தமிழ்நாடு தேர்தலில் இரவு 9 மணி வரை 70.90% வாக்குப்பதிவு

தமிழ்நாடு தேர்தல்

பட மூலாதாரம், PIB INDIA

(தமிழகத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த செய்திகளைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்துகொள்ளுங்கள்.)

தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இரவு 9 மணிக்கு கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில், தமிழகத்தில் 70.90% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக நாமக்கல் தொகுதியில் 79.75% வாக்குகளும், குறைந்தபட்சமாக தென் சென்னை தொகுதியில் 57.43% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

மதுரை தொகுதியில் 8 மணி வரை வாக்குப்பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளதாலும், ஆறு மணிக்கு முன்பே வாக்குச்சாவடிக்கு வந்தவர்கள் பிற தொகுதிகளின் சில வாக்குச்சாவடிகளில் தொடர்ந்து வாக்களித்து வருவதாலும் பதிவான வாக்குகளின் விகிதம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குறிப்பு,

மதுரை வாக்குச்சாவடி ஒன்றில்...

இரவு 9 மணி மணி வரை 62.01% வாக்குகள் மதுரையில் பதிவாகியுள்ளன.

மதுரை பழங்கானத்தம், அவனியாபுரம் பகுதிகளில் சில வாக்குச் சாவடிகளைப் பார்வையிட்ட பிபிசி தமிழ் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன், 8 மணி வரை வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அங்கெல்லாம் மாலை 6 மணிக்குள்ளேயே வாக்குப் பதிவுகள் முடிந்துவிட்டதாகத் தெரிவித்தார். சைவ, வைணவ வழிபாட்டு மரபுகளைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு நேரத்தில் திருவிழா கொண்டாடுவதால் இங்கு மாலைக்கு மேல் வாக்காளர்கள் வரவில்லை என்று உள்ளூர் மக்கள் கூறியதாக சொல்கிறார் பிரமிளா.

இடைத்தேர்தல் நடந்த 18 சட்டமன்றத் தொகுதிகளில் இரவு 9 மணி வரை 71.62% வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக அரூர் தொகுதியில் 86.96% வாக்குகளும், குறைந்தபட்சமாக சாத்தூர் தொகுதியில் 60.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.

படக்குறிப்பு,

இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம்

புதுச்சேரியில் மாலை 6 மணி வரை 81.02% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

6.00 PM: வேலூர் மாவட்டத்தில், அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கீழ் விஷாரம் ராசாத்துபுரம் வாக்குச்சாவடியில் பாமக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் அரங்க வேலு மற்றும் ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் ஆகியோர் நுழைய முயன்றதாகவும், அங்கிருந்த சி.ஆர்.பிஎஃப். வீரர் அவர்களை எச்சரித்த பிறகும் அவர்கள் உள்ளே நுழைய முயன்றதால், அந்த சி.ஆர்.பி.எஃப். வீரர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5:40 PM பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், வாக்குச்சாவடிக்கு வெளியில்தான் வெவ்வேறு கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் நடந்தது என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்தார்.

5:15 PM ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஐந்து வெவ்வேறு வாக்குச்சாவடிகளில் மோதல் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

5:00 PM திருநெல்வேலி மக்களைவைத் தொகுதிக்கு உள்பட்ட பணகுடி எனும் இடத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

4:20 PM சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்கும் ஆம்பூரில் அதிமுக மற்றும் அமமுக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், அதைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைத் தேர்தல் நடக்கும் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் கல்லூர் எனும் இடத்தில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களிடையே மோதல் என்று ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆம்பூர், குடியாத்தம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளும் மக்களவைத் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வேலூர் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளன.

தேர்தல் வரலாறு சிறப்புக் கட்டுரைத் தொடர்:

4:10 PM தமிழகத்தில் அதிகளவில் வன்முறைச் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் வாக்குப்பதிவு இதுவரை அமைதியாகவே நடந்து வருவதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

3:40 PM மதியம் 3 மணி வரை கோவை மற்றும் பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் 48.99 % மற்றும் 53.83% வாக்குகள் பதிவாகியுள்ளன. ஈரோட்டில் 54%, தூத்துக்குடியில் 51.58% வாக்குகள் பதிவாகியுள்ளன.

3:25 PM அதிமுக கூட்டணியினர் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டப் போடத் திட்டமிட்டிருப்பதாகவும், சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிக்க வேண்டும் எனவும் திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடமும், மாநில காவல் துறை தலைவருக்கும் மனு அளித்துள்ளனர்.

பட மூலாதாரம், FACEBOOK/MK STALIN

3:10 PM எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்களை குறிவைத்து நடத்தப்படும் வருமான வரி சோதனைகள் ஆளும் தரப்புக்கு பலன் தராது என்று தூத்துக்குடியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பார்வையிட்டுவரும் திமுக வேட்பாளர் கனிமொழி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தேர்தல் பணியாற்றிவரும் தங்கள் தொண்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

3:00 PM கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தூத்தூர் கடற்கரையை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை.

வாக்களிக்கு அனுமதிக்க வேண்டுமென அவர்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2:40 PM தமிழகத்தின் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்குபதிவு இயந்திரங்கள் பழுதாகியுள்ளதால் அவற்றை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

2:00 PM1951 முதல் இந்தியாவில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் வாக்களித்துள்ள, கோவையைச் சேர்ந்த 103 வயதான மாரண்ணன் கருப்பராயன்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

படக்குறிப்பு,

மாரண்ணன்

1:40 PM தமிழகத்தில் ஒரு மணி நிலவரப்படி 39.49 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் சத்யபரதா சாஹூ தெரிவித்தார்.

1:30 PM ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

தேர்தலில் வாக்களித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தாம் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகவும், பொதுமக்களை மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக வாக்களிக்க கூறியதாகவும் அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பாபு முருகவேல், தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மக்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதால், முக ஸ்டாலின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், அவர் மீது மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1:20 PM தேர்தலை புறக்கணித்த மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்ட வளாகம், கள்வழி ஏந்தல், கடம்பூர் ஆகிய வாக்குசாவடியில் பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து இதுவரையும் ( 11.30 மணி) வாக்காளர்கள் யாரும் வாக்களிக்கவில்லை.

12:55 PM கோவை தொகுதி  போத்தனூர் சித்தன்னபுரம் வாக்குச்சாவடியில், ராஜேஷ் என்பவர் தனது வாக்கினை வேறு ஒருவர் போட்டு விட்டார் என்று தேர்தல் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 

பிபிசி தமிழிடம் பேசிய ராஜேஷ், ''நான் 11 மணிக்கு வாக்களிக்க வந்து பார்க்கும் பொழுது, நீங்கள் ஏற்கனேவே வாக்களித்து விட்டீர்கள் என்று கூறினர், நான் இப்பொழுது தான் வந்தேன் என்று தேர்தல் அதிகாரிகளிடம் பேசினேன், கையில் மை உள்ளதா என்று பரிசோதித்து விட்டு சிறிது நேரம் காத்திருக்க சொன்னார்கள்'' என்று கூறினார்.

12:30 PM "எனது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வந்தேன். முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு வாழ்த்துகள். அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி நிறைய மாற்று கருத்து வருகிறது. அது உண்மையாக இருந்தால் மாற்றப்பட வேண்டும்" - வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி.

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்களில் மொத்தம் 95 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.

11.50 AM ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் நடிகை திரிஷா

11.30 AM தமிழகத்தில் காலை 11 மணி வரை 30.62 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் 11 மணி வரை 30.62 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 66,167 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம், FB/ CEO TAMILNADU

படக்குறிப்பு,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாஹூ

பழுதாகி இருந்த 305 வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றியுள்ளதாகவும், அதே போல 525 விவிபாட்களை மாற்றியுள்ளதாகவும் சத்யப்ரதா சாஹூ குறிப்பிட்டார்.

தேர்தலுக்காக சரியாக பேருந்து வசதி செய்து தரப்படவில்லை என்பது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தொடர்ச்சியாக மூன்று நான்கு நாட்கள் விடுமுறை வந்ததால் மக்கள் அதிகளவில் ஊருக்கு செல்லும் சூழல் ஏற்பட்டது என்றும், தேர்தல் ஆணையத்தால் பேருந்துகளை ஏற்பாடு செய்ய முடியாது என்றும் தெரிவித்தார்.

11.00 AMதூத்துக்குடியில் வாக்குப்பதிவு

தூத்துக்குடியில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய கார்த்திகேயன் என்ற இளைஞர், ''தூத்துக்குடியில் எவ்வளவோ  போராட்டங்கள் நடந்துள்ளன. மக்கள் பலரும் இதில் பங்கேற்றனர். அதேபோல் தற்போது தேர்தலிலும் மக்கள் பங்கேற்று தங்கள் கடமையை ஆற்ற வேண்டும்'' என்று கூறினார். 

10.50 AM புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தனது வாக்கினை பதிவு செய்தார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

10.40 AM 63 வயதான முருகேசன், ஈரோடு மாவட்டம் சிவகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்திவிட்டு திரும்பும் போது மயங்கி விழுந்தார், அவசர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

10.35 AM தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது வாக்கினை பதிவு செய்தார்.

படக்குறிப்பு,

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

10.30 AM அம்மா மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் டிடிவி தினகரன், பெசன்ட் நகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

படக்குறிப்பு,

டிடிவி தினகரன்

10.25 AM பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில், அங்குள்ள பாத்திமா நகர் வாக்குச்சாவடி அமைந்துள்ள 265 வாக்குச்சாவடியில் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது இரண்டு மணி நேரமாக வாக்களிக்க முடியாமல் வாக்காளர்கள் தடுமாற்றம்.

10.00AM சென்னையில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு, பல இடங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

9.50 AM கோவையில் இருந்து ஊட்டிக்கு வாக்களிக்க செல்லும் மக்கள் பேருந்து இல்லாமல் நீண்ட வரிசையில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நிற்கின்றனர்.

9: 35 AM தமிழகத்தில் 9 மணி வரை 13.48 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

9:25 AM சென்னை தேனாம்பேட்டையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். வாக்குப்பதிவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், "ஒவ்வொருவரும் தவறாமல் தங்கள் வாக்கினை பதிவு செய்ய வேண்டும். இதுவரை நடந்திருக்கக் கூடிய தேர்தல்களை விட இது முக்கியமான தேர்தலாக அமையப்போகிறது" என்று தெரிவித்தார்.

9:20 AM பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திண்டிவனம் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மரகதாம்பிகை நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

9: 15 AM திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

9:10 AM வெயில், கூட்ட நெரிசல் பயம் காரணமாக பெரும்பாலான சினிமா பிரபலங்கள் காலை 9 மணிக்குள் ஓட்டு போட்டனர்

9:07 AM மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா இன்று மத்திய சென்னை தொகுதியில் அரும்பாக்கத்தில் உள்ள குட்ஹோம் மெட்ரிகுலேசன் பள்ளிக்கூட வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

8:55 AM "கருணாநிதி இடத்தை மு.க ஸ்டாலின் நிரப்புவார்" - கனிமொழி

"எதிர்கட்சி வேட்பாளர்களை மட்டுமே குறிவைத்து சோதனைகள் நடைபெறுகின்றன. பாஜகதான் அதிமுகவை ஆள்கிறது. தமிழகத்தில் கருணாநிதியின் இடத்தை மு.க ஸ்டாலின் நிரப்புவார்" என்று திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்தார்.

பட மூலாதாரம், ANI

8:48 AM ஆழ்வார்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஒரு மணி நேரம் காத்திருப்புக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஷ்ருதிஹாசன் இருவரும் வாக்களித்தனர்.

தேர்தல் 2019 - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 10 முக்கிய விஷயங்கள்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

நடிகர் கமல்ஹாசன்

8:30 AM சேலம் குகை மேல்நிலை பள்ளியில் சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் வாக்களித்தார்.

8:15 AM வாக்களித்த பிரபலங்கள்

படக்குறிப்பு,

சூர்யா மற்றும் ஜோதிகா

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா

8:05 AM தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்

சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வரிசையில் நின்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.

8:00 AM இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் வாக்களித்தார்

7:58 AM ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே மேதலோடையில் உள்ள எண் 160 வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்தும் இயந்திரம் தொடக்கத்திலேயே பழுது வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருப்பு மாற்று இயந்திரத்திற்காக காத்திருப்பு.

7:55 AM ஆழ்வார்பேட்டையில் கமல் வாக்களிப்பதில் தாமதம் - மின்வெட்டு காரணமா?

பட மூலாதாரம், TWITTER

மகள் ஸ்ருதி ஹாசனுடன் ஆழ்வார்பேட்டை வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் கமல் ஹாசன். ஆனால், அங்கு மின் வெட்டு ஏற்பட்டதால் அவர் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு வாக்களிக்க காத்து கொண்டிருக்கிறார் கமல்.

7:50 AMவாக்களிக்க காத்திருக்கும் நடிகர் விஜய்

7:45 AM: "இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. அதிக இளைஞர்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்வீட் செய்துள்ளார்.

7:30AM: ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்த நடிகர் ரஜினிகாந்த்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு,

வாக்களிக்கும் நடிகர் ரஜினி

7:15AM: சூளையில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்

சென்னை சூளையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்பதால் மக்கள் அங்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

7:00AM: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது.

வேலூர் தொகுதியை தவிர 39 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இதேபோல் இன்று தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

பேருந்துகள் இல்லை என மக்கள் போராட்டம் - கோயம்பேட்டில் தடியடி

இந்நிலையில், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என்று நேற்று இரவு மக்கள் குற்றஞ்சாட்டினர். 

தேர்தலில் வாக்களிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல நேற்று இரவு 7 மணி முதலே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.

ஆனால், போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை மற்றும் தனியார் பேருந்துகளின் கட்டணம் அதிகளவில் இருப்பதாகக்கூறி  திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பட மூலாதாரம், FACEBOOK

அவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் பொதுமக்கள் செல்ல மறுத்ததால் போலீஸார் தடியடி நடத்தினர்.

போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அங்கேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

முன்னதாக தேர்தலுக்காக அதிகளவில் மக்கள் வெளியூர் செல்வார்கள் என்பதால், அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு

தமிழ்நாட்டின் வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று நடைபெறுவதாக இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று வேலூர் மக்களவைத் தொகுதியின் தேர்தலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்துள்ளதாக தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் ஷெஃபாலி ஷரன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ஏப்ரல் 18ம் தேதி திரிபுரா கிழக்கு மக்களவைத் தோகுதியில் நடைபெறுவதாக இருந்த தேர்தல், ஏப்ரல் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆந்திர பிரதேசம் (மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்கள்), அருணாசலப் பிரதேசம், அஸ்ஸாம், பிகார், சத்தீஸ்கர், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த 11-ஆம் தேதி முதல்கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட தேர்தலில், தமிழ் நாடு (38 தொகுதிகள்), புதுச்சேரி (1 தொகுதி), அஸ்ஸாம் (5 தொகுதிகள்), பிகார் (5 தொகுதிகள்), சத்தீஸ்கார் (3 தொகுதிகள்), ஜம்மு காஷ்மீர் (2 தொகுதிகள்), கர்நாடகா (14 தொகுதிகள்), மகாராஷ்ரா (10 தொகுதிகள்), மணிப்பூர் (1 தொகுதி), ஒடிஸா (5 தொகுதிகள்), உத்தரபிரதேசம் (8 தொகுதிகள்), மேற்கு வங்காளம் (3 தொகுதிகள்) என மொத்தம் 95 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது,

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக), பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக), புதிய நீதி கட்சி, புதிய தமிழகம், ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை இணைந்து இந்த முறை தேர்தலை எதிர்கொள்கிறது.

முதல்முறையாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் பங்கெடுக்கிறது. நாம் தமிழர் கட்சி எல்லா தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை இடைத்தேர்தல்

பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர் ஆகிய 18 தொகுதிகளுக்கு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் நாளிலேயே, அதாவது ஏப்ரல் 18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் அதாவது மே 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது, வருமான வரித்துறை பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியின் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர் கே.சுகுமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை நிறுத்திவைத்தது செல்லும் என்று ஏப்ரல் 17ம் தேதி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

மேலும், புதன்கிழமையன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிமனையில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு கோடியே 48 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனையைத் தடுத்தபோது காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறவிருக்கிறது

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட சோதனைகளில் 135.41 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.

பணம் தவிர, 37.42 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், 37.8 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள்கள், 1022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி ஆகியவை பிடிபட்டுள்ளன. சேலை, குக்கர் போன்ற பரிசுப் பொருட்களும் 8.15 கோடி ரூபாய் அளவுக்கு கைப்பற்றப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இதுவரை 4525 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

பல விதங்களிலும் தமிழ்நாட்டிற்கு திருப்பு முனையான, இந்தத் தேர்தல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்தலாம் என்பதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உற்றுநோக்கப்படுகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :