நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக சொன்னாரா ராகுல் காந்தி? #BBCFactCheck

  • உண்மை பரிசோதிக்கும் குழு,
  • பிபிசி
ராகுல் காந்தி

பட மூலாதாரம், Youtube/Rahul Gandhi

படக்குறிப்பு,

ராகுல் காந்தி

நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக ராகுல் காந்தி பேசுவதை போன்ற காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

வைரலாக பரப்பப்பட்டு வரும் அந்த காணொளியில், "இங்குள்ள விவசாய நிலங்களில் உங்களால் சம்பாதிக்க முடியாது. நிலவை பாருங்கள், அங்கு நீங்கள் விவசாயம் செய்வதற்கான நிலத்தை அளிக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை பயிரிடுவீர்கள். நான் அங்கு இயந்திரம் ஒன்றை வைத்து, அதன் மூலம் உருளை கிழங்கை குஜராத்திற்கு கொண்டு வருவேன்" என்று பேசுவது போன்றுள்ளது.

"தயவுசெய்து யாராவது இவரை நிறுத்துங்கள். விவசாய நிலத்தை நிலவில் ஏற்படுத்தி தருவேனென்று அவர் கூறுகிறார்" என்ற விளக்கத்தோடு, 'டீம் மோதி 2019" மற்றும் "நமோ அகைன்" போன்ற பல்வேறு வலதுசாரி ஃபேஸ்புக் குழுக்களிலும், ட்விட்டரிலும் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

24 நொடிகள் நீடிக்கும் அந்த காணொளியில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விவசாயம் செய்வதற்குரிய நிலம் நிலவில் கொடுக்கப்படும் என்று விவசாயிகளுக்கு வாக்குறுதி அளிக்கிறார்.

இதுதொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட பிபிசி, அந்த காணொளியில் ராகுல் காந்தி பேசுவது திரிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தது.

வைரலாகி வரும் காணொளி உண்மையிலேயே ராகுல் காந்தி பேசியதுதான். ஆனால், அவரது நீண்ட உரையின் ஒரு பகுதி மட்டும் வெட்டப்பட்டு தவறான தகவலை பரப்பும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

முழு காணொளியில் என்ன உள்ளது?

2017ஆம் ஆண்டு குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநிலத்தில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அதன் ஒரு பகுதியாக குஜராத்திலுள்ள பட்டான் என்னுமிடத்தில் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து இந்த குறிப்பிட்ட 24 நொடிகள் மட்டும் வெட்டப்பட்டு வைரலாக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் உண்மையான கூற்றை தெரிந்துகொள்வதற்காக அந்த பரப்புரையின் முழு காணொளியை பார்த்தபோது, "நான் போலியான வாக்குறுதிகளை கொடுக்கமாட்டேன். 'உங்களால் இங்கு விவசாயம் செய்து பணம் சம்பாதிக்க முடியாது. நிலவை பாருங்கள், நான் அங்கு உங்களுக்கு விவசாய நிலம் கொடுக்கிறேன். எதிர்காலத்தில் நீங்கள் அங்கு உருளை கிழங்குகளை விளைவிக்கலாம். நிலவில் ஒரு இயந்திரத்தை வைத்து அங்கு விளையும் உருளை கிழங்குகளை குஜராத்தில் இறக்குமதி செய்வேன்' என்று மோதி கூறுவதை போன்று என்னால் வாக்குறுதிகளை கொடுக்க முடியாது. நான் உண்மையை மட்டுமே கூறுவேன்" என்று பிரதமர் நரேந்திர மோதியை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார்.

2017ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி பதிவேற்றிய இந்த முழு காணொளி ராகுல் காந்தியின் யூடியூப் பக்கத்தில் உள்ளது.

தங்கமாக மாறும் உருளை கிழங்கு

இதே கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் மற்றொரு பகுதியும் சில ஆண்டுகளுக்கு முன்பு திரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

நரேந்திர மோதியின் வாக்குறுதியை நம்ப கூடாது என்பதை வலியுறுத்தி பேசிய ராகுல் காந்தியின் உரையை மையமாக கொண்டு அவரை கேலி செய்து சமூக ஊடகங்களில் மீம்கள் போடப்பட்டன.

குஜராத்தின் பட்டான் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி ஆற்றிய உரையின் மொத்தமுள்ள 17 நிமிடங்கள் 50 நொடிகள் கொண்ட காணொளியிலிருந்து இந்த பகுதியும் எடுக்கப்பட்டது என்பது பிறகு தெரியவந்தது.

நிலவில் விவசாயிகளுக்கு நிலம் கொடுப்பதாக சொன்னாரா ராகுல் காந்தி?

பட மூலாதாரம், Facebook

"இயந்திரத்தின் ஒரு பக்கத்தில் உருளை கிழங்கை போட்டால், அதன் மற்றொரு பக்கத்திலிருந்து தங்கமாக வெளிவரும் என்று அவர் கூறுகிறார். நீங்கள் நிறைய பணத்தை சம்பாதித்தாலும் அதை வைத்து என்ன செய்வதென்று உங்களுக்கு தெரியாது. இதெல்லாம் என்னுடைய வார்த்தைகளல்ல; பிரதமர் நரேந்திர மோதி கூறியது" என்ற பேசும் ராகுல் காந்தியின் உரை, திரிக்கப்பட்டு வைரலாக்கப்பட்டது.

அதே வேளையில், மோதி கூறியதாக ராகுல் காந்தி குறிப்பிடும் விடயங்கள் சார்ந்த தகவல்களை கொண்ட செய்திகளை கண்டறிய இயலவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :