தமிழ்நாடு வாக்குப் பதிவு: கழுதையில் சென்ற வாக்கு இயந்திரங்கள் - தேர்தலை புறக்கணித்தார்களா தருமபுரி மலை கிராம மக்கள்?

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்

இந்த மலை கிராமத்தில் தேர்தல் பணியில் கழுதைகள் ஈடுபடுகிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் வேலை செய்கிறார்கள் என்கிறார் சின்னராஜ்.

இது குறித்து தெரிந்து கொள்வதற்கு முன் சின்னராஜின் கதையை தெரிந்து கொள்வோம்.

சின்னராஜ் தருமபுரி மாவட்டம் பாலகோடு தாலுக்காவில் கரகூர் கிராமத்தில் வசிக்கிறார். இந்த கிராமம் கோட்டூர்மலை எனும் மலை கிராமம் அருகே உள்ளது.

இந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லை. மலைப் பாதை வழியாகதான் செல்ல வேண்டும்.

கோட்டூர் மலையில் உள்ள நியாய விலை கடைகளுக்கு அரிசி மற்றும் தேவையான பிற பொருட்களை மலை பாதையில் கழுதைகள் மூலம் எடுத்து செல்லும் தொழில் செய்து வருகிறார் சின்னராஜ்.

கழுதையில் வாக்கு இயந்திரம்

இந்த கழுதைகள் மூலமாகதான் தேர்தல் ஆணையமும் வாக்கு இயந்திரங்களை எடுத்து செல்கிறது. தேர்தலுக்கு முதல்நாள் சின்னராஜ் வாக்கு இயந்திரங்களை கழுதைகள் மூலம் எடுத்து சென்று கோட்டூர் மலையில் உள்ள வாக்கு சாவடியில் வைத்திவிட்டு, பின் மலை பாதை வழியாக இறங்கி வந்து தனது சொந்த கிராமத்தில் வாக்களித்துவிட்டு, பின் மலை பாதை வழியாக கோட்டூர் மலை சென்று அரசு அதிகாரிகளுடன் வாக்கு இயந்திரங்களை எடுத்து வருவார்.

சின்னராஜ், "இந்திராகாந்தி பிரதமராக இருக்கும் போதிலிருந்து நான் வாக்களித்து வருகிறேன். இதுவரை எந்த தேர்தலிலும் நான் வாக்களிக்காமல் இருந்ததில்லை" என்கிறார்.

மலை பாதையில் சென்று வருவது குறித்து கேட்டதற்கு,"சிரமமாகதான் இருக்கும். அதற்காக வாக்களிக்காமல் இருக்க முடியுமா?. நமக்கு இருக்கும் உரிமை அதுதானே" என்கிறார்.

ஆனால், கோட்டூர்மலை மக்கள் இந்தத் தேர்தலை புறக்கணிக்க போவதாக முன்னர் தெரிவித்திருந்தனர்.

சாலை வசதி ஏற்படுத்தி தந்தால்தான் வாக்களிப்போம் என்று அந்த மக்கள் தெரிவித்திருந்தனர்.

பிபிசி தமிழும் அந்த செய்தியை வெளியிட்டு இருந்தது.

பங்கேற்ற மக்கள்

மாவட்ட நிர்வாகம் அந்த மக்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியதை அடுத்து அந்த மக்கள் வாக்களிக்க சம்மதித்தனர்.

பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசிய கோட்டூர்மலையை சேர்ந்த சக்திவேல், "சாலை வசதியை ஏற்படுத்தி தருவதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தது. அவர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்த தேர்தலில் வாக்களித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் கூறியப்படி நடக்க வேண்டும்" என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :