மக்களவைத் தேர்தல் 2019: இந்தியாவில் பெண்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்கான முதல்படி

இந்தியாவில் பெண்களை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதற்கான முதல்படி

இந்தியாவில் 900 மில்லியன் வாக்காளர்களில் பாதி பேர் பெண்கள். ஆனால் நாட்டில் சட்டங்களை உருவாக்கும் அமைப்புகளில் அவர்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. ஓர் அரசியல் கட்சி 41 சதவீத பெண் வேட்பாளர்களை நிறுத்தியதன் மூலம் இதில் சமத்துவ நிலையை உருவாக்க முயற்சித்துள்ளது. அவர்களின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை அறிவதற்காக பி.பி.சி.யின் கீதா பாண்டே மேற்குவங்க மாநிலத்தில் பயணம் மேற்கொண்டார்.

சூரிய வெளிச்சம் நிறைந்த ஒரு நாள் காலையில், பிரகாசமான மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திறந்த ஜீப் ஒன்றில், புழுதியான சாலைகளில் ஒரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்துக்குச் செல்லும் மகுவா மொய்ட்ராவை வண்ண வண்ண சேலைகள் அணிந்த பெண்களும் மற்றும் ஆண்களும் வரவேற்கின்றனர்.

அவர் மீது அவர்கள் சாமந்திப் பூக்களை தூவுகின்றனர். மாலைகள் அணிவிக்கின்றனர். அவரை நெருங்கி கை குலுக்குகின்றனர், கைகளைப் பிடித்து முத்தமிடுகின்றனர். அவர்களைப் பார்த்து வேட்பாளர் கையசைத்து, கரங்களைக் கூப்பி ``எனக்கு ஆசி வழங்குங்கள்'' என்று கேட்டுக் கொள்கிறார்.

இளம் பெண்களும், இளைஞர்களும் தங்களுடைய ஸ்மார்ட் போன்களில் புகைப்படங்களும், செல்பிக்களும் எடுத்துக் கொள்கின்றனர். வழியெங்கும் அவருக்கு இளநீர் மற்றும் இனிப்புகள் தருகிறார்கள்.

மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) சார்பில் பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடும் மொய்ட்ரா, தன்னுடைய கிருஷ்ணா நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்.

ஒரு கிராமத்தில் முதியவர் ஒருவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் நேரில் வந்து வாழ்த்த முடியவில்லை என்று கட்சித் தொண்டர்கள் அவரிடம் கூறுகின்றனர். எனவே அந்த முதியவரின் வீட்டுக்கே அவர் நடந்து செல்கிறார்.

டஜன் கணக்கான மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் அவருடைய ஜீப்பை பின் தொடர்ந்து செல்கின்றனர். ``திரிணாமூல் காங்கிரஸ் நீடூழி வாழ்க, மமதா பானர்ஜி நீடூழி வாழ்க'' என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பியபடி செல்கின்றனர்.

ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட சிறிய வேன் ஒன்று இந்த ஊர்வலத்துக்கு முன்னதாகச் செல்கிறது. மொய்ட்ராவுக்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்டுக் கொள்ளும் ஆடியோ அதில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளிலும் அரசியல் தலைவர்கள் பயணம் மேற்கொண்டு, பொதுக் கூட்டங்களில் உரையாற்றி வரும் நிலையில், கோடிக்கணக்கான மக்கள் எதிர்கொண்டிருக்கும் உண்மையான பிரச்சினைகளைப் பற்றி இந்தப் பிரச்சாரத்தில் பேசப் படுகின்றனவா என்பதை அறிந்து கொள்வதற்காக நாட்டின் பல பகுதிகளுக்கு நான் பயணம் மேற்கொண்டிருக்கிறேன்.

நாடாளுமன்றத்துக்கு அதிக எண்ணிக்கையில் பெண்களை அனுப்புவது பற்றி என்ன பேசப்படுகிறது என்பதை அறியவும் முயற்சி மேற்கொண்டிருக்கிறேன். இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 சதவீதம் பேர் மட்டுமே பெண்கள். மாநில சட்டமன்றங்களில் இது 9 சதவீதமாக உள்ளது. 193 நாடுகளில் நடப்பாண்டில் கணக்கெடுப்பு நடத்தியதில், நாடாளுமன்றத்தில் பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதில் இந்தியா 149வது இடத்தில் உள்ளது. இது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளுக்குப் பிந்தைய இடத்தில் உள்ளது.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்ட மசோதா 1996ல் இருந்து நிலுவையில் உள்ளது. எனவே தங்கள் கட்சி சார்பில் 40.5 சதவீத வேட்பாளர்களாக பெண்களை நிறுத்துவது என்று திரிணாமூல் காங்கிரஸ் எடுத்திருக்கும் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 17 இடங்களில் பெண்களை நிறுத்தியுள்ளது திரிணமூல் காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி 1998ல் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய மம்தா பானர்ஜி தைரியமான அரசியல்வாதியாக இருக்கிறார். 2012ல் உலகில் அதிக செல்வாக்குமிக்க 100 தலைவர்களின் பெயர்களில் இவரையும் சேர்த்து டைம் இதழ் பட்டியல் வெளியிட்டது.

அவர் நிறுத்தியிருக்கும் பெண் வேட்பாளர்களில் அரசியல்வாதிகள், முதல் முறையாக போட்டியிடுபவர்கள் என ``ஆர்வம் ஏற்படுத்தும் கலவையாக'' இருக்கிறார்கள் என்று பி.பி.சி. பெங்காலி பிரிவைச் சேர்ந்த சுபஜோதி கோஷ் தெரிவிக்கிறார். நடிகர்கள், டாக்டர்கள், மலைவாழ் இயக்கவாதிகள், சமீபத்தில் கொலை செய்யப்பட்ட அரசியல்வாதியின் 25 வயது மனைவி உள்ளிட்டோர் இந்த வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.

மொய்ட்ரா திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும், 2016ல் இருந்து மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

ஜே.பி. மோர்கன் நிறுவனத்தில் முதலீட்டு ஆலோசகராக பணியாற்றிய அவர், லண்டனில் நல்ல சம்பளம் கிடைத்துக் கொண்டிருந்த வேலையை 2009ல் துறந்துவிட்டு இந்திய அரசியலில் குதித்துவிட்டார்.

அவருடைய முடிவு குடும்பத்தினருக்கு திகைப்பை ஏற்படுத்தியது. ``பைத்தியக்காரத்தனமான'' முடிவு என்று தன்னுடைய பெற்றோர்கள் கூறியதாக, அவர் என்னிடம் தெரிவித்தார். கட்சியின் தொண்டர்கள் சிலருக்கு சந்தேகம் இருந்தது - ``மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்'' - என்று அப்போது கூறினார்கள் - ``அவரால் தாக்கு பிடிக்க முடியாது'' என்று கூறினார்கள்.

ஆனால் அவர் தாக்குபிடித்துள்ளார் - சாதித்துள்ளார். 2016ல் கரிம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அவர் வெற்றி பெற்றார். 1972க்குப் பிறகு இடதுசாரி அல்லாத கட்சி இதுவரை வென்றிருக்காத தொகுதி அது. இப்போது நாடாளுமன்றத்துக்கு அவர் குறி வைத்திருக்கிறார்.

தன்னுடைய பிரச்சாரப் பயணத்தில் உடன் வருவதற்கு எனக்கு அவர் அனுமதி அளித்திருந்தார். எனவே இரண்டு நாட்களாக அவருடன் நான் ``ஒட்டிக் கொண்டு பயணம் செய்கிறேன்.'' ஜீப்பில் அவருக்குப் பின்னால் நின்று கொண்டும், அவருடன் காரில் பயணம் செய்தும், கட்சித் தொண்டர்கள், சகாக்கள், நம்பகமானவர்களுடன் அவருடைய அணுகுமுறைகளை கவனித்தும் வருகிறேன்.

முந்தைய நாள் மாலை ஒரு கல்லூரி கிரிக்கெட் போட்டி நிகழ்ச்சியில் முதன்மை விருந்தினராக அவர் கலந்து கொண்டதையும், பிளசே என்ற இடத்தில் உள்ளூர் சந்தையில் மக்களிடம் பேசியதையும் கவனித்தேன்.

கொல்கத்தாவில் இருந்து நான்கு மணி நேர பயண தூரத்தில் உள்ள பிளசே என்ற இடம் 1757ல் பிரிட்டிஷாரின் கிழக்கிந்திய கம்பெனி படைகளுக்கும், பிரெஞ்சு ஆதரவு பெற்ற உள்ளூர் மன்னருக்கும் இடையில் போர் நடந்த இடமாகும். உரையாற்றும் இடத்துக்குச் சென்ற மொய்ட்ரா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவருடைய பாரதீய ஜனதா கட்சி மீது குறி வைத்துப் பேசுகிறார். காஷ்மீரில் நடந்த கொடூரமான தற்கொலைப் படை தாக்குதல் பற்றியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இந்தியா நடத்திய வான் தாக்குதல் பற்றியும் அவர் பேசுகிறார்.

``பாகிஸ்தானில் அந்த அனைத்து தீவிரவாதிகளையும் கொன்றுவிட்டோம் என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பாகிஸ்தானில் நீங்கள் யாரைக் கொன்றீர்கள் அல்லது எத்தனை பேரை கொன்றீர்கள் என்பது முக்கியம் இல்லை. நம்முடைய வீரர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள் என்பது தான் முக்கியமான விஷயம்'' என்று அவர் பேசுகிறார்.

வேலைவாய்ப்புகள் உருவாக்க அரசு எப்படியெல்லாம் தவறிவிட்டது என்பது பற்றிப் பேசுகிறார். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

``எங்களுடைய வாழ்வாதாரங்களை நீங்கள் அழித்துவிட்டீர்கள். ராம் (இந்துக் கடவுள்) மற்றும் ரஹீம் (முஸ்லிம் துறவி) பற்றி எங்களுக்கு கற்றுத் தருவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். என்னுடைய மதம் என்ன என்று என் நெற்றியில் நான் எழுதிக் கொண்டிருக்கத் தேவையில்லை'' என்று தனது ஆதரவாளர்களின் பலத்த கரவொலிக்கு நடுவே அவர் பேசுகிறார்.

முந்தைய காலங்களில் அரசை மாற்றுவதற்குத் தேர்தல்கள் நடந்தன என்று அவர் கூறுகிறார். ஆனால் இப்போது நடைபெறும் தேர்தல் இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் என்று குறிப்பிடும் அவர், ``இது சாதாரணமான வாக்கு அல்ல'' என்றும் பேசுகிறார்.

பாஜகவைச் சேர்ந்த முன்னாள் இந்திய கால்பந்து வீரர் கல்யாண் சவுபே என்பவர் இவரை எதிர்த்து போட்டியிடுகிறார். கால்பந்து விளையாட்டைக் குறிப்பிட்டுப் பேசும் மொய்ட்ரா, ``நான் கால்பந்தாட்டத்தில் களத்தின் மத்தியில் முன் வரிசையில் விளையாடும் வீரர், முடிந்தால் நான் கோல் அடிப்பதைத் தடுத்துப் பாருங்கள். வெற்றி பெறுவதற்காக நான் இங்கே நிற்கிறேன்'' என்று பேசுகிறார்.

அதிக எண்ணிக்கையில் பெண்களை நிறுத்துவது என்ற மம்தா பானர்ஜியின் அணுகுமுறை ``தொடர்ச்சியாக நடைபெறும் நடவடிக்கையாக'' இருக்கிறது என்று திரிணாமூல் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், இரண்டு முறை எம்.பி.யாக இருந்தவருமான கக்கோலி கோஷ் தஸ்டிடார் கூறுகிறார். ``பெண்களின் நிலையை உயர்த்தாமல் சமூகத்தை நீங்கள் உயர்த்த முடியாது'' என்று அவர் குறிப்பிடுகிறார்.

2014ல் நடந்த கடந்த பொதுத் தேர்தலின் போது, தங்கள் கட்சி சார்பில் 33 சதவீத பெண்கள் நிறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். தற்போதைய நாடாளுமன்றத்தில் தங்கள் கட்சிக்கு உள்ள 34 எம்.பி.க்களில் 12 பேர் பெண்கள் என்று தெரிவிக்கிறார்.

அதிகமான பெண்கள் அதிகாரத்தில் இருந்தால் தான் பாலின சமன்பாடு ஏற்படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்படும் என்று மம்தா பானர்ஜி நம்புகிறார் என்று அவர் குறிப்பிடுகிறார்.

தன்னுடைய பாரசட் தொகுதியில் கும்ரா காஷிபூர் கிராமத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டாக்டர் கோஷ் தஸ்டிடார், முன் வரிசையில் பெண்கள் அமர வைக்கப் பட்டிருந்தனர்.

நாடாளுமன்றத்தில் அதிக பெண்கள் இருப்பதால் பெண்களுக்குப் பலன் கிடைக்குமா என்பது குறித்து அவர்களிடம் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

தங்களுடைய எம்.பி.யாக ஒரு பெண் இருந்தால் அவரை அணுகுவதற்கு எளிதாக இருக்கும் என்று சுப்ரியா பிஸ்வாஸ் என்பவர் கூறினார். ``ஒரு பெண் அல்லாமல் வேறு யாரால் பெண்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியும்'' என்று அவர் கூறினார்.

பொதுக் கூட்டம் நடந்த மைதானத்துக்கு அருகே வசிக்கும் அர்ச்சனா மாலிக், மீனா மவுலி ஆகியோர் தங்கள் கிராமத்தில் மோசமான சாலைகள் உள்ளது பற்றியும், மருத்துவ வசதிகள் மோசமாக இருப்பது பற்றியும் பேசினர். வேட்பாளர் ஆணா பெண்ணா என்பது ``முக்கியமில்லை'' என்று கூறிய அவர்கள், ``எங்களுடைய நன்மைக்காக யார் பாடுபடுவார்கள்'' என்பது தான் முக்கியம் என்று தெரிவித்தனர்.

இருந்தபோதிலும், தண்ணீர் விநியோகம், மின்சாரம், இணைப்பு சாலைகள், சுகாதார வசதிகள் போன்ற விஷயங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிக கவனம் செலுத்துவதால், பெண் உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளுக்கு அதிக பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வருகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்திய அரசியல் ``இன்னும் ஆணாதிக்கம் மிகுந்ததாகவே'' உள்ளது என்றும், அதிக பெண் எம்.பி.க்களைத் தேர்வு செய்ய வேண்டியது ``அவசியமான விஷயம்'' என்றும் கொல்கத்தா நகர கல்லூரியில் பொருளாதாரத் துறை பேராசிரியராக இருக்கும் சஸ்வதி கோஷ் தெரிவித்தார்.

``சட்டம் உருவாக்கும் அமைப்புகளில் அதிக பெண்கள் இருக்க வேண்டியது முக்கியம். ஏனென்றால் குறிப்பிட்ட எண்ணிக்கையை தாண்டியதும் அது கணிசமாகிவிடும் என்றும், அது மாற்றத்தை உருவாக்கும் என்றும் நான் கருதுகிறேன். பொதுவில் பேசப்படும் விஷயங்களின் தரத்தை மாற்றுவதற்கு 33 சதவீதம் என்பது முக்கியமான ஒரு எண்ணாக இருக்குமா என்று எனக்குத் தெரியவில்லை. அநேகமாக 25 சதவீதம் என்பது மாற்றத்தை ஏற்படுத்துவிடும் என்று தோன்றுகிறது'' என்கிறார் அவர்.

இருந்தபோதிலும், மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பொருத்தமான நபர்களா, பிரபலமானவர்களால் இருக்க முடியுமா என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

``வெற்றிக்குரிய வேட்பாளர்களாக'' நடிகர்களும், பிரபலமானவர்களும் கருதப்படுகிறார்கள். அதனால் தான் குறிப்பிட்ட அளவை எட்டுவதற்கு பொருத்தமானவர்களாக இல்லாவிட்டாலும் அனைத்துக் கட்சிகளும் அவர்களைத் தேர்வு செய்கின்றன என்று பேராசிரியர் கோஷ் கூறுகிறார்.

ஆனால், ``அதிகம் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் முன்மாதிரியான வலிமையான தலைவர்'' என்று மம்தா பானர்ஜியை ஏராளமான பெண்கள் கருதுகின்றனர் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

அதுதான் இந்தியாவின் இப்போதைய அவசியமான தேவை என்று இந்தியர்கள் பலரும் நினைக்கின்றனர்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றப் போவதாக பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. முந்தைய தேர்தல்களிலும் இந்த வாக்குறுதியை அளித்து, அதுபற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டாலும் ஆளும் பாரதீய ஜனதா கட்சியும் இதைக் கூறியுள்ளது.

பெண்களுக்கு 40.5 சதவீத வாய்ப்பு அளித்திருப்பதன் மூலம், அதிக பெண்களை தேர்வு செய்வதற்கு செயற்கையான இடஒதுக்கீடு அளிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை என்று மம்தா பானர்ஜி நிரூபித்திருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :