மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் நேரில் வந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர்.

அங்கிருந்த நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அந்த அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் மகாராஜனும் அ.தி.மு.க. சார்பில் லோகிராஜனும் அமமுக சார்பில் வழக்கறிஞர் ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர். மொத்தமாக இந்தத் தொகுதியில் 16 பேர் களத்தில் உள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :