தூத்துக்குடியில் என்ன நடக்கிறது - வேட்பாளர்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
செவ்வாய்க்கிழமையன்று தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியநிலையில், தேர்தலை நிறுத்த சதி நடைபெறுவதாக கனிமொழி குற்றம்சாட்டினார்.
மேலும், பாஜகவின் மாநிலத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்தரராஜன் மீதும் கனிமொழி குற்றம்சாட்டினார்.
"தமிழிசை செளந்தரராஜன் வீட்டில் கோடி கோடியாக பணம் உள்ளது. அங்கு சென்று சோதனை நடத்த முடியுமா?" என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
"நான் எதிர்க்கட்சி வேட்பாளராக இருப்பதாலேயே என்னை சோதனையிட வந்துள்ளனர் என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு இங்கு எதுவுமே கிடைக்கவில்லை என்பதை அவர்களே ஒப்புக் கொண்டபின் திரும்பி சென்றுவிட்டனர்" என்று ஊடகங்களிடம் தெரிவித்தார் கனிமொழி.
"வேலூரில் தேர்தலை நியாயமற்ற முறையில் நிறுத்திவிட்டது போல் இதைக் காரணமாக வைத்துக் கொண்டு, தோல்வி பயத்தால் இங்கும் தேர்தலை நிறுத்தலாம் என்ற நப்பாசையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
கனிமொழி வீட்டில் சோதனை செய்யப்பட்டது குறித்து தமிழிசை செளந்தரராஜன் ஊடகங்களிடம் பேசியுள்ளார்.
''தகவல் வந்த அடிப்படையில் கனிமொழி வீட்டில் சோதனை நடத்தியிருப்பார்கள். என் வீட்டில் கோடிகோடியாக பணம் இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். ஆதாரத்துடன் ஸ்டாலின் பேச வேண்டும். ஸ்டாலினின் முதிர்ச்சியின்மையை இது காட்டுகிறது''
பட மூலாதாரம், FACEBOOK
''வேலூரில் தேர்தல் ரத்தானது, மற்றும் இவர்கள் பணம் அளித்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் உள்ளது. துரைமுருகன் நண்பர் வீட்டில் கிடைத்த கோடி கணக்கான பணத்திற்கு என்ன பதில் கூறுகின்றனர்? '' என்று அவர் வினவினார்.
''தூத்துக்குடியில் தேர்தல் ரத்தாக வேண்டும் என்று கனிமொழி வேண்டுமானால் விருப்பப்படலாம். ஏனென்றால் அவர்களுக்குத்தான் தேர்தல் தோல்வி பயம் உள்ளது'' என்று தமிழிசை செய்தி ஊடகங்களிடம் கூறியுள்ளார்.
தூத்துக்குடி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளரான ராஜசேகர் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''தூத்துக்குடியில் தேர்தல் முறைகேடு நடக்கத்தான் செய்கிறது. நாடாளுமன்ற தொகுதியில் பாஜக, திமுக ஆகிய இரு கட்சியினரும் வாக்களிக்க பணம் தருகிறார்கள்'' என்று கூறினார்.
''இங்கு திமுக தரப்பு ஒரு வாக்குக்கு சில இடங்களில் 300 ரூபாயும், சில இடங்களில் 500 ரூபாயும் தருவதாக கூறுகிறார்கள். பாஜகவும் ஒரு வாக்குக்கு 500 ரூபாய் தருவதாக கூறப்படுகிறது'' என்று குற்றம்சாட்டினார்.
''தூத்துக்குடியில் போட்டியிடும் பிரதான கட்சிகளாக கருதப்படும் திமுக, பாஜக ஆகியவை பிரசாரத்தின் ஆரம்பம் முதலே ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதிலேயே நேரம் செலவிட்டனர்'' என்றார்.
''நீ திருடன், நீ திருடன் என்று பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் குற்றம்சாட்டுகின்றனர். மக்களுக்கு என்ன செய்தோம், செய்ய போகிறோம் என்பதை கூறுவதைவிட இதில்தான் அவர்கள் ஆர்வம் காட்டினர்'' என்று ராஜசேகர் கூறினார்.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பற்றி கூறுகையில் ''முறைகேடுகளை தடுக்கும் விஷயத்தில் தேர்தல் ஆணையமும் சரியாக செயல்படவில்லை. கனிமொழி வீட்டில் எப்படி பணம் கிடைக்கும்? இந்த சோதனையை நான் ஒரு விளம்பரமாகவே கருதுகிறேன். இரு கட்சிகளும் விளம்பரம் தேடவே முயற்சிக்கின்றன'' என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ''எனக்கும், திமுக வேட்பாளர் கனிமொழிக்கும்தான் இங்கு போட்டியே. நான்காவது இடத்தில்தான் பாஜக உள்ளது'' என்றார்.
''தேர்தல் ரத்தாகும் என்று நான் நினைக்கவில்லை. அவ்வாறு ரத்து செய்வது தவறு'' என்றும் கூறினார்.
இதேபோல் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான பொன் குமரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''சில கட்சிகள் தங்களுக்கு வாக்களிக்க வேண்டி பணம் தருவதாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன. ஆனால் நான் இதுபற்றி கவலைப்படாமல் எனது தேர்தல் பணிகளை பார்த்து கொண்டிருக்கிறன்'' என்று கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
''பெரிய கட்சிகள் தாராளமாக செலவு செய்து தேர்தலை சந்திக்கின்றனர். ஆனால், மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்த நாங்கள் மக்களின் பிரச்சனை புரிந்து அவர்களை அணுக வேண்டும் என்பதேயே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளோம்'' என்றார்.
தூத்துக்குடியில் தேர்தல் ரத்தாக வாய்யப்புள்ளதா என்று கேட்டதற்கு, ''அது பற்றி எனக்கு தெரியவில்லை. நாங்கள் என்ன செய்வோம் என்று கூறி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டோம். அதனால் விளைவுகள் பற்றி பெரிதும் கவலையில்லை'' என்றார் பொன் குமரன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்