தேர்தலில் வாக்களிப்பது எப்படி?

வாக்கு பதிவு செய்த பெண்கள் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கோடிக் கணக்கானோர் தங்களின் வாக்குகளை பதிவு செய்ய தயாராகி வருகின்றனர்.

அவ்வாறு தயாராகி வருவோரில் நீங்களும் இருந்தால், நீங்கள் சில தகவல்களை அறிய வேண்டும்.

முதலில் அறிய வேண்டியவை...

உங்களுக்கு எத்தனை வயது? குறைந்தது 18 வயதானவராக நீங்கள் இருக்க வேண்டும். வாக்களிப்பவராக நீங்கள் உங்களை பதிவு செய்திருந்தால் நீங்கள் வாக்களிக்கும் நிலையத்திற்கு செல்லலாம்.

வாக்குச் சாவடியை சென்றடைந்தவுடன், சிறிய குழுக்களாக நீங்கள் உள்ளே அனுப்பப்படுவீர்கள்.

உங்களுடைய முறை வருகிறபோது, உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போட், பேன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் அல்லது வங்கிக் கணக்கு புத்தகம் ஆகியவற்றை பயன்படுத்தி வாக்குப்பதிவு அலுவலர் ஒருவர் உங்களின் அடையாளத்தை சரிபார்ப்பார்.

இரண்டாவது அலுவலர் அழிந்துவிடாத மை கொண்டு உங்கள் விரலில் அடையாளம் வைப்பார்.

இதற்கு பிறகு, வாக்காளர் பதிவேட்டில், நீங்கள் கையெழுத்திட வேண்டும். இரண்டாவது வாக்குப்பதிவு அதிகாரி உங்களுக்கு கையெழுத்திடப்பட்ட வாக்காளர் சீட்டை வழங்குவார்.

மூன்றாவது அலுவலர் உங்கள் வாக்காளர் சீட்டை பெற்றுக்கொண்டு, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் கட்டுப்பாட்டு பொத்தானை அழுத்துவார்.

இப்போது உங்கள் வாக்கைப் பதிவு செய்ய நீங்கள் தயாராகி விட்டீர்கள்.

பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு நீங்கள் செல்வீர்கள்.

படத்தின் காப்புரிமை AFP

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் வாக்களிக்கும் அலகு என்றால் என்ன?

தேர்தலில் போட்டியிடும் அந்தந்த தொகுதி வேட்பாளர்களின் பெயர்களும், அந்த பெயர்களுக்கு அருகில் அவர்களின் சின்னங்களும் வரிசையாக இந்த எந்திரத்தில் இருக்கும்.

வேட்பாளர்களின் பெயர் அந்த தொகுதியின் பெரும்பான்மையினர் பேசுகின்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கும்.

எழுத்தறிவில்லாத வேட்பாளருக்கு உதவும் வகையில் வேட்பாளர் பெயருக்குப் பக்கத்தில் அவரது அல்லது அவரது கட்சியின் சின்னம் இடம் பெற்றிருக்கும்.

நீங்கள் வாக்குப் பதிவு செய்யத் தயாராக இருக்கும்போது, நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அடுத்ததாக இருக்கும் நீல நிற பொத்தானை ஒரு முறை அழுத்தவும்.

இதைச் செய்தவுடன் வாக்கு பதிவாகிவிட்டது என்று பொருளாகாது.

பீப் என்ற சத்தம் கேட்டு, அந்த எந்திரத்தின் விளக்கு அணைந்தால்தான் நீங்கள் வாக்களித்து விட்டீர்கள் என்று பொருள்.

இப்போது நீங்கள் வாக்களித்துவிட்டீர்கள்.

அந்த இவிஎம் எந்திரத்திலுள்ள வாக்குப் பதிவை முடிப்பதற்கான பொத்தானை அலுவலர்கள் அழுத்தினால்தான், மேலதிக வாக்குகள் பதிவாவது நிறுத்தப்படும்.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டைத் தவிர்க்க, இது முத்திரையிட்டு மூடப்பட்டிருக்கும். தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பான பட்டையால் சுற்றப்பட்டு, வரிசை எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்.

படத்தின் காப்புரிமை Reuters

வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போதுதான் இது திறக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை நாளில், எண்ணிக்கை தொடங்கும் முன்னால், இவிஎம் எந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணிக்கை நடத்தும் ஊழியர்கள் மற்றும் முகர்வகளால் தனித்தனியாக ஆய்வு செய்யப்படும்.

இதனை தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வை செய்வார்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை அந்த அலுவலர் திருப்தியடைந்தால், முடிவுகளைக் காட்டுவதற்கான பொத்தானை அவர் அழுத்துவார்.

ஒவ்வொரு வேட்பாளருக்கும் எதிராக கட்டுப்பாட்டு அலகில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கையை இந்த அலுவலர் ஆய்வு செய்வார்.

திருப்பதியடைந்தால், அவர் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டு, தேர்தல் ஆணையத்தோடு பகிர்ந்து கொள்வார்.

இந்த இறுதி முடிவு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.

வாழ்த்துகள்! உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக செயல்முறையில் நீங்கள் பங்கேற்றிருக்கிறீர்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :