அமித் ஷா: போஸ்டர் ஒட்டியது முதல் பாஜக தலைவர் வரை - கடந்துவந்த பாதை

  • அஜய் உமட்,
  • மூத்த பத்திரிகையாளர், பிபிசிக்காக
அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமித் ஷா

"ஒரு இளம் தொண்டனாக நாரன்பூரா பகுதியில் மூத்த பாஜக தலைவர்களுக்காக சுவரொட்டிகளை ஒட்டிய நினைவுகள் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. ஆண்டுகள் உருண்டோடி, நான் வளர்ந்துவிட்டாலும், என்னுடைய பயணம் தொடங்கிய இடத்தை நான் மறக்கவில்லை"

மார்ச் 30ஆம் தேதியன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு முன்னதாக நடத்திய சாலைப் பேரணியில் பேசியபோது ஆழ்ந்த அர்த்தம் பொருந்திய நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டார்.

குஜராத், காந்திநகர் தொகுதியில் இருந்து போட்டியிடும் அமித் ஷா, 1982இல் ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்) அமைப்பில் தொண்டராக பணிபுரிந்தார்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, அடல் பிஹாரி வாஜ்பேயி மற்றும் பா.ஜ.க மூத்த தலைவர்களுக்கு சுவரொட்டிகளை ஒட்டிய அவர், இன்று தனது கட்சியின் சுவரொட்டிகளில் பிரதான இடம் பெற்றிருக்கிறார்.

ஏபிவிபி-யில் தொடங்கிய பயணம்

அமித் ஷா தனது வாழ்க்கையில் பல மேடு பள்ளங்களை சந்தித்தவர். ஏபிவிபி தொண்டராக தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், இன்று கட்சியின் செயல்பாடுகளுக்கு பொறுப்பாளர் என்ற உயர் நிலையை அடைந்துவிட்டார்.

கட்சி வென்றாலும், தோற்றாலும் அதற்கு அவரே காரணம் என்று சொல்லும் நிலைக்கு இன்று உயர்ந்துவிட்டார் அமித் ஷா. எனவேதான், அமித் ஷாவின் தவறுகளை மக்கள் மறந்துவிடாமல் இருப்பதற்காக அவற்றை திரும்ப திரும்ப நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன எதிர்கட்சிகள்.

பட மூலாதாரம், Getty Images

1964ஆம் ஆண்டு மும்பையில் பனியா (வர்த்தகர்) குடும்பத்தில் பிறந்த அமித் ஷா, 14 வயதிலேயே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்துவிட்டார். அங்கிருந்துதான் அவரது அரசியல் வாழ்க்கைத் தொடங்கியது.

காந்திநகரில் ஒரு சிற்றூரில் இருந்து 'இளம் தன்னார்வ தொண்டர்" என்ற நிலையில் தனது பொதுவாழ்க்கையைத் தொடங்கிய அமித் ஷா, கல்லூரி படிப்புக்காக அகமதாபாத்துக்கு சென்றார். அங்கு அவர் ஏபிவிபி அமைப்பில் உறுப்பினராக இணைந்தார். 1982இல் உயிர் வேதியியல் பிரிவில் (biochemistry) இளங்கலைப் பட்டம் பெற்ற அவர், ஏபிவிபி அமைப்பின் மாணவர் பிரிவின் தலைவரானார்.

பிறகு பாஜகவின் அகமதாபாத் பிரிவின் செயலராக பொறுப்பு வகித்த ஷா, பிறகு அடுத்த கட்டங்களுக்கு உயர்ந்துக் கொண்டே சென்றார்.

1997இல் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் பொருளாளராக பதவி வகித்தார். பிறகு, கட்சியின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அவரது தொடர் வளர்ச்சி, சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு சென்ற சமயத்தில் மட்டுமே மட்டுப்பட்டது.

அதுவே அவரது அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனமாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் கணித்த நிலையில், அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வகையில் அவர் வலுவாக கட்சிக்குள் திரும்பினார்.

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY

ஏமாற்றம்

சொராபுதீன் ஷேக் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ இருவரும் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமித் ஷாவின் பெயர் இடம் பெற்றது அவரது வாழ்க்கையின் கரும்புள்ளி என்றே கூறலாம். 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த என்கவுண்டரில் சொராபுதீனும், அவரது மனைவியும் கொல்லப்பட்டனர். அப்போது அமித் ஷா, குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

மேலும், செராபுதீனின் கூட்டாளி துள்சிராம் பிரஜாபதியும் 2006ஆம் ஆண்டு போலி என்கவுண்டரில் கொல்லப்பட்ட விவகாரத்திலும் அமித் ஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில் இந்த காலகட்டத்தில் அவர் பலவிதமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

'அரசியல் சிம்மாசனத்திற்கான தந்திரங்கள்' செய்யும், அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சித் தொடரான Games of Thrones நிகழ்ச்சியுடன் இணைத்து அமித் ஷாவும், இந்த போலி என்கவுண்டர் வழக்குகளும் பேசப்பட்டதை யாரும் மறக்க முடியாது.

சொராபுதீனின் குடும்பத்தினர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து, 2005-2006 கால கட்டத்தில் நடைபெற்ற விவகாரங்கள் விஸ்வரூபமாக, அவை தொடர்பான விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

போலி என்கவுண்டர்கள் நடைபெற்ற காலகட்டத்தில் குஜராத் மாநில உள்துறை அமைச்சராக பதவியில் இருந்த அமித் ஷா மற்றும் குலாப்சந்த் கட்டாரியாவுக்கும் இந்த போலி என்கவுண்டர்களில் தொடர்பு இருப்பதாக தெரியவந்தது.

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில காவல்துறையின் அனைத்து நிலைகளிலும் உள்ள பலருக்கு இந்த போலில் என்கவுண்டர்களில் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எம்.என் தினேஷ், ராஜ்குமார் பாண்டியன், டி.ஜி வஞ்சாரா மற்றும் அமித் ஷா உட்பட பல இந்த வழக்கில் குற்றவாளிகாள் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

2010, ஜுலை 25ஆம் தேதியன்று கைது செய்யப்பட்ட அமித் ஷாவுக்கு அதே ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதியன்று பிணை விடுதலை கிடைத்தது. குஜராத் மாநிலத்திற்கு செல்லக்கூடாது என்று 2010 அக்டோபரில் அமித் ஷாவுக்கு விதிக்கப்பட்ட தடை, 2012 செப்டம்பர் வரை நீடித்தது. இறுதியில் நீண்ட சட்ட நடைமுறைகளுக்கு பிறகு, 2014 டிசம்பர் 30ஆம் தேதியன்று செராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் இருந்து அமித் ஷாவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது.

மகனால் ஏற்பட்ட பின்னடைவு

2017இல் 'த வயர்' என்ற வலைதளத்தில் வெளியான கட்டுரை ஒன்றில், நரேந்திர மோதி பிரதமராகவும், அமித் ஷா பாஜக தலைவராகவும் பதவியேற்ற பிறகு, அவர்களின் நிறுவனங்களின் வியாபாரம் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.

கம்பெனி பதிவாளர் நிறுவனத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அந்த கட்டுரை எழுதப்பட்டது.

2014-15 ஆம் ஆண்டில் 50 ஆயிரம் ரூபாய் லாபத்தை காட்டிய அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவுக்கு சொந்தமான நிறுவனம், 2015-16ல் 80.5 கோடி ரூபாயாக அதிகரித்தது. இப்படி லாபம் கொழித்த ஜெய் ஷாவின் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு பிறகு 2016இல், தனது வர்த்தக நடவடிக்கைகளை முழுமையாக நிறுத்திவிட்டது.

இந்த அறிக்கை வெளியான பிறகு, த வயர் வலைதள நிருபர் ரோஹிணி சிங் மற்றும் நிறுவனர் சித்தார்த் வரதராஜன் உட்பட ஏழு பேர் மீது அஹமதாபாத் பெருநகர நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடராப்பட்டது. அந்த வழக்கு இன்னும் விசாரணையில் இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா

மோதியை சூப்பர் ஸ்டாராக்கும் அமித் ஷா

அடல் பிஹாரி வாஜ்பேயி, லால் கிருஷ்ண அத்வானி போன்ற மூத்த தலைவர்களுக்கு ஆதரவாக காந்தி நகர் தொகுதியில் முழு உத்வேகத்துடன் பணியாற்றினார் அமித் ஷா என்று அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதேபோல், நரேந்திர மோதியை தேசிய தலைவராக உயர்த்தியதிலும் அமித் ஷாவின் பங்கு முக்கியமானது என்பதை அரசியல் நிபுணர்களும், அவரை நெருக்கமாக அறிந்தவர்களும் கூறுகின்றனர்.

நரேந்திர மோதி மற்றும் அமித் ஷாவைப் பற்றி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார், "மோதியும், ஷாவும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இருவரும் பல தசாப்தங்களாக ஒன்றாக இருக்கின்றனர். ஒன்று போலவே சிந்திக்கின்றனர், செயல்படுகின்றனர். இருவரும் இணைந்து ஒரு கச்சிதமாக இயங்குகின்றனர்".

"அரசியல் மற்றும் வாழ்க்கை தொடர்பான அவர்கள் இருவரின் கண்ணோட்டங்களும் வித்தியாசமானதாக தோன்றலாம், ஆனால் அவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒன்றுபோல சிந்திப்பவர்கள்; ஒருவர், மற்றொருவரின் எண்ணங்களை பூர்த்தி செய்பவர்".

2014 தேர்தல் வெற்றிக்கு "மேன் ஆஃப் த மேட்ச்" என்று அமித் ஷாவுக்கு புகழ் மாலை சூடினார் நரேந்திர மோதி.

திரைப்படத்தை இயக்கும் இயக்குநர், திரைக்கு பின்னிருந்து கதை, வசனம் எழுதி நடிகர்களை நடிக்க வைப்பது போலவே, அமித் ஷா, கட்சியின் பின்னிருந்து அனைத்தையும் இயக்குகிறார் என்று மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். அமித் ஷா பல அரசியல் நட்சத்திரங்களை உருவாக்கினாலும், அவர் சூப்பர் ஸ்டாராக உருவாக்கியது நரேந்திர மோதியை மட்டுமே.

பட மூலாதாரம், Getty Images

திறமைகள்

அரசியல் ரீதியாக பார்க்கும்போது, அமித் ஷா மிகச் சிறந்த நிர்வாகி என்று கூறலாம். அவரது தலைமையில் கட்சி ராணுவ கட்டுக்கோப்புடன் இயங்குவதை பார்க்க முடிகிறது.

நிர்வாகம் தொடர்பாக பாடம் நடத்த ஏற்றவர் அமித் ஷா என்று சொல்லலாம். அடிமட்ட நிலையில் இருந்து அமைப்பை வலுவாக்க வேண்டும் என்று வலியுறுத்துவார் அமித் ஷா. பல தசாப்தங்களாக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக முதலில் குஜராத்திலும், பிறகு 2014 மக்களவைத் தேர்தலிலும் கட்சி வெற்றிவாகை சூடியது.

அமித் ஷாவின் அரசியல் மற்றும் நிர்வாகத் திறன்களால், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலராக 2010ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.

உத்தரப் பிரதேசத்தின் தேர்தல் போக்கையே மாற்றிய அமித் ஷா, கட்சியை மாபெரும் வெற்றிப் பாதையில் வழிநடத்தினார். மாநிலத்தின் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகளில் 73 தொகுதிகளில் பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றி கிடைத்தது.

அவர் பொதுச் செயலராக இருந்த இரண்டாண்டுகளில் கட்சியின் வாக்கு சதவிகிதம் உத்தரப் பிரதேசத்தில் இரண்டரை மடங்கு அதிகரித்தது. 2014 தேர்தல்களின்போது, கட்சியின் தேர்தல் குழு உறுப்பினராக மட்டுமல்ல, மக்கள் தொடர்பாளராகவும் செயல்பட்டு, பெருமளவிலான மக்களை சென்றடையவும், புதிய வாக்களர்களை இணைப்பதிலும் பெரும்பங்காற்றினார்.

பட மூலாதாரம், EUROPEAN PHOTOPRESS AGENCY

அரசியல் சாணக்கியத்துவத்தால், இறுதியில் சாதகமான முடிவுகளை பெற்றுத் தரும் அமித் ஷாவின் செயல்பாடுகள், 2014 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்றால் அது மிகையாகாது. ஆனால், பிரித்தாளும் அரசியலை ஊக்குவிப்பவர் என்ற விமர்சனம் அவர் மீது இருப்பதையும் மறுக்கமுடியாது.

எதிர் கட்சிகளையும், எம்.பிக்களையும் பிரித்தாளும் உத்திகளை திறம்பட செயல்படுத்துவதில் வல்லவர் என்று அமித் ஷா கருதப்படுகிறார். தனது கட்சிக்கு தேவைப்படும் போதெல்லாம் இந்த உத்தியை அவர் கையாள்வார். யாரையும் எப்போதும் அலட்சியப்படுத்தக்கூடாது என்ற சித்தாந்தத்தில் அவருக்கு நம்பிக்கை உண்டு, அதை அவ்வப்போது சொல்வதும் உண்டு என்று அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் வடக்கு, மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் கட்சியின் செல்வாக்கு மற்றும் தேர்தல் வெற்றிக்கு காரணமான அமித் ஷாவை கட்சியினர் அனைவரும் உயர்வாக மதிக்கின்றனர். இருந்தாலும், பாஜக தற்போது தென்னிந்தியா மற்றும் வட கிழக்கு பகுதிகளில் தன்னை நிலை நிறுத்த போராடிக் கொண்டிருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிடுகையில், "தென்னிந்திய மாநிலங்களைப் பொறுத்த வகையில் சத்தமில்லாமல் அமைதியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமித் ஷா.

தென்னிந்தியாவிலும், வடகிழக்கு பிராந்தியங்களிலும் அடிமட்டத்தில் இருந்து கட்சியை வளர்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் ஷா. இந்த இடங்களில் இதுவரை பாஜகவுக்கு எந்த எதிர்காலமும் இல்லை என்றே கருதப்படும் சூழல் நிலவுகிறது. ஆனால், புதிய அரசியல் உத்திகளை பயன்படுத்தி, அங்கு கட்சி போட்டியிடும் நிலையை உருவாக்கிவிட்டார். அவருடைய கடின உழைப்பின் விளைவை தேர்தல் முடிவுகள் காட்டும் என்பது உறுதி".

கட்சியின் தலைவராகவும், தொண்டராகவும் மட்டுமல்ல, சோசியல் எஞ்சினியரிங் என்ற பெயரில் சமுதாய நிலையில் கட்சியை வளர்த்தெடுத்து, எதிர்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கும் அமித் ஷாவைப் பற்றி பாஜக மூத்த தலைவர் ஒருவர் இவ்வாறு கணிக்கிறார், "சாதிய அரசியலின் நுட்பங்களை அமித் ஷாவைப் போன்று வேறு யாரும் சரியாக அறிந்திருக்க முடியுமா என்று உறுதியாக கூறமுடியாது.

சாதிக்கு உள்ளேயும், சாதிகளுக்கு இடையிலும் எவ்வாறு உத்திரீதியிலான திட்டங்களை வகுப்பது என்பதை முழுவதுமாக அறிந்தவர் ஷா. காங்கிரஸின் அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் சமாளிக்க அமித் ஷா ஒருவரே போதும்".

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அமித் ஷா

எதிர்கால பாதை என்ன?

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு நேர்மறையான முடிவுகள் கிடைத்தால், அதற்கான பாராட்டு அமித் ஷாவுக்கு மட்டுமே உரித்தாகாது. ஆனால், தேர்தலில் எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டால், அதன் முழு பொறுப்பும் அமித் ஷாவின் மீதே சுமத்தப்படும்.

கட்சியின் வெற்றியால் தனக்கு பூங்கொத்து கிடைக்காவிட்டாலும், தோல்வியால் தனது அதிகாரத்திற்கு மலர் வளையம் கிடைக்கும் என்பதையும் அமித் ஷா உணர்ந்தே இருப்பார். ஏனெனில் பாஜக இல்லாவிட்டால், பொதுவாழ்வில் தனக்கு இடமில்லை என்பதை அவர் பணிவுடன் பல முறை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

நாரன்பூராவில் சாலைப் பேரணியில் பெருமளவில் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களிடையே பேசிய அமித் ஷா, "பாஜகவை என்னுடைய வாழ்க்கையில் இருந்து கழித்துவிட்டால், நான் பூஜ்ஜியமாகி விடுவேன். நான் இதுவரை என் வாழ்க்கையில் கற்றுக் கொண்டது, நாட்டிற்கு கொடுத்தது அனைத்துமே கட்சி எனக்கு கொடுத்தே, கட்சி இல்லாவிட்டால் அமித் ஷா ஒன்றுமே இல்லை" என்று பணிவுடன் குறிப்பிட்டார்.

அமித் ஷா கடந்து வந்த பாதை

1964: அக்டோபர் 22: மும்பையில் பிறந்தார்

1978: ஆர்.எஸ்.எஸ் இளைஞர் அணியில் இணைந்தார்

1982: ஏ.பி.வி.பி அமைப்பின் குஜராத் மாநில துணைச் செயலாளர்

1987: பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணியில் இணைந்தார்

1989: பாஜக அகமதாபாத் நகரசபை செயலாளர்

1995: குஜராத் மாநில உர மற்றும் ரசாயன நிறுவனத் தலைவர்

1997: பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் தேசிய பொருளாளர்

1998: பா.ஜ.க குஜராத் மாநில செயலாளர்

1999: குஜராத் மாநில பாஜக துணை தலைவர்

2000: அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர்

2002-2010: குஜராத் மாநில அமைச்சர்

2006: குஜராத் சதுரங்க விளையாட்டு சங்கத் தலைவர்

2009: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அகமதாபாத் கிளைத் தலைவர் மற்றும் குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவர்

2010: செராபுதீன் என்கவுண்டர் வழக்கில் கைது

2013: பாஜக தேசிய பொதுச் செயலாளர்

2014: குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவர்

2014: பாஜக தேசிய தலைவர்

2016: சோம்நாத் ஆலய அறக்கட்டளை உறுப்பினர்

2016: பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தேர்வு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :