பிரதமர் நரேந்திர மோதி ஹெலிகாப்டரில் சோதனை செய்த தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்

'பிரதமர் ஹெலிகாப்டரில் சோதனை: தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்'

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

தினமணி: 'பிரதமர் ஹெலிகாப்டரில் சோதனை: தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்'

ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் பிரதமர் நரேந்திர மோதி பயணித்த ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதற்காக, தேர்தல் பார்வையாளர் ஒருவரை தேர்தல் ஆணையம் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்தது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

"சம்பல்பூரில் தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் மோதி கடந்த செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் சென்று இறங்கினார். அப்போது, தேர்தல் பார்வையாளரான முகமது மோசின், அந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை நடத்தினார். இதன் காரணமாக, சுமார் 15 நிமிடங்களுக்கு பிரதமர் மோடி அந்த இடத்திலேயே இருக்க நேரிட்டது.

பிரதமர் மோதி, சிறப்பு பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) பாதுகாப்பில் இருப்பவர். எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு, இதுபோன்ற சோதனைகளில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் ஏற்கெனவே வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தில், சம்பல்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை டிஐஜி அளித்த அறிக்கையின் அடிப்படையில் முகமது மோசின் மீது பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர், கடந்த 1999-ஆம் ஆண்டைய கர்நாடகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆணையில், எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை முகமது மோசின் பின்பற்ற தவறிவிட்டார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பல்பூரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயணித்த ஹெலிகாப்டரிலும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது."என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

முன்னதாக, கர்நாடகத்தில் பிரதமர் மோதி அண்மையில் பயணித்த ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கருப்பு நிற பெட்டி ஒன்று கொண்டுவரப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்து தமிழ்: 'இதுவரை ரூ.490 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல்'

தமிழகத்தில் மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல்16ஆம் தேதி வரை ரூ.490 கோடியே 31 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பிலான ரொக்கம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகள், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்நிலையில், கடந்த 37 நாட்களில் தமிழகம் முழுவதும் நடந்த சோதனைகளில் சிக்கிய பணம், தங்கம் உள்ளிட்டவை தொடர்பாகவும், ஆண்டிப்பட்டி, தூத்துக்குடியில் நடந்த சோதனைகள் குறித்தும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு செய்தி யாளர்களிடம் நேற்று கூறிய தாவது:

தமிழகத்தில் நேற்று (ஏப்.16) ஒரு நாளில் மட்டும், ரூ.3 கோடியே 16 லட்சம் ரொக்கம் பறிமுதலாகி யுள்ளது. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.138 கோடியே 57 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ.294 கோடியே 38 லட்சம் மதிப்பிலான 1,022 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.43 லட்சத்து 54 ஆயிரம் மதிப்புள்ள மதுபானம், ரூ.37 லட்சத்து 68 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்கள் சிக்கின. வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.56 கோடியே 55 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக, ஒரு கைபேசி எண்ணில் இருந்து மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து, விசாரணை நடத்த பறக்கும்படையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். அத்துடன், வருமானவரித் துறையினருக்கும் தகவல் அளித்தார். ஆனால், அந்த சோதனையில் ரொக்கம் எதுவும் சிக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

- இவ்வாறாக விவரிக்கிறது அந்நாளிதழ்.

அதேபோல், ஆண்டிப்பட்டியில் ஓர் இடத்தில் அதிகமானவர்கள் கூடியிருப்பதாக தேனி மாவட்ட ஆட்சியருக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில், காவல் துறையினர், பறக்கும்படையினர் அங்கு சென்றனர். வருமானவரித் துறையினரும் அனுப்பப்பட்டனர்.

அங்கு நடந்த சோதனையில் ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கம் மற்றும் தபால் வாக்குப் படிவம் ஆகியவை கைப்பற்றப் பட்டன.

இந்தச் சம்பவம் குறித்த முதல் கட்ட அறிக்கை மாவட்ட ஆட்சி யரிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. தபால் வாக்கு தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இதில் தொடர்புடையவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி: 'திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்கம் பறிமுதல்'

பூந்தமல்லி அருகே வாகன சோதனையில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு கொண்டு சென்ற 1,381 கிலோ தங்க கட்டிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர் என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், தினத்தந்தி

அந்நாளித பின்வருமாறு விவரிக்கிறது:

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பூந்தமல்லியை அடுத்த ஜமீன் கொரட்டூர் பகுதியில் அதிகாரி செல்லபாண்டியன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த 3 வாகனங்களை, நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஒரு வாகனத்தில், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, திருப்பதி தேவஸ்தானத்துக்கு 1,381 கிலோ தங்க கட்டிகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மீதம் உள்ள 2 வாகனங்களையும் திறந்து ஆய்வு செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி அந்த தங்க கட்டிகளை கொண்டு செல்வது தெரிந்தது. அந்த தங்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், தங்க கட்டிகளுடன் அந்த வாகனத்தை பூந்தமல்லியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுகுறித்து விசாரணை செய்தபோது, திருப்பதி தேவஸ்தானம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வைப்பு நிதியில் முதலீடு செய்து இருந்தது. அதன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நேற்று அந்த நிதியை கொண்டு சுவிட்சர்லாந்தில் இருந்து சுமார் 1,381 கிலோ எடைகொண்ட தங்க கட்டிகளை வாங்கி, விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டு, அங்கிருந்து தனியார் நிறுவனம் மூலம் ஆந்திராவில் உள்ள வங்கிக்கு எடுத்து சென்று, பின்னர் திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்க எடுத்து செல்வது தெரியவந்தது.

ஒரு வாகனத்தில் 30 சிறிய பெட்டிகளும், மற்றொரு வாகனத்தில் 26 சிறிய பெட்டிகளிலும் தங்கம் இருப்பது தெரியவந்தது. ஒரு பெட்டியில் உள்ள தங்கத்தின் எடை 25 கிலோ என தெரியவந்தது.

தங்கம் பிடிபட்ட தகவல் அறிந்ததும், அது தங்களுடையதுதான் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அளித்து உள்ள ஆவணங்களை தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அவை முறையாக பரிசோதனை செய்த பிறகு ஒப்படைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிராக்யா சிங் போபாலில் போட்டி

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

கோப்புப்படம்

மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பிராக்யா சிங், பாஜகவில் இணைந்ததை அடுத்து, அவர் போபால் தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக பிராக்யா சிங் போட்டியிடுகிறார்.

இத்தொகுதியில் மே 12 ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

பிராக்யா சிங் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்து 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஜாமின் வாங்கி வெளிவந்த பிராக்யா, புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தாம் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :